திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (09:33 IST)

காங்கிரஸை அழித்தொழிக்க நினைக்கிறதா பாஜக? – தொடரும் கைது நடவடிக்கை! அடுத்து யார்?

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொள்வது காங்கிரஸை மொத்தமாக அழித்தொழிக்க பாஜக செய்யும் திட்டமோ என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியமைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான இந்த கைது நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. காஷ்மீர் விவகாரம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை மறைக்க பாஜக செய்யும் கண் துடைப்பு நடவடிக்கைகள்தான் இந்த கைது நடவடிக்கைகள் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்ப்ரம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸார் பலர் ஊழல் வழக்கு விவகாரங்களில் கைதாவதால் காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்று மக்களின் மனதில் பதிவு செய்யவே இப்படி பாஜக அரசு நடந்து கொள்கிறது என காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் கர்நாடகாவில் காங்கிரஸ், குமாரசாமி கூட்டணி கலைந்து பாஜகவின் எடியூரப்பா ஆட்சி அமைத்துள்ள நிலையில், மீண்டும் காங்கிரஸ் கூட்டணியை பலப்படுத்த டி.கே.சிவக்குமார் முயற்சித்து வருவதால் இந்த அதிரடி கைது நடவடிக்கை செய்யப்பட்டதாக அரசல் புரசலாக பேச்சு அடிபடுகிறது.

அதேசமயம் மற்றொரு பக்கம் காங்கிரஸ் முக்கிய தலைவர்களின் ஊழல் விவரங்களை தேடி எடுத்துக் கொண்டிருக்கிறதாம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. அந்த வகையில் அடுத்ததாக கேரளா முன்னாள் எம்.பியும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இவரது மனைவியும், பிரபல தொழில் அதிபருமான சுனந்தா புஷ்கர் கடந்த 2014ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த கொலை வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதால் அதை வைத்து சசி தரூருக்கு அடுத்த செக் வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சசி தரூர் மட்டுமல்ல காங்கிரஸில் ஒவ்வொரு பிரமுகரும் எந்தெந்த வழக்கில் சிக்கியிருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்க இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.