வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (19:51 IST)

சதுர அடி 3500 - சினிமா விமர்சனம்

இதுபோல ஒரு திகில் படத்தைப் பார்த்து வெகு நாட்களாகிறது. முதல் காட்சியில் துவங்கி கடைசிக் காட்சி வரைக்கும் பயங்கரம்தான். தாங்க முடியாத படம்!!


 

 
சென்னையில் மையப் பகுதியில் கட்டப்பட்டுவரும் ஒரு மிகப் பெரிய அபார்ட்மெண்டில், அதைக் கட்டிவரும் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர் தூக்கில் தொங்குகிறார். அதை விசாரிக்க ஆரம்பிக்கிறது காவல்துறை. அதே நேரத்தில் அவரது ஆவி ஆங்காங்கு தென்படுகிறது. உண்மையில் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் துணை ஆய்வாளர் கருணா.
 
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக பேய் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதனால், கதை, திரைக்கதை, படம் பார்க்க வருபவர்கள் என எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை.
 
படத்தின் துவக்கத்தில் காவல்துறை அதிகாரியாக இரண்டு காட்சிகளில் வரும் ரகுமான், அதற்குப் பிறகு மாயமாகிவிடுகிறார். படத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக மேப்பில் நாகர்கோவில் என்று இருக்கிறது; படம் சென்னையில் நடக்கிறது. இந்த ஒரே ஒரு கொலை வழக்கால் படம் முழுக்க பதற்றத்திலேயே இருக்கிறார் காவல்துறை அதிகாரி.


 

 
கொலை வழக்கை துப்பறியும் எந்த ஒரு காட்சியிலும் புத்திசாலித்தனமோ வேகமோ இல்லை. திடீரென ஒரு கூலிப்படையைச் சேர்ந்தவர் வந்து, "சார், நான்தான் அந்தக் கொலையைச் செய்தேன்" என்கிறார். "அப்படியா, சரி நீ வீட்டுக்குப் போ, நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போகிறார் நாயகன். திடீரென தாடியோடு வரும் போலீஸ் அதிகாரி, அடுத்த காட்சியில் தாடியில்லாமல் வருகிறார். தலையைச் சுற்றுகிறது.
 
எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா ஜோடியும் இனியாவும்தான் ஏதோ நடிக்கிறார்கள். மற்ற எல்லோருமே சொதப்பியிருக்கிறார்கள். தொடர்பு இல்லாமல் குழப்பும் பாடல்கள் வேறு.
 
மிகக் குறைந்த செலவில் எடுக்கப்படும் குறும்படங்களே, அற்புதமாக உருவாக்கப்படும் நிலையில், இப்படி ஒரு படத்தை எடுத்து வெளியிட பெரும் துணிச்சல் தேவை. 2 மணி நேரத்தில் படம் முடிகிறது என்பதுதான் ஒரே ஆறுதல்.
 
நடிகர்கள் நிகில் மோகன், இனியா, பிரதாப் போத்தன், ரகுமான், எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, மனோபாலா
 
இசை கணேஷ் ராகவேந்திரா
 
இயக்கம் ஸ்டீபன்