1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (13:32 IST)

ஆந்திர பிரதேசத்தில் கத்திரிக்காய் மூலிகை லேகியத்துக்கு அனுமதி

கொரோனா நோயாளிகளுக்காக தயாரித்த கத்திரிக்காய் மூலிகை லேகியத்தை பயன்படுத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரின் கிருஷ்ணபட்டிண் கிராமத்தைச் சேர்ந்த போனஜி அனந்தய்யா என்வர் கொரோனா நோயாளிகளுக்காக தயாரித்த கத்திரிக்காய் மூலிகை லேகியத்தை பயன்படுத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 
அதே சமயம், அவர் தயாரித்த லேகியத்தை மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அவர் குறிப்பிட்ட ஒரு வகை கத்திரிக்காய் கூழ் சேர்த்து தயாரித்த கண் சொட்டு மருந்தை நோயாளிகளுக்கு வழங்க அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
 
முன்னதாக, அனந்தய்யாவின் தயாரிப்புகளை அரசு நியமித்த மருத்துவ குழு ஆய்வு செய்தது. பிறகு இந்திய ஆயுஷ் அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
 
அதில் அனந்தய்யாவின் மருந்தில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றும் அவை முறையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வழங்கப்பட்டது.
 
அதன் அடிப்படையில் கண்ணில் விடப்படும் சொட்டு மருந்து நீங்கலாக கத்திரிக்காய் லேகியத்தை மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
 
நெல்லூரில் அனந்தய்யா தயாரிக்கும் கத்திரிக்காய் மருந்துகள் ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்கள் எழுந்துள்ளதையடுத்து அவரது தயாரிப்புகளை நெறிமுறைப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.