கல்கத்தாவில் பழம்பெருமை வாய்ந்த ட்ராம் வண்டி சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது மக்களையும், சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ட்ராம் வண்டி சேவைகள் அமல்படுத்தப்பட்டன. முதன்முதலாக 1873ம் ஆண்டில் கல்கத்தாவில் குதிரை வண்டிகளை வைத்து இழுத்து செல்லும் ட்ராம்கள் அறிமுகமானது. அதை தொடர்ந்து நீராவி இஞ்சின் மூலம் இயக்கப்பட்ட ட்ராம்கள், 1900களுக்கு பிறகு மின்சாரத்தில் இயங்கும்படி அமைக்கப்பட்டது.
கொல்கத்தாவில் அறிமுகமான ட்ராம் வண்டிகள் பின்னர் மும்பை, சென்னை, நாசிக், பாட்னா என பல முக்கிய நகரங்களில் இயங்கி வந்தன. பின்னர் காலமாற்றம், போக்குவரத்து சாதன வளர்ச்சிகளால் பல நகரங்களிலும் ட்ராம் சேவைகள் முடிவுக்கு வந்தன.
ஆனால் கொல்கத்தாவில் மட்டும் பழமை மாறாமல் ட்ராம் சேவைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. கொல்கத்தா வரும் சுற்றுலா பயணிகளும் ட்ராம் வண்டிகளில் பயணிப்பதை பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் ட்ராம் வண்டிகளால் வாடிக்கையான போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படுவதால் ட்ராம் சேவைகளை நிறுத்த உள்ளதாக மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, எஸ்பிளனேட் - மைதான் இடையே இயங்கும் ட்ராமை தவிர மற்ற அனைத்து ட்ராம் சேவைகளையும் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 150 வருட பழமை வாய்ந்த ட்ராம் சேவை முடிவுக்கு வர உள்ளது அப்பகுதி மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K