1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (09:57 IST)

தட்டிவிட்டா தாருமாறு..! யார் இந்த ரின்கு சிங்? – வாய் பிளந்த ரசிகர்கள்!

Rinku singh
நேற்றைய ஐபிஎல் போட்டியின் நண்பகல் போட்டியில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதிக் கொண்ட நிலையில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பேசப்படும் நபராக மாறியுள்ளார் இளம் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங்.

2023ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. நேற்றைய போட்டியில் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி மொத்தமாக 204 ரன்களை குவித்திருந்தது.

205 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியின் முதல் நிலை பேட்ஸ்மேன்கள் முதல் 3 ஓவர்களுக்கு சுருண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெங்கடேஷ் ஐயர் நின்று விளையாடி 83 ரன்களை குவித்து அவுட் ஆனார். 16வது ஓவரில் குஜராத் அணியின் ரஷித் கான் தனது அசுர பந்து வீச்சால் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், ஷர்துல் தாக்குர் ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலை உண்டானது.

கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இளம் வீரர் ரின்கு சிங் பேட்டிங்கில் தனது வித்தையை காட்ட தொடங்கினார். கடைசி 5 பந்துகளில் அடுத்தடுத்து அவர் சிக்ஸர்களை விளாசி தள்ள, உற்சாகமிழந்து கிடந்த கொல்கத்தா ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கத்தி கூப்பாடு போட்டனர். 177 ரன்களே இருந்த நிலையில் தொடர் சிக்ஸர் மழை பொழிந்து 207 ரன்களை குவித்து ஆட்டத்தின் பாதையையே மாற்றி கொல்கத்தாவிற்கு வெற்றியை கொண்டு வந்து சேர்த்துள்ளார் ரின்கு சிங்.

இதை கண்ட பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளதுடன் மட்டுமல்லாமல் அதை சமூக வலைதளங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். இனி கொல்கத்தாவின் தொடக்க நிலை அல்லது மிடில் ஆர்டரில் ரின்கு சிங்கிற்கு இடம் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K