பாகிஸ்தான் ஜிந்தாபாத்; மேடையில் முழங்கிய மாணவி.. போலீஸில் கைது
பெங்களூரில் பாகிஸ்தான் வாழ்க என்று மேடையில் முழங்கிய மாணவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று சிஏஏவுக்கு எதிராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உட்பட் சில அமைப்புகள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போராட்டத்திற்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதின் ஓவைசி கலந்துக்கொண்டார்.
அதில் போராட்டத்திற்கு வந்திருந்த ஒரு மாணவியை மேடையில் அழைத்து சிஏஏவுக்கு எதிராக பேசச் சொன்னார்கள். இதனை தொடர்ந்து மேடைக்கு ஏறிய கல்லூரி மாணவி ஒருவர் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் (பாகிஸ்தான் வாழ்க) என கோஷமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓவைசி உள்ளிட்டோர் மாணவியின் மைக்கை பிடுங்க முயன்றனர். அவர் மைக்கை கொடுக்க மறுத்து விட்டார். ஆனால் அதன் பின் இந்தியாவிற்கு ஆதரவாக கோஷமிட்டார். எனினும் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கோஷமிட்டதால் போலீஸார் அவரை அழைத்து சென்றனர்.
பின்பு ஓவைசி, அங்கிருந்தவர்களிடம் மைக்கில், “சிஏஏவுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை சிலர் திசை திருப்ப முயல்கின்றனர். நாம் இந்தியர்கள், நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவது தவறானது” என தெளிவு படுத்தினார்.
பின்பு பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட மாணவியை விசாரித்ததில் அம்மாணவி, கர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவருடைய பெயர் அமுல்யா லியோனா என்பதும், பி.ஏ. படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. அவர் மீது போலீஸார் தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.