மோசமான ஐபிஎல் லெவன் அணியில் கிறிஸ் கெய்ல், மேக்ஸ்வெல்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 3 ஜூன் 2016 (17:40 IST)
மோசமான 11 பேர் கொண்ட ஐபிஎல் அணியில் கிறிஸ் கெய்ல், கிளைன் மேக்ஸ்வெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
 
ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பிரபலமானவர்கள் நிறைய உள்ளனர். சிலர், இந்திய அணியில் ஐபிஎல் மூலம் இடம்பெற்ற வரலாறும் உண்டு.
 
இந்நிலையில், கடந்த காலங்களில் எதிரணியை துவம்சம் செய்து எதிர்பார்ப்பை கிளப்பி, தற்போதைய தொடரில் சொதப்பியதின் அடிப்படையில், தனியார் விளையாட்டு இணையத்தளம் ஒன்று மோசமான 11 பேர் கொண்ட ஐபிஎல் அணியை வெளியிட்டுள்ளது.
 
அதன் விவரம் வருமாறு:
 
1. ஸ்ரேயாஸ் அய்யர்:
 
கடந்த 2015 ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 14 போட்டிகளில் 439 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களில் இடம்பெற்றிருந்தார். ஆனால், இந்த சீசனில், 6 போட்டிகள் விளையாடி, 30 ரன்கள் மட்டுமே [சராசரி 69.76] எடுத்துள்ளார்.
 
2. கிறிஸ் கெய்ல்:
 
தனது அசாத்தியமான அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் கிறிஸ் கெய்ல். ஆனால், இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 227 ரன்கள் மட்டுமே [சராசரி 22.70] எடுத்துள்ளார்.
 
5 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டியில் இவர் விளையாடிவரும் பெங்களூரு அணி, ஹைதராபாத் அணியிடம் தோல்வியுற்றது.
 
3. டேவிட் மில்லர்:
 
கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் டேவிட் மில்லர் 14 போட்டிகளில் விளையாடி 161 ரன்கள் மட்டுமே [சராசரி 16.10] எடுத்துள்ளார். இவர் தலைமையில், முதல் ஆறு போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்ததன் பிறகு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தார்.
 
4. கிளைன் மேக்ஸ்வெல்:
 
அதிரடிக்கு பேர் போன மேக்ஸ்வெல், இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 179 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 14 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.
 
5. தீபக் ஹோடா:
 
கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தீபக் ஹோடா டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 50 அடித்ததன் மூலம் கவனம் பெற்றார். ஆனால், இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்காக 17 போட்டிகள் விளையாடி, 144 ரன்கள் [சராசரி 10.28] மட்டுமே எடுத்தார்.
 
இதில், ஐந்து முறை ரன் அவுட் முறையில் வெளியேறியதும், ஹிட் விக்கெட் முறையில் ஒருமுறை வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
 
6. ஹர்த்திக் பாண்டியா:
 
இந்திய அணிக்காக இந்த ஆண்டில் 16 டி20 போட்டிகளில் விளையாடி ரசிகர்களிடம் சிறந்த ஆல் ரவுண்டர் என பெயர் எடுத்தவர் ஹர்த்திக் பாண்டியா. ஆனால், இந்த ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 44 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், 3 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
 
7. பவன் நெகி:
 
இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட பவன் நெகியை 8.5 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது. ஆனால், எதிர்ப்பார்ப்புக்கு மாறாக 8 போட்டிகளில் விளையாடி, 57 ரன்கள் மட்டுமே எடுத்ததோடு ஒரே ஒரு விக்கெட்டையும் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
 
8. ஜேம்ஸ் ஃபால்க்னர்:
 
குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடிய ஜேம்ஸ் ஃபால்க்னர் 7 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார். அவரது, ஓவருக்கு 9.82 வீதத்தில் வாரி வழங்கியுள்ளார்.
 
9. மிட்செல் ஜான்சன்:
 
நான்கு மாதங்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற மிடெல் ஜான்சன், இந்த ஐபிஎல் சீசனில் 3 போட்டிகள், 2 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். மேலும், ஓவருக்கு 9.63 என்ற வீதத்தில் வாரி வழங்கியுள்ளார்.
 
10. மொஹமது சமி:
 
டெல்லி அணிக்காக விளையாடி வரும் இவர் 8 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 3.1 ஓவருக்கு 50 ரன்கள் வாரி வழங்கினார். மேலும், ஓவருக்கு 9.69 என்ற வீதத்தில் வாரி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
11. கரன் சர்மா:
 
ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் கரன் சர்மா 2015 ஆம் ஆண்டு சீசனில் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி தனது தேர்வுக்கு நியாயம் செய்தார். ஆனால், இந்த சீசனில் அதிக ரன்கள் வாரி வழங்கியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 5 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.
 


இதில் மேலும் படிக்கவும் :