செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (21:25 IST)

பிரம்மாண்டமாக நடந்த "ரோடு ஷோ"..! 'மோடி மோடி' என முழக்கம்.! குலுங்கிய கோவை...!!

PM Modi
கோவையில் பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்ற நிலையில், சாலையின் இரு புறமும் கூடியிருந்த மக்கள், மலர் தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
 
மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கோவையில் பாஜக சார்பில் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் பங்கேற்பதற்காக கர்நாடகாவின் சிவமொக்காவில் இருந்து விமான மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடி கோவை வந்து அடைந்தார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடி, கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோயில் சிக்னல் பகுதியில் இருந்து வாகனப் பேரணியை தொடங்கினார்.
 
அங்கிருந்து கங்கா மருத்துவமனை, வடகோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், சிந்தாமணி ஆகிய பகுதிகளின் வழியாக சுமார் 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி வாகன பேரணியாக சென்றார். திறந்த வாகனத்தில் சென்ற பிரதமர் நரேந்திர மோடியுடன் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது சாலையின் இரு புறமும் கூடியிருந்த பாஜக தொண்டர்களையும் பொது மக்களையும் பார்த்து, பிரதமர் மோடி கையை அசைத்தபடியே சென்றார். அங்கு இருந்தவர்கள் "மோடி மோடி" என உற்சாகமாக முழக்கமிட்டனர். மேலும் பாஜகவினர் 'பாரத் மாதா கி ஜே' என முழக்கமிட்டும், மலர் தூவியம் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். 

கட்டிடங்கள் மீது நின்றும் வரவேற்பு அளித்த மக்களை நோக்கி பிரதமர் மோடி  கைகூப்பி வணங்கினார். பிரதமர் மோடிக்கு பாஜக கூட்டணி கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக பிரதமரின் வருகையை ஒட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் கோவை நகரமே விழாக்கோலம் பூண்டது.
 
மேலும் வாகன பேரணி தொடங்கிய இடத்தில் இருந்து பேரணி முடியும் இடம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையொட்டி 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

 
பிரதமர் மோடி இன்றிரவு கோவை சர்க்யூட் ஹவுஸில் தங்குகிறார். பின்னர் நாளை காலை கேரளா புறப்பட்டுச் செல்கிறார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமரின் கோவை வருகை பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.