கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!
கடந்த சில நாட்களாக குஜராத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் முக்கிய சாலை ஒன்றில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட புதிய சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளம் ஏற்பட்டபோது போக்குவரத்து அந்த சாலையில் குறைவாக இருந்ததால் எந்தவித உயிர் சேதமும் விபத்தும் ஏற்படவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தரமற்ற சாலை போடப்பட்டதால் தான் இவ்வாறு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் குஜராத் மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சாலை நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva