ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் வழிபாட்டு பலன்கள் !!
செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் 'செவ்வாய்' கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாகும்.
செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும்.
ஒளவையார் விரதம்: பெண்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் இருப்பார்கள். இவ்விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவார்கள்.
இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.
ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அதன்பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இறுதியாக பெண்களே விரத நிவேதனங்கள் அனைத்தையும் உண்பார்கள். இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.
குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.