வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2019 (09:30 IST)

13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா! கவிழ்கிறது குமாரசாமி அரசு?

கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. ஆனால் வெறும் 38 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியின் உதவியால் ஆட்சி அமைத்தது
 
மக்களின் விருப்பத்திற்கு எதிராக அமைந்த இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ஆட்சி கவிழும் நேரம் வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது
 
கர்நாடக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக 13 காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று சபாநாயகர் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். மேலும் அதன் நகலை ஆளுநரிடம் அளித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். இதனால் ஆளுனர் சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் குமாரசாமியிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது காங்கிரஸ் கூட்டணியின் பலம் 118 ஆகவும், பா.ஜ.க.வுக்கு 105 உறுப்பினர்கள் ஆதரவும் உள்ளது. ஆனால் 13 பேரின் ராஜினாமாவை ஆளுனர் ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியின் பலம் 105ஆக குறைந்துவிடும். பா.ஜ.க.வின் பலமும் அதே எண்ணிக்கையில் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ யாருக்க்கு ஆதரவு தருகிறாரோ அவரே ஆட்சி அமைக்க முடியும்
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா, பா.ஜ.க. ஆட்சி அமைக்க தயாராக உள்ளது. பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் எடியூரப்பா தான் முதலமைச்சர் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள முதல்வர் குமாரசாமி நாளை பெங்களூர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 12 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், அன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் பா.ஜ.க. வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது