வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (22:23 IST)

கேரளாவை அடுத்து புதுவைக்கும் பரவிய நிபா வைரஸ்: சுதாரிக்குமா தமிழகம்?

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் அம்மாநில மக்களை அச்சுறுத்தி வருகிறது. கேரள அரசின் சுகாதாரத்துறை நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க தகுந்த நடவடிக்கையும் எடுத்து வருகிறது. குறிப்பாக அணில் மற்றும் வவ்வால் கடித்த பழங்களை மக்கள் உண்ணக்கூடாது என பொதுமக்களை கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது
 
மரணத்தை ஏற்படுத்தும் கொடூரமான வைரஸ் நிபா என்பதால் இந்த நோயை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் மத்திய அரசும் கேரள மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு நிபா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் என்பதும் புதுவைக்கு சுற்றுலா வந்தபோது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை நிபா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இதனையடுத்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா, தற்போது புதுவைக்கும் வந்துவிட்டதால் இடையே உள்ள தமிழகம் சுதாரிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், கேரளாவை சேர்ந்த நபர் நிபா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரியில் அனுமதி என்ற செய்தி தவறானது என்றும் புதுவை  சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தெரிவித்துள்ளார்.