1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (10:26 IST)

சிறந்த பலன்களை அள்ளித்தரும் சிவராத்திரி விரதம் !!

Shivratri fast 1
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.


அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார்.

இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்: திருக்கேதீச்சரப் பதிகங்கள், திருவண்ணாமலைப் பதிகங்கள்.

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது. 'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சந்நதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.