1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (15:24 IST)

'இலங்கை அணியை மதிக்காததுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்’ - சுனில் கவாஸ்கர்

'இலங்கை அணியை மதிக்காததுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்’ - சுனில் கவாஸ்கர்

இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததில் இருந்து இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இனி விழித்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

 
கடந்த 9ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே முதல் டி 20 போட்டி நடைபெற்றது. இதில், அனுபவமில்லாத இலங்கை அணியிடம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. குறிப்பாக, பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி 101 ரன்களுக்குள் சுருண்டது.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள சுனில் கவாஸ்கர், “நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்திய அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோதிலும், ஷிகர் தவான் அடித்து ஆட முயற்சித்தார். சுரே ரெய்னா அதேபோல் அந்த ஓவரில் சுரேஷ் ரெய்னா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். பந்து ஸ்விங் ஆகிவந்த நிலையில் அதை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடுவதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
 
இலங்கை அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் சரியான இடத்தில், சரியான அளவில் பந்துகளை துல்லியமாக வீசினர். இந்த பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு, பரிட்சயம் இல்லாதவர்கள். எனவே சற்று பொறுமையாக பந்துகளை கணித்து ஆடியிருக்க வேண்டும்.
 
ஆஸ்திரேலியாவில் விளையாடியதை போலவே இங்கும் ஆட வேண்டும் என்று நினைத்தது தவறு. இந்திய அணி, இலங்கை வீரர்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து, மதித்து ஆடியிருக்க வேண்டும். அப்படி செயல்பட்டிருந்தால் விக்கெட்டுகள் விழுந்திருக்காது.
 
கூடுதலாக 30 - 40 ரன்கள் எடுத்திருந்தால் கூட வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். இனிமேல் இலங்கை பந்து வீச்சாளர்களை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்ற எச்சரிக்கையை இந்திய வீரர்கள் உணர்ந்திருப்பார்கள்.
 
என்னுடைய நேர்மையான வேண்டுகோள் என்னவெனில், இலங்கை அணி வீரர்களால் என்ன செய்ய முடியும் என்பதை இந்திய அணி பார்த்த பிறகு விரைவில், விழித்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.