திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (15:22 IST)

மக்களை கவருமா திமுக தேர்தல் அறிக்கை.? மார்ச் 20-ல் வெளியாக வாய்ப்பு..?

DMK Arrikai
திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மக்களவை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வந்தது.
 
இதில் தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
 
இதில் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது. தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டிருந்தது. 

அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்களும் பரிந்துரையாக வந்திருந்தது. 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தனர். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் பிரச்சனை என்.எல்.சி. விரிவாக்கம், வங்கி கடன்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளன.
 
பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களும் இதில் இடம் பெறுகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்த முறை கதாநாயகியாக கூட இருக்கலாம் என்று கனிமொழி ஏற்கனவே கூறி இருந்தார்.

 
இந்நிலையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 20-ஆம் தேதி திமுக தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.