1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன்
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (16:20 IST)

ஓமான் மன்னர் சுல்தான் காஃபூஸ் - தலையெழுத்தை மாற்றிய தலைவர்

சுல்தான் காஃபூஸ் பின் செய்த் (Qaboos bin Said al Said) என்ற ஓமானின் அரசர் உடல்நலமின்றி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தற்சமயம் ஜெர்மனியில் புற்றுநோய்க்கு மருத்துவம் பார்த்து வருவதாகத் தெரிகிறது.
 
ஓமான் சுல்தானின் நலன் விரும்பும் இந்தியர்களின் முயற்சியாக, சுல்தான் காபூஸ் அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டி, பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேகர் ஸ்வாமி என்ற ஜோதிடர் தலைமையில் 22 மந்திர விற்பன்னர்கள் குழு ஓமானில் அரச விருந்தினர்களாகத் தங்கி யாகம் நடத்துகின்றனர்.
 
சுல்தான் இஸ்லாமியராய் இருக்கும்போது, இது எப்படி எனக் கேள்வி எழலாம். இந்த யாகம் சுல்தானின் வேண்டுகோளின்படி நடத்தப்படும் யாகம் அல்ல. மாறாக, அவரது நலம்விரும்பிகளால் நடத்தப்படுகிறது. மத நல்லிணக்கத்தைக் கொள்கையாகக் கொண்ட சுல்தான் காபூஸ் அவர்களின் குடும்பமோ, அரசாங்கமோ இதை அனுமதித்தது அதிசயமல்ல. பெருவாரியான இந்தியர்கள் இந்த யாகத்தில் கலந்துகொண்டு அவர் விரைவில் நலம் பெறப் பிரார்த்திப்பது சுல்தான் மக்களிடமும், வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி இருக்கும் மக்களிடமும் அவர் பெற்றிருக்கும் நன்மதிப்பையே காட்டுகிறது. 
 
2002இல் எனது முதல் வெளிநாட்டு வேலையாக மஸ்கட்டில் சென்று இறங்கினேன். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் அங்கு வேலை செய்தேன்.
 
ஒரு மக்கள் நலன் விரும்பும் அரசன் எப்படி இருப்பான் என்பதற்கு இந்தச் சுல்தானை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். கொஞ்சம்கூட அரசன் என்ற தோரணையோ, மமதையோ இல்லாமல் மக்களுடன் கலந்து இருந்த ஒருவர்.
 
நான் இருந்த காலத்தில் அவர் செய்ததில் முக்கியமானது ஓமனைசேஷன் என்ற, ஓமானிகளுக்கு வேலைகளில் முன்னுரிமை அளிப்பது. துக்ளக் தர்பார் போல இல்லாமல் படிப்படியாக ஓமானிகளை ”வேலை செய்ய”ப் பழக்கினார். அதுவரை அரசு தரும் இலவசங்களை மட்டும் நம்பி இருந்த மக்களை வேலை வாய்ப்பைத் தருகிறேன், பிழைத்துக்கொள் என்ற கொள்கையை ஆரம்பித்து, மானியங்களைப் படிப்படியாகக் குறைத்தார்.

 
ஓமானிகளுக்குத் தெரிந்த வேலைகளில் ஒன்று வண்டி ஓட்டுதல். எனவே முதலில் அங்கிருந்து ஆரம்பித்தார். இனிமேல் விசா காலாவதியாகிப் போகும் ஓட்டுநர்களின் இடங்கள் ஓமானிகளுக்கு மட்டுமே, புதிய ஓட்டுநர்கள் வேலையும் ஓமானிகளுக்கே எனச் சட்டம் கொண்டுவந்தார். ஆயிரக்கணக்கான ஓமானிகளுக்கு ஓர் ஆண்டிற்குள் வேலை கிடைத்தது. அதன் பின்னர் பெட்டிக்கடை வைத்தல், பக்காலா என்றழைக்கப்படும் மினி சூப்பர் மார்க்கெட்டுகள் வைக்கும் உரிமையையும் ஓமானிகளுக்கே என அறிவித்தார். இதைச் செய்யும்போது அவர் நினைத்திருந்தால் வெளிநாட்டவருக்கு நோட்டிஸ் பீரியட் சம்பளம் கொடுத்துவிட்டு ஊருக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல் விசா காலாவதியாகும் வரை வெளிநாட்டவர்கள் இருந்து வேலை செய்துவிட்டுச் செல்லலாம் என்று அறிவித்தார்.
 
மேலும் தனியார்கள், ஓமானிகளை வேலை பழக அமர்த்தி, வேலையும் சொல்லிக் கொடுத்தால் மானியம் என்ற திட்டத்தை அமல்படுத்தி, வண்டி ரிப்பேர் செய்தல் முதல் எண்ணெய் துரப்பனம் வரையிலும் ஓமானிகளை நுழைத்தார். வாழைப்பழச் சோம்பேறிகளாய், இலவசங்களில் மகிழ்ச்சியாய் இருந்துகொண்டிருந்த ஓமானிகளுக்கு ”வேலை செய்தல்” என்ற இந்தக் கசப்பு மருந்தைக் கொடுக்கவே அசாத்திய நம்பிக்கை வேண்டும். சுல்தானுக்கு நம்பிக்கை இருந்தது. எண்ணெய் வளம் எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கும்? எத்தனை ஆண்டுகள் இலவசங்கள் வழங்கியே மக்களைக் காப்பாற்ற முடியும் என நினைத்ததன் விளைவே இந்த ஓமானிமயமாக்கல் அல்லது ஓமனைசேஷன்.
மேலும்

பத்திரிகை சுதந்திரம் 2002 காலக்கட்டத்தில் நன்றாகவே இருந்ததாக இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அரசர் ஓமனைசேஷன் என்ற திட்டத்தை ஆரம்பித்ததும் இந்தச் சோம்பேறி ஒமானிகளை வைத்தா நாட்டை நடத்த அரசர் விரும்புகிறார் என்றெல்லாம் மந்திரிகள் மத்தியில் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அரசர் தெளிவாய் இருந்தார். நீங்கள் (ஓமானிகள்) சொந்தக் காலில் நிற்க என்னென்ன வேண்டுமோ, அவை அத்தனையும் அரசே செய்து தரும். குடும்பம் நடத்த எவ்வளவு தேவை இருக்குமோ, அவ்வளவுக்குக் குறைந்தபட்ச சம்பளம் வழங்கும்படி தனியார் கம்பெனிகளுக்கு உத்தரவிடப்படும். ஆனால், சம்பாதித்துத்தான் பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, இலவசமாய் ஏதும் கிடைக்காது என்பதை மக்களுக்கு உணர்த்தினார். இதைத் தொடர்ச்சியாக, ராயல் டிகிரியாக (அரசாணையாக) வெளியிட்டார். 


 
அதன் பின்னர் நான் கண்ட இன்னொரு நல்ல அம்சம், ”மீட் த பீப்பிள்” என்ற திட்டம். ஆண்டுக்கு 1 மாதம் வரை ஓமான் முழுக்கச் சுற்றுப் பயணம் செய்து, கிராமங்களில் தங்கி மக்களுக்கு என்ன தேவை என்பதை நேரடியாகக் கேட்டுச் செய்து கொடுக்க ஆரம்பித்தார். ஒரு பெரும் அமைச்சர்கள் படையே உடன் செல்லும். என்னென்ன தேவை, எத்தனை நாளில் வேலை முடிக்கப்படும், என்ன செலவு, யார் பொறுப்பு என்பதெல்லாம் அங்கேயே முடிவாகும். அதன் ஆடிட்டிங் ரிப்போர்ட் அரசருக்குக் கிராம வாரியாக, அவர் இட்ட உத்தரவுகள் வாரியாக மாதாமாதம் செல்லும். ஆரம்பத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு சுற்றுப் பயணம் செய்யும்போதுகூட வேலையை முடிக்காமல் வைத்திருந்த மந்திரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
 
2002இல் ஐந்து சதவீதமாக ஆரம்பித்த ஓமனைசேஷன் ஒன்று 60 சதவீதத்தைத் தாண்டிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில் 100% அரசு வேலைகளும், 60% தனியார் வேலைகளும் உள்ளூர் மக்களுக்கே என்ற நிலையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜிசிசி எனப்படும் சுற்றியுள்ள நாடுகளின் நிலையைக் கருத்தில் கொண்டால் இது அசுர சாதனை.
 
ரூவி (Ruwi) முதல் சீப் (Seeb) வரையிலான சாலையின் (துபாய் ஹைவே) டிவைடர்கள் ஆங்காங்கே உடைந்திருக்கும், பொத்தலாய் இருக்கும். இந்தப் பொத்தல்கள் இரும்பு கிரிலை உடைத்துக்கொண்டு கார்கள் ஒரு தரப்பிலிருந்து மறுபக்கத்துக்கு பாய்ந்ததால் வந்தது. 
 
ஒரு முறை, பார்லிமெண்ட் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் இது என்ன சாலையைப் பிரிக்கும் தடுப்பு கிரிலில் இத்தனை ஓட்டைகள் என அரசர் கேட்டார். வண்டிகள் வேகமாக செல்லும்போது, கட்டுப்பாடு இழந்து சென்ற வண்டிகள் இடித்ததால் வந்தவை எனச் சொல்லப்ப்ட்டது. இதன் மூலம் இறந்தவர்கள், இந்த டிரைவர்களால் அல்லர். தவறே செய்யாத மற்றவர்கள் (அடுத்த தரப்பில் சென்றுகொண்டிருந்த வண்டிகளில் பயணித்தோர்).
 
 இறந்ததையெல்லாம் பார்த்த பின்னர்கூட உங்களுக்கு இதைச் சரி செய்யத் தோன்றாதா எனக் கேட்டு, இன்றிலிருந்து 40 நாட்களுக்குள் 1 மீட்டர் உயரத்தில் கான்க்ரீட்டில் டிவைடர்கள் வைத்தாக வேண்டும் எனச் சொல்லி, செய்தும் காண்பித்தார்கள். 40 கிலோமீட்டருக்கான டிவைடர்கள் 40 நாட்களில் போடப்பட்டது. சாலையைக் கடக்க நடை மேடைகளும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற கணக்கில் அமைக்கப்பட்டது. எல்லாம் நேரடி மேற்பார்வையில் நடந்தது. அதை அமைத்த பின்னர், சாலையை அபாயகரமாகக் கடப்போர், விசா கேன்சல் செய்து ஊருக்கு அனுப்பப்பட்டனர். 
 
மஸ்கட் நகரத்தை மிக அருமையாகத் திட்டமிட்டு உருவாக்கினார். நமது குஷ்வந்த் சிங், "இறக்கும் முன்னர் மஸ்கட்டைச் சென்று பார்" என ஒரு கட்டுரை எழுதினார். (See Muscat before you die). அந்த அளவு அழகான நகரமாகவும், மிக அருமையான விதிமுறைகள் கொண்ட, வாழ்வதற்கு மிக விரும்பும் நகரமாகவும் ஆக்கினார்.

மஸ்கட்
 
தொலைதூரக் கிராமம் தோறும் பள்ளிகள், மருத்துவமனை, காவல் நிலையம் எல்லாம் அமைத்து எல்லா ஓமானிகளுக்கும் எல்லாம் கிடைக்கும்படி செய்து கொடுத்தவர்.
 
”பெதூன்கள்” எனப்படும் நாடற்றவர்கள், ஏராளமானோர் தங்கி இருந்தனர், அவர்களுக்கும் எல்லா உதவிகளும் செய்து கொடுத்து மக்கள் அரசனாய் வாழ்ந்து வருகிறார். இந்த மலைவாழ் மக்களுக்கு உதவவென்றே ஒரு தனிப் போலிஸ் குழு செயல்பட்டது. அவர்கள் மலையில் இருந்து தீப்பந்தங்களை காண்பித்தால், ஹெலிகாப்டர் சென்று அவர்களை அழைத்து வந்து, வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்து அனுப்பி வைக்கும்.
 
இஸ்லாத்தின் கோட்பாடான “உன் மதம் உனக்கு, என மதம் எனக்கு” (தீனுக்கும் வலியத்தீன்) என்ற சமய நல்லிணக்கத்தைத் தக்கியாவுக்காகச் சொல்லாமல், உண்மையிலேயே செய்து காட்டியவர். சிவன் கோவில் ஒன்றும், கிருஷ்ணன் கோவில் ஒன்றும் கட்டிக்கொள்ள அனுமதியளித்தவர். சில தேவாலயங்களும் உண்டு. ஒரு தற்காலிக விநாயகர் ஆலயம் ஒன்றும் காலா (Ghala) என்ற இடத்தில் உண்டு,
 
ஆரம்பத்தில் வியாபாரத்திற்காக வந்து, ஓமான் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த கிம்ஜி ராம்தாஸ் என்பவருக்கு ஓமானின் குடியுரிமையையும் கொடுத்தவர். கிம்ஜி ராம்தாஸ் குடும்பத்தினரின் குடும்பத் தலைவர் ஷேக் ஆஃப் இண்டியன் கம்யூனிட்டி என அழைக்கப்படுகின்றனர்.
 
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ சங்கர் தயாள் சர்மா அவர்களின் மாணவராக இந்தச் சுல்தான், சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். இந்தியாவில் புனேயில் வந்து படித்திருக்கிறார். அவரை ஓமானுக்கு வரவழைத்து மரியாதையைக் காண்பிப்பதற்காக, சங்கர்தயாள் சர்மா அவர்களை அமரவைத்து, காரைச் சுல்தானே அரண்மனை வரை ஓட்டிச் சென்றிருக்கிறார். தனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியனுக்கு அவர் காண்பித்த மரியாதை அது.
 
இந்தியர்கள் மற்றும் ஓமானிகளின் வாணிபம், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. ஓமானின் மிகப் பெரிய வியாபாரக் குழுமமான பஹ்வான் குருப், அதன் அடைமொழிப் பெயரான ”பஹ்வான்” ஒரு இந்தியர் செய்த உதவிக்கான நன்றிக் கடனாக வைத்தது. மொத்தக் குடும்பங்களுக்கும் பஹ்வான் என்பதுதான் சர் நேம். சுஹைல் பஹ்வான், சாத் பாஹ்வான் என்ற இரு சகோதரர்களின் குடும்பங்களுக்கும் இதுதான் சர்நேம்.
 
இவ்வளவு தூரம் மக்கள் நலன் விரும்பும் அரசனாகவும், இந்தியர்கள் மற்றும் இந்தியா மீதான கரிசனமும் கொண்ட, மத நல்லிணக்கத்தை விரும்பும் சுல்தான் காஃபூஸ் பின் செய்த் பூரன உடல் நலத்துடன் மீண்டு வரவேண்டும் என்பதே எனது பிரார்த்தனையும்.