1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. தலங்கள்
Written By Sasikala

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை பற்றி தெரிந்து கொள்வோம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில்  இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில்  (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது.


 


இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
 
சிறுவாபுரியின்நுழைவாயிலில் சப்த மாதர் கோயில், நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோயில் மேற்கே பெருமாள்  கோயில் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் விஷ்ணுதுர்கை கோயில்கள் உள்ளன.வடக்கே வாயு மூலையில்  சிறுவாபுரி பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது. அருணகிரி நாதரால் போற்றி பாடப்பட்ட தலம் சிறுவாபுரி.
 
இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்ரமண்யர், ஆதி மூலவர், நவகிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் அனைத்தும்  மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை.கோவிலுனுள் உயரமான கொடிமரம் முன் காணப்படும் பச்சை மரகத மயிலின்  காட்சி கண்கொள்ளா அழகு. இது போன்ற சிறந்த வடிவமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது.
 
சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன்  இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல  கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
 
வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை  வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை!
 
தலபுராணம்: 
 
அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி  முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும்  குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை  வெல்ல முடியவில்லை.ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும்  குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கியது.
 
கோவில் நடை திறக்கும் நேரம்
 
சிறுவாபுரி கோவில் ஞாயிறு தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து இருக்கும். பிறகு  பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரை நடைதிறந்து இருக்கும். செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல்  இரவு 9 மணி வரை வழிபாடு செய்யலாம். மற்ற நாட்களில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும்,  மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தான் வழிபாடு செய்ய முடியும்.
 
மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை  வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.
 
பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும்,  பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது  நிதர்சன உண்மையாகும்.