கோடையில் சருமத்தை பராமரிக்க உதவும் சில பயனுள்ள குறிப்புகள் !!
சில எளிமையான சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம், கோடைக்கால சரும பாதிப்புகளான வேர்க்குரு, வேனல் கொப்புளம், முகப்பரு, தேமல், படர்தாமரை, தோல் வறட்சி, அரிப்பு, வெப்ப புண், வெயிலினால் தோல் கருமையடைதல், சின்னம்மை போன்றவற்றில் இருந்து பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
தினமும் 2 முறை குளிப்பது நல்லது. இதன் மூலம் உடலின் வியர்வை நாற்றம் நீங்குவதோடு கிருமிகளின் தொற்றும் நீக்கப்படுகிறது. குறைந்தது 2 அல்லது 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது நல்லது. இதனால் உடலின் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
தினமும் ஒரு சிறு துண்டு கற்றாழையை தோல் சீவி அதன் சதை பகுதியை நன்றாக நீரில் கழுவி பின் தோலில் தேய்ப்பதன் மூலம் தோல் வறட்சி ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
முகத்தினை அடிக்கடி நீரில் கழுவுவதன் மூலமும், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் காரமான உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் முகப்பரு வராமல் தடுக்க முடியும்.
சந்தனத்தை தண்ணீரில் கலந்து வேர்க்குருவிற்கு பூசலாம். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வியர்வையின் காரணமாக படர்தாமரை, தேமல் போன்ற தோல் நோய்கள் ஏற்படுகின்றன. எனவே பருத்தியாலான மற்றும் தளர்வான ஆடைகளை அணிந்துக்கொள்ளலாம்.
காபி, டீ போன்ற பானங்களை தவிர்த்து மோர், இளநீர், பானகம், நன்னாரி சர்பத் போன்ற பானங்களையும், வெள்ளரி, தர்பூசணி, முலாம் பழம், நுங்கு போன்ற நீர்ச்சத்துள்ள பழ வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.
சருமத்திற்கு பாதுகாப்பு தரக்கூடிய பப்பாளி, கேரட், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்றவற்றையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.