1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 2 மே 2017 (19:54 IST)

'உலகிலேயே வயதான' 146 வயது இந்தோனேசிய முதியவர் மரணம்

உலகிலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜோ மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார்.


 

 
சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, ம்பா கோட்டோ (தாத்தா கோட்டோ) 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்கள் சான்றளிக்கின்றன.ஆனால், இந்தோனேசியாவில் 1900ஆம் ஆண்டில்தான் பிறப்புப் பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்கலாம்.
 
இருந்தபோதிலும், சோடிமெட்ஜோ அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது வயது 146 என்பது உண்மை என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். மேலும் இந்த முதியவரிடம் எடுத்த பேட்டியின்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் அவரது வயது 146 என்பது நம்பக்கூடியதுதான்.
 
உடல்நிலை கோளாறினால், ஏப்ரல் 12ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோடிமெட்ஜோ, ஆறு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பச் சொல்லி வற்புறுத்தினாராம்.
 
"மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு, சில ஸ்பூன்கள் கஞ்சியையும், சிறிதளவு பானங்களையுமே அவர் குடித்ததாக" சோடிமெட்ஜோவின் பேரன் சுயாண்டோ பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"அதுவும் சில நாட்கள் வரையில் தான் நீடித்தது, பிறகு அவர் சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் மறுத்துவிட்டார், இறுதியில் அவரது மூச்சுவிடுவதையும் நிறுத்திவிட்டார்.
 
பொறுமையும், அன்பும்
 
கடந்த ஆண்டு பிபிசியிடம் அவர் அளித்த பேட்டியின்போது, அவரது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்த கேள்விக்கு அவரது பதில் என்ன தெரியுமா? பொறுமைதான் அனைத்திற்கும் காரணம் என்று கூறிய தாத்தா கோட்டோ , "என் மீது அன்பு செலுத்தவும், என்னைப் பார்த்துக் கொள்ளவும் அன்பானவர்கள் என்னுடன் இருந்தார்கள்" என்று சொன்னார்.
 
தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்து புகைபிடிப்பவராக இருந்த 146 வயது சோடிமெட்ஜோவுக்கு பத்து உடன்பிறப்புக்கள். நான்கு மனைவிகள், பல குழந்தைகள் என பெரிய குடும்பியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார்.


 

 
கிராமத்தில் உள்ளூர் கதாநாயகராக போற்றப்பட்ட சோடிமெட்ஜோ, ஜப்பான் மற்றும் டச்சு குடியேற்றத்திற்கு எதிரான போர் குறித்த சுவராசியமான கதைகளை சொல்வாராம்.
 
தனக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூர் மயானத்தில் அவரே வாங்கி வைத்திருந்த இடத்தில் திங்கட்கிழமை காலை அவர் புதைக்கப்பட்டதாக, முதியவரின் பேரன் சுயாண்டோ தெரிவித்தார்.
 
பல ஆண்டுகளாக தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கல்லில் அமர்வதை பழக்கமாக கொண்டிருந்த சோடிமெட்ஜோவின் கல்லறை மேல், இப்போது அந்தக் கல் அமர்ந்திருக்கிறது.
 
பக்கசார்பற்ற முறையில் சரிபார்க்கப்பட்டால், சதம் அடித்து 122 வயதில் இறந்த பிரான்சு நாட்டின் ஜீன் கால்மெண்ட்டைக் காட்டிலும், தாத்தா கோட்டோ முதியவர் என்று உறுதியாகும்.
 
பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் உலகில் நீண்ட காலம் வாழ்ந்த மனிதனாக இதுவரை பிரான்சின் ஜீன் கால்மெண்ட்தான் கருதப்படுகிறார்..