1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 அக்டோபர் 2014 (12:32 IST)

ஆதார் அட்டை விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

ஆதார் அட்டை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது, இந்த அட்டைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த ஆதார் அடையாள அட்டை விவகாரத்தில் மக்கள் சமர்ப்பிக்கும் பல்வேறு ஆவணங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.
 
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
ஆதார் அட்டை பின்தங்கிய மக்கள், வங்கி வசதி உள்ளிட்ட உரிய சேவைகளைப் பெற உதவியாக இருக்கும். ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒருவர் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும். ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்ற ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி வாடிக்கையாளரை அறிந்து கொள்ள இந்த அட்டை உதவிகரமாக உள்ளது.
 
மேலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி ஆன்-லைனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
கிராமப்புற மக்களுக்கான திட்டங்களையும், வசதிகளையும் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு இந்த அட்டையானது அரசுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படும்.
 
வேறு நாடுகளுக்கு குடிபெயர்வோர் இந்த அட்டையை உலகளாவிய அடையாள அட்டையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
மக்கள்தொகை, தனிப்பட்டவரின் ‘பயோ மெட்ரிக்' தகவல்களின் அடிப்படையில் ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதால், மோசடி, போலி செயல்பாட்டு அச்சுறுத்தல்களை இது நீக்குகிறது.
 
ஆதார் அட்டையை வைத்திருப்போருக்கு அது, சர்வதேச அடையாளத்தை வழங்குகிறது. இந்த அட்டையானது எந்த நேரமும், எங்கேயும், எப்படியும், பயனாளிகளின் அங்கீகாரத்தை எளிதாக்கும்.'' இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.