ஆயுள் காப்பீடு என்பது, காப்பீடு செய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் இறந்துபோனால் ஏற்படும் நிதிசார்ந்த இழப்புகளு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் ஆகும்.
ஏன் ஆயுள் காப்பீடு பெறவேண்டும்?
ஆயுள் காப்பீடானது, அனைத்து அபாயங்களிலிருந்து நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும் பாதுகாப்புதோடு, நமது முதலீடுகளை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பினையும் வழங்குகிறது.
ஓய்வுகாலத்துக்குப் பின்னர், குழந்தையின் எதிர்கால செலவினங்கள் அல்லது மற்ற செலவினங்களுக்கான நீண்டகால முதலீடாக கருதப்படுகிறது.
ஆயுள் காப்பீடு வகைகள்:
# டேர்ம் இன்ஷூரன்ஸ் ( Term Insurance )
# எண்டோவ்மென்ட் ( Endowment )
# வாழ்நாள் முழுவதற்குமான திட்டங்கள் ( Whole Life Policy )
# யூனிட்-லிங்க் இன்சூரன்ஸ் பிளான் ( Unit Linked Insurance Plans )
# மணி பேக் பிளான் ( Money Back Plan )
டேர்ம் இன்ஷூரன்ஸ்:
இந்த வகையான பாலிசியின் மூலம் அதிக அளவிலான காப்பீட்டை குறைந்த பிரீமியத்தில் பெறமுடியும்.
இந்த பாலிசி தொகையானது, பாலிசிதாரர் மரணமடைந்தால், கவரேஜ் தொகை அவரது குடும்பத்துக்குத் தரப்படும்.
இது ஒரு பாதுகாப்பான பாலிசி என்பதால், இதன் பிரீமியம் குறைவாக உள்ளது.
இந்த வகையான பாலிசிகளில், பாலிசியின் காலம் முடிந்து, பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் பட்சத்தில் பாலிசிதாரர் பிரீமியமாகக் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது.
எண்டோவ்மென்ட்:
இந்த வகையான பாலிசிகள், முதலீட்டு வகையைச் சேர்ந்தவை. இந்த பாலிசிகளில் கட்டும் பிரீமியத்தில் ஒரு பங்கு காப்பீட்டுக்காகவும், மறுபங்கு முதலீட்டுக்காகவும் பிரித்து முதலீடு செய்யப்படும்.
பாலிசிதாரருக்கு ஏதேனும் உயிரிழப்பு நேரிட்டால், காப்பீட்டுத் தொகை அவரது குடும்பத்தாருக்குச் சென்றடையும்.
இதுவே, பாலிசிதாரர் பாலிசி முடியும் வரை உயிரோடு இருந்தால், முதலீடு செய்த பணத்துடன், அதன்மூலம் வரும் லாபத்தையும் சேர்த்து பாலிசி தாரர்களிடம் தரப்படும்.
இந்த பாலிசிகளின் பிரீமியம் தொகை அதிகமாகவே இருக்கும். இது தவிர, ஒவ்வொரு பாலிசியின் தன்மையும் வேறுவேறு மாதிரி இருக்கும்.
வாழ்நாள் முழுவதற்குமான திட்டங்கள்:
வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிகளும், காப்பீடு செய்தவர் இறக்கும் வரையில், அவருக்கான காப்பீட்டை வழங்குகின்றன.
காப்பீடு செய்தவர் இறக்கும்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகை இருப்பின் அதனையும் சேர்த்துப் பெறுவார்.
இதன் முலம், காப்பீடு செய்தவர், பணத்தை திரும்பப் பெறவோ அல்லது பாலிசியின் பணப் மதிப்பிற்கு எதிராக கடன் பெற முடியும்.
பொதுவாக, வாழ்நாள் முழுவதற்குமான பாலிசியின் பணப் பெறுமதி லாபத்துடன் கூடிய எண்டோமென்ட் பாலிசியை விடவும் அதிகமானது.
மேலும், வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிக்கான பிரீமிய கட்டணம் நீண்ட காலத்திற்குச் செலுத்தப்படுகிறது.
யூனிட்-லிங்க் இன்சூரன்ஸ் பிளான்:
பிரீமியத்தின் ஒரு பகுதி, பங்குச் சந்தையில் அல்லது பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்படுகிறது.
காப்பீடு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக எஞ்சிய பிரீமியத் தொகையினை நிறுவனம் பயன்படுத்துகின்றன.
காப்பீடு செய்தவருடைய இறப்பின்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறுவார்.
பாலிசி காலம் வரை உயிருடன் இருந்தால், காப்பீடு செய்தவரால் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறமுடியும்.
மணி பேக் பிளான்:
மணி பேக் பாலிசிகளில், பாலிசிதாரர், கால வரையின்போது “காலாந்தர கட்டணங்களைப்" பெறுவதோடு, பாலிசி நிலைத்திருக்கும் காலம் வரையில் பெருந்தொகைப் பணத்தினையும் பெறுவார்.
பாலிசி கால வரையின்போது இறப்பு நிகழ்ந்தால், பயனடைபவர், அன்றைய தேதி வரை செலுத்திய கட்டணத்திலிருந்து எதுவும் கழிக்கப்படாமல், முழுத் திட்டத் தொகையினையும் பெறுவார்.
மேலும் பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.