1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (15:22 IST)

ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே.? முதலில் பேட்டிங் செய்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்..!!

CSK RR Match
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
 
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னையில் நடைபெறும் 7-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.
 
சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில்  6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். இதனால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 
மேலும் போட்டி முடிவடைந்ததும் மைதானத்தை விட்டு ரசிகர்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி விளையாடும் கடைசி போட்டி இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ் தோனி இன்று நடைபெறும் போட்டியுடன் ஐபிஎல் போட்டியிலிருந்து விடை பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.