வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (17:03 IST)

தேர்தல் முடிவுகள் 2019: 'எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை இன்மையால் ஏற்பட்ட தோல்வி' - டிகேஎஸ் இளங்கோவன்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் திமுக மூத்த தலைவர்களின் ஒருவரான டிகேஎஸ். இளங்கோவன் பிபிசிக்கு அளித்த ஃபேஸ்புக் நேரலையின் முக்கிய பகுதிகள் இங்கே.
தமிழகத்தில் திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றிபெற்றாலும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளதே?
 
தமிழகத்தில் இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில் நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக வெற்றியடைந்துள்ளது. அகில இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட தோல்வியோ என்ற ஐயம் இப்போது எழுகிறது. திமுகவை பொறுத்தவரை தமிழக மக்கள் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது.
 
இடைத்தேர்தல் முடிவுகள் தற்போதைய ஆளும் கட்சியை வீழ்த்தும் அளவிற்கு இல்லையே? இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதா?
 
இடைத்தேர்தல் நடந்து முடிந்த 22 தொகுதிகளில் 21 தொகுதிகள் ஏற்கனவே அதிமுக வெற்றிபெற்ற தொகுதிகள். ஒரே ஒரு தொகுதி மட்டும் தலைவர் கலைஞர் அவர்கள் வெற்றிபெற்ற தொகுதி. கடந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்ற 21 தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிப்பதால், இதை அதிமுகவின் வீழ்ச்சியாகவே பார்க்க முடியும். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். குறைந்த வேறுபாட்டில் சில தொகுதிகளின் முடிவுகள் இருக்கின்றன. இந்த ஆட்சிக்கு எதிராக தமிழக மக்களிடையே கோபம் இருக்கிறது என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
 
நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுள்ள வெற்றி ஏன் இடைத்தேர்தலில் எதிரொலிக்கவில்லை?
 
தொடர்ச்சியாக அதிமுக வசமிருந்த பல தொகுதிகளை தற்போது திமுக கைப்பற்றி வருகிறது. குறிப்பாக சூலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தற்போது திமுக முன்னிலை வகித்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்த வெற்றியாக இது இல்லையென்றாலும் கூட மக்கள் திமுகவை பெருமளவில் ஏற்றுக்கொண்டார்கள் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.
 
2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை திமுக பெற்றிருந்தாலும், மத்தியில் காங்கிரஸ் அடைந்துள்ள தோல்வி பின்னடைவாக அமையாதா?
 
அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றிருந்தால் உறுதியாக மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருக்கும். ஆனால், திமுக தமிழகத்தின் மீதுதான் கவனம் செலுத்தியது. காங்கிரசின் தோல்வி என்பது பின்னடைவுதான். தன்னை வலுபடுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்.
 
இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திய மேற்கு வங்கத்தில் கூட பாஜக தனது கணக்கை தொடங்கியுள்ளது. இதை திமுக எவ்வாறு பார்க்கிறது?
 
மதவாத பிரச்சனைகளை பாஜக முன்னெடுத்துச் செல்வதால், அதனால் பாதிப்புக்குள்ளான மக்கள் அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது இயல்பு. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், மக்களின் முன்னேற்றம் என பல்வேறு தளங்களில் இந்த ஆட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
 
இந்த வெற்றி மீண்டும் ஒரு பெரிய பொருளாதார பாதிப்பை இந்தியாவிற்கு ஏற்படுத்தும். இந்திய இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுவார்கள். மதப் பிரச்சனைகள் மற்றும் சாதிப் பிரச்சனைகளை நோக்கி இந்த நாட்டை கொண்டு செல்லும் நோக்கில் பாஜக செயல்படுகிறது. அதன் பலனை மக்கள் உணர்வார்கள்.