திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:00 IST)

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மோதி ஆட்சியை வீழ்த்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு உதவுமா?

இக்கட்டான சூழலில் இருக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்று அழைக்கப்படும் ஒற்றுமைப் பயணத்தின் நடுவே இருக்கிறார்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரில் தொடங்கி நாடு முழுவதும் ஐந்து மாத காலம் செல்லும் இந்தப் பயணம் பிப்ரவரி மாதத்தில் ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் நிறைவடையும்.
 
மகாராஷ்டிராவில், விவாசயிகளின் தற்கொலைகளுக்காகத் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் வரக்கூடிய, ஏழ்மையான பகுதியாக அறியப்படும் விதர்பா வழியாக பயணம் சென்றபோது பிபிசி ராகுல் காந்தியைச் சந்தித்தது.
கட்சியின் பெண் தொண்டர்கள், குயர் உரிமை குழுக்கள், முதியோர் ஓய்வூதியத்திற்கான பிரசாரகர்கள் ஆகியோரின் சலசலப்புக்கு நடுவில், “இந்த அணிவகுப்பின் மூலம் இந்தியா குறித்த ஒரு மாற்றுப் பார்வையை விதைக்க முயல்வதாக,” ராகுல் காந்தி கூறினார்.
 
“அதிகளவிலான செயல்பாடுகளோடு, இது ஆளும் பாஜகவை அழிக்கும் திறன் கொண்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
 
இது அவருடைய ஆதரவாளர்களை உற்சாகப்படுத்திய கூற்று. ஆனால் விமர்சகர்கள் அதை சந்தேகத்துடன் தான் பார்க்கிறார்கள். காங்கிரஸ் தற்போது இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் இரண்டில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய கட்சியாக உச்சத்திலிருந்த ஒரு கட்சிக்கு இதுவொரு பெரிய வீழ்ச்சி.
 
ராகுல் காந்தியின் செயல்பாட்டை, உடைந்து போகாத ஒரு நாட்டைச் சரிசெய்ய முயல்வதைப் போன்றது என்று பாஜக நிராகரித்துள்ளது. ஆனால், கடந்த 75க்கும் மேற்பட்ட நாட்களில், சில பாலிவுட் நடிகர்கள், பல கல்வியாளர்கள், ஆர்வலர்கள், காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கும் பிற கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட அவருக்கு ஆதரவாக அணிவகுப்பில் இணைந்துள்ளனர்.
 
விதர்பாவில், பெரிய கட்சிக் கொடிகள் மற்றும் ராகுல் காந்தியின் பெரிய சுவரொட்டிகள் குறுகலான உள்ளூர் சாலைகளில் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
 
இளைஞர்கள், சீருடை அணிந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் நடனக் கலைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பாரம்பரிய லாஜியம் என்ற நாட்டுப்புற நடனம் ஆடியபடி, சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றனர். பேரணி கிராமங்கள் வழியாகச் சென்றபோது, மக்கள் தங்கள் வீடுகளின் கூரை மீதிருந்து கை அசைத்தனர். கட்சித் தொண்டர்கள், “நஃப்ரத் சோடோ, பாரத் ஜோடோ (வெறுப்பைக் கைவிடுங்கள், இந்தியாவை ஒன்றிணைப்போம்)” என்று ஒருமித்த கோஷங்களை எழுப்பினார்கள்.
 
ஒரு நாள் முன்னதாக நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி ஆளுங்கட்சியின் “பிளவு அரசியலை” எதிர்த்து ஆவேசமாக உரையாற்றினார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து, ராகுல் காந்தியுடன் நடந்து சென்ற பல சாதாரண மக்களிடம் பிபிசி பேசியது.
 
2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதிக்கு, பாஜகவுக்கு வாக்களித்த ஹைதராபாத்தை சேர்ந்த நிர்வாக ஆலோசகர், தற்போதைய அரசாங்கத்தின் மீதான “ஏமாற்றத்தால்” தான் அங்கிருப்பதாகக் கூறினார். புனே நகரில் ஐஸ்கிரீம் பார்லர் நடத்தி வந்த ஒரு தம்பதி, இந்திய பல்கலைக்கழகங்களை அரசியலாக்குவதாகக் கூறியதற்கு எதிராகப் பதாகைகளை ஏந்திப் போராட்டம் நடத்தினர். கிராம மக்கள் பலரும் தாங்கள் வசித்த இடத்தில் பெரிதாக எதையும் செய்யவில்லை என்பதால் தாங்கள் இதில் ஆர்வம் கொண்டதாகக் கூறினர்.
 
“தாராளவாத, மதச்சார்பற்ற, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மதிப்புகளை இழந்த இந்தியாவை மீண்டும் புதுப்பிக்க இதுவொரு தீப்பொறியை உண்டாக்கும் என்ற நம்பிக்கையில் நான் இங்கு இருக்கிறேன்,” என்று பேரணியில் ஒரு நாள் முழுக்க இருந்த மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறினார்.
 
பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான இந்திய ஊடகங்களின் பெரும் பகுதி இந்த பயணத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்ற போதிலும், இதுவரை கடந்து வந்த ஐந்து மாநிலங்களில் ராகுல் காந்தியால் பெரும் கூட்டத்தைக் கூட்ட முடிந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.
 
ஆனால் பயணத்தினால் காங்கிரசுக்கு ஏற்படும் பலம் குறித்துக் கேள்விகள் உள்ளன.
 
சமீபத்தில் சில மோசமான இழப்புகளை எதிர்கொண்ட இந்தியாவின் பழைமையான கட்சி சிறப்பான தேர்தல் முடிவுகளைப் பெறுவதற்கு இது உதவுமா? மேலும் பெரிய அரசியல் புரிதல் இல்லாதவர் என்று ராகுல் காந்தி மீது எதிரணியினர் முன்வைத்த விமர்சனங்களை இது மாற்றுமா?
 
 
“அவர் ஓர் இளவரசர் இல்லை. அது அவருடைய எதிரிகளால் உருவாக்கப்பட்ட பிம்பம். அந்த பிம்பத்தை உடைக்கும் பிரசாரத்தைத் தான் இந்த அணிவகுப்பு அடிமட்டத்தில் கொண்டு செல்ல முயல்கின்றது,” என்று முன்னாள் மாணவர் தலைவரும் இப்போதைய காங்கிரஸ் உறுப்பினருமான கன்னையா குமார் கூறினார். அணிவகுப்பின்போது கன்னையா குமாரின் பேச்சுத் திறமைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
இது தேர்தலை மைய நோக்கமாகக் கொண்ட பேரணி இல்லையென்று காங்கிரஸ் அடிக்கடி கூறியது. ஆனால், “வாக்காளர்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பை மீண்டும் ஏற்படுத்துவது” இதை மேற்கொண்டதற்கான காரணங்களில் ஒன்று என்பதை கன்னையா குமார் ஒப்புக்கொண்டார். அதனால் தான் ராகுல் காந்தி தனது உரைகளில் பொருளாதாரம், விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து பாஜகவை பலமுறை குறிவைத்துள்ளார்.
 
கட்சித் தொண்டர்களுடனான அடிமட்ட ஈடுபாடும் காங்கிரஸ் கட்சி “அமைப்புரீதியாக புத்துயிர் பெறுவதற்கு” வழிவகுக்கிறது என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
 
ராகுல் காந்திக்கு இருக்கும் புகழ் குறித்த மதிப்பீடுகள் அவர் அணிவகுப்பைத் தொடங்கியபோது இருந்ததைவிட மெல்லிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அவர் நடந்த அனைத்து மாநிலங்களிலும் அவருடைய செயல்பாடு குறித்த மக்களின் திருப்தி, அதைத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைவிட 3-9% அதிகரித்துள்ளதாக வாக்கெடுப்பு நிறுவனமான சி-வோட்டர் தெரிவித்துள்ளது.
 
ஆனால், 2024இல் பொதுத் தேர்தல்களின்போது மோதிக்கு ஒரு தீவிரமான சவாலாக இருப்பதற்கு, அவர் எந்தளவுக்குக் களம் காண வேண்டும் என்பதை இந்தச் சிறிய முன்னேற்றங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
 
சி-வோட்டரின் நிறுவனர்-இயக்குநர் யஷ்வந்த் தேஷ்முக், இந்த அணிவகுப்பு “பாஜகவின் கோட்டையாக இல்லாத தென் மாநிலங்களில் ராகுல் காந்தியின் பிம்பத்தைச் சரி செய்வதற்கு உதவியது. ஆனால் அதை வாக்குகளாக மாற்றுவது என்பது முற்றிலும் வேறுபட்ட விளையாட்டாக இருக்கும்,” எனக் கூறுகிறார்.
 
ராகுல் காந்தி
மேலும், “அவர் இந்தியாவின் வடக்கு மாகாணங்களுக்குள் நுழையும்போது அல்லது ‘இந்தி பகுதிக்கு’, ஆளும் பாஜக உறுதியாக இருக்கும் களத்திற்குள் நுழையும்போது ஆதரவாளர்களின் கூட்டம் குறையுமா என்ற கேள்வியும் உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
 
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தலையொட்டி உடனடி பலன் கிடைக்குமா என்ற சந்தேகமும் விமர்சகர்களுக்கு உள்ளது.
 
காங்கிரஸ் நீண்டகாலத்திற்கு இதன்மூலம் பலனடையுமா என்பது, “இந்த அணிவகுப்பு முறைப்படி முடிவடைந்தவுடன் இதே வேகத்தை எந்தளவுக்குத் தக்க வைக்க முடியும்,” என்பதைப் பொறுத்தது என்கிறார் 2020ஆம் ஆண்டில் கட்சியை விமர்சித்தமைக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா.
 
அவருடைய கூற்றுப்படி, மனச்சோர்வடைந்த தொண்டர்களை ஊக்கப்படுத்துதல், உட்பூசலையும் வாரிசு முன்னிலைப்படுத்தலையும் குறைத்தல், பாஜகவை தாக்குவதற்கும் அப்பால் தெளிவான கருத்தியல் நிலைப்பாட்டைப் பின்பற்றுதல் போன்ற ஆழமான விஷயங்களில் காங்கிரஸ் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டும்.
 
கட்சித் தலைவர்கள் வெளியேறி பாஜகவில் இணைவது குறித்து அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் காந்தி குடும்பத்தின் மீதான “வம்சாவளி ஈர்ப்பை” அகற்ற வேண்டும் என்றும் ஜா கூறுகிறார்.
 
கடந்த மாதம், 24 ஆண்டுகளில் காந்தியல்லாத ஒருவரை கட்சித் தலைவராக காங்கிரஸ் நியமித்தது. ஆனால், மல்லிகார்ஜுனே கார்கே காந்தி குடும்பத்தின் விசுவாசியானவராக, அவர்களுக்கு பதிலாளாக பரவாலாகக் காணப்படுகிறார். மேலும், உள்கட்சித் தேர்தல்களின்போது கட்சி பரந்த திறமையான தளத்தை ஓரங்கட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்தப் பின்னணியில், ராகுல் காந்தி, தனது சொந்தக் கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்க முடியாத நிலையில், இந்தியாவை எப்படி ஒன்றிணைக்க முடியும் என்று பாஜக கேட்கிறது.
 
இருப்பினும், எதிர்க்கட்சிக்கான பெஞ்சில் வளர்ந்து வரும் வெற்றிடத்தை நிரப்ப நாட்டில் இதுபோன்ற ஒரு முயற்சி நீண்டகாலமாக இருந்து வருகிறது என்று அரசியல் பண்டிதர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தப் பயணம் ஒரு மந்திரக்கோல் இல்லை. ஆனால் 2014 முதல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும் இடைவிடாத வீழ்ச்சியைத் தடுப்பதில் இது குறிப்பிடத்தக்க முதல் படியாக இருக்கலாம்.
 
“இது காத்திருப்பதில் தீவிர எதிர்க்கட்சியாக காங்கிரஸை உயிர்ப்பித்து, ஒரு ஒற்றுமையான எதிர்க்கட்சியாக அதன் சக்தியையும் அதிகரிக்கிறது," என்று திரு ஜா கூறுகிறார்.