திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 30 மே 2016 (11:48 IST)

விராட் கோலி ஏமாற்றம்: ஐபிஎல் மகுடம் சூடியது ஹைதராபாத் அணி

நேற்று இரவு நடைபெற்ற 9-வது ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் வார்னரின் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் விராட் கோலியின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.


 
 
முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகளும் நேற்ற தீவிர முனைப்புடன் களம் இறங்கியது. முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி பெங்களூர் அணியின் பந்து வீச்சை அடித்து நொருக்கியது. அந்த அணியின் கேப்டன் வார்னர் 38 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். மேலும் கடைசி கட்டத்தில் ஆல்ரவுண்டர் பென் கட்டிங் 15 பந்துகளில் 39 ரன்களைக் குவித்தார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.
 
பின்னர் 209 ரன் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கியது பெங்களூர் அணி. அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் அதிரடியில் இறங்க கேப்டன் கோலி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணி 9 ஓவர்களில் 100 ரன்னை கடந்தது. 38 பந்தில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன் குவித்த கெயில் 11-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
 
கேப்டன் விராட் கோலி 35 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்கார்களான கெயிலும், கோலியும் சிறந்த தொடக்கத்தை கொடுத்தாலும் பின்னர் களம் இறங்கிய டிவில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணியை தோல்விக்கு வழிநடத்தி சென்றனர்.
 
இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஹைதராபாத் அணி.