1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (08:39 IST)

ரிஷப் பண்ட்டை நான் தோனியுடன் டெல்லியில் சந்தித்தேன்… பரபரப்பை ஏற்றிய சுரேஷ் ரெய்னாவின் பேச்சு!

ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அவற்றில் சில அணிகளின் முடிவுகள் எதிர்பார்ப்பிற்கு மாறானவையாக இருந்தன. மும்பை அணியை விட்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா, அந்த அணியிலேயே தக்கவைக்கப்பட்டார். தோனி சென்னை அணிக்காக அன்கேப்ட் ப்ளேயராக எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட கேப்டன்கள் அணிகளால் கைவிடப்பட்டுள்ளனர்.

இதில் ரிஷப் பண்ட் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டு இருப்பது எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. ஏனென்றால் அவர் மிகவும் மதிப்பு மிக்க வீரராக மற்ற அணிகளால் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ரிஷப் பண்ட் சென்னை அணிக்கு வருவார் என ரசிகர்கள் ஆருடம் சொல்லி வருகின்றனர்.

அதற்கு தூபம் போடுவது போல முன்னாள் சி எஸ் கே வீரர் சுரேஷ் ரெய்னா ஒரு கருத்தைப் பேசியுள்ளார். அதில் “சமீபத்தில் டெல்லியில் தோனியை சந்தித்த போது அவரோடு ரிஷப் பண்ட்டும் இருந்தார். யாரோ ஒருவர் விரைவில் மஞ்சள் ஜெர்ஸியில் வரப்போகிறார் என்று நினைக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.