வயநாடு நிலச்சரிவு.. 4 நாட்கள் கழித்து பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை உயிருடன் மீட்பு..!
வயநாடு அருகே உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்து உள்ள நிலையில் மண்ணில் அடியில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்திய ராணுவம் மீட்பு பணியில் களமிறங்கியதை அடுத்து சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நான்கு நாள் கழித்து இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு குழந்தை பிறந்து 40 நாட்களே ஆனது என்பது மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்படுகிறது.
வயநாடு பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மிகுந்த சிரமத்துடன் அந்த இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களின் ஒருவர் ஆறு வயது என்றும் இன்னொருவர் 40 நாளான பெண் குழந்தை என்று கூறப்படுகிறது.
இவர்களது வீட்டில் உள்ள மற்றவர்கள் நிலச்சரிவால் அடித்து செல்லப்பட்ட நிலையில் 6 வயது சிறுவன் தன் கையில் தனது சகோதரியை வைத்து கொண்டு வீட்டின் மேல் பகுதிக்கு சென்றுள்ளதாகவும் வீடு புரட்டி போட்டபோது சிறுவன் நிலச்சரிவில் அடியில் சிக்கிக் கொண்டதாகவும் கையில் இருந்த குழந்தையை மட்டும் பிடித்துக் கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்ததாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டாலும் அந்த குழந்தைகளின் பெற்றோர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
Edited by Mahendran