திங்கள், 18 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (16:44 IST)

அம்மா கணக்கு - திரை விமர்சனம்

அமலாபால், யுவஸ்ரீ, சமுத்திரகணி நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் இயக்கியிருக்கும் படம் அம்மா கணக்கு. இதில் நடிகை அமலாபால் 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.


 
 
இந்தியில் வெற்றி பெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் அஸ்வினி ஐயர். இந்தியிலும் இந்த படத்தை இவர் தான் இயக்கினார்.
 
குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் போதே கணவனை இழந்த அமலாபால், அந்த குழந்தையை எப்படி சமூகத்தில் பெரிய ஆளாக உருவாக்கு முயற்சிக்கிறார் என்பதே கதை. ரேவதியின் வீட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக வரும் அமலாபால், மீதி நேரங்களில் மீன் கடை, மாவு கடை என வேலை செய்து தனது மகளை படிக்க வைத்தும் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்.
 
தன்னுடைய அம்மா வீட்டு வேலை செய்கிறார், தானும் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக போவேன் என படிப்பில் அக்கறையில்லாமல் அலட்சியமாக இருந்து வருகிறார் மகள். மகள் படிக்க வேண்டும் என கஷ்டப்படும் அம்மா, படிக்காமல் மக்கு பெண்ணாக இருக்கும் மகள் இவர்களுக்கு இடையேயான கதையில் மகள் படிக்க ஒரு துணிச்சலான முடிவை எடுக்கும் அமலாபால் அதில் வெற்றிபெறுகிறாரா என்பதே படத்தின் மீதி கதை.
 
இந்தியில் வெற்றி பெற்ற படத்தை தமிழில் ரீமேக் செய்த அஸ்வினி நாயர் தான் சொல்ல வந்த கருத்தை சரியாக சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் காட்சியமைப்பில் சிறது சறுக்கல்கள் உள்ளன. 13 வயது பெண்ணின் அம்மாவாக வரும் அமலாபால் நடிப்பில் கொஞ்சம் கம்மி தான். உடையில் ஒரு அம்மாவை போல் கட்சியை உருவாக்கினாலும் அவருடைய நடிப்பு அம்மாக்களுக்கான எதார்த்தமான நடிப்பாக இல்லை.
 
அமலாபாலின் மகளாக வரும் யுவஸ்ரீ-க்கு இந்த படம் முதல் படமாக இருந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மாவுக்கு அடங்க மறுக்கும் பெண்ணாகவும், வயதுக்கு ஏற்ற குணாதிசியங்களையும் கொண்டு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் அவர்.
 
ஆசிரியராக வரும் சமுத்திரகணி தனது வழக்கமான நடிப்பில் இருந்து கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் திரையில் வரும் ரேவதி அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
இளையராஜாவின் இசை படத்துக்கு பலமாக இருந்து கதையை நகர்த்தி செல்கிறது. வீட்டு வேலை செய்து விடா முயற்சியுடன் தனது மகளை படிக்க வைக்க கணவனை இழந்த ஒரு அம்மா எடுக்கும் துணிச்சலான முடிவை அருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் அம்மா கணக்கு “மகளுக்காக”.

 
ரேட்டிங்: 3/5