புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (13:06 IST)

இந்த சமூகத்தில் விவாகரத்து பெற கணவருக்கு லட்சக்கணக்கில் பெண்கள் பணம் கொடுப்பது ஏன்?

BBC

“குழந்தைப் பருவத்திலேயே எங்களுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணுக்கு இந்த உறவிலிருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். என்னிடம் எனது கணவர் வீட்டார் ரூ. 18 லட்சம் கேட்டுள்ளனர்.”

 

 

மத்திய பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கும் கெளஷல்யா இவ்வாறு கூறுகிறார். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக அங்கு நடப்பதாகவும் இதை ‘ஜடா நாத்ரா’ என்று அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பகாரியா கிராமத்தை சேர்ந்த கெளஷல்யா, தனது இரண்டாம் வயதில் இந்த நாத்ரா வழக்கப்படி நிச்சயம் செய்யப்பட்டு, 2021-ம் ஆண்டு தன்னுடைய 22 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய தந்தை ஒரு விவசாயி.

 

“கடந்த மூன்று ஆண்டுகளில் நான் மிகுந்த வன்முறைக்கு ஆளானேன். என்னிடம் ஐந்து லட்சம் பணமும், இருசக்கர வாகனமும் கேட்டனர். அதை என்னால் தரமுடியாததால் என்னுடைய தந்தை வீட்டுக்கு திரும்பி வந்தேன்,” என்றார் கெளஷல்யா.

 

சமூக அழுத்தத்திற்கும் திருமண உறவிலிருந்து வெளிவர பயந்தும் கெளஷல்யாவின் குடும்பத்தினர் இந்த பிரச்னையை பெரிதாக்க விரும்பாமல் மீண்டும் அவரை அவரது கணவர் வீட்டிற்கு பலமுறை அனுப்பிவைத்து விட்டனர்.

 

“நான் துன்புறுத்தப்பட்டேன். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து 18 லட்ச ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்து என்னை இந்த உறவிலிருந்து விடுவிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

 

கடந்த 2023 ஆம் ஆண்டு கெளஷல்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த பிறகு மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

 

இவ்வளவு பணத்தை கொடுக்க இயலாது என்பதை உணர்ந்த குடும்பத்தினர் இவரை மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்லும்படி வற்புறுத்தியுள்ளனர்.

 

இந்த விஷயம் கிராமப் பஞ்சாயத்து வரை சென்றது. அங்கு, இத்திருமணத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ரூ.18 லட்சத்தை கொடுத்தாக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

கெளஷல்யா, சோண்டியா சமூகத்தை சேர்ந்தவர். இது இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சமூகமாகும். இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய பிரச்னைகளை தீர்க்க காவல்துறையிடமோ நீதிமன்றமோ செல்வதில்லை. கிராமப் பஞ்சாயத்திற்கு மட்டும் தான் செல்கிறார்கள்.

 

ராஜஸ்தானிலும் தொடரும் இந்த பழக்கம்
 

பகாரியா கிராமம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இந்த ஊருக்குள் செல்லும் பிரதான சாலையே மேடும் பள்ளமுமாக இருக்கிறது. இங்கு பெரும்பாலும் மண் சாலைகள் தான் இருக்கின்றன. அதேபோல, பெரும்பாலான பெண்கள் முக்காடு அணிந்தபடியே இருக்கின்றனர்.

 

தேசிய குடும்பநலத்துறை ஆய்வின் படி, ராஜகர்கில் 52% பெண்கள் படிப்பறிவில்லாதவர்களாகவும், 20ல் இருந்து 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 46 சதவிகிதத்தினர் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமண உறவில் தள்ளப்படுகின்றனர். அதாவது குழந்தைத் திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் தெரியவருகிறது.

 

கடந்த 2011-ல் எடுத்த கணக்கெடுப்பின் படி ராஜ்கரின் மக்கள்தொகை 15.45 லட்சமாக இருந்தது. அதில், பெண்கள் 8 லட்சம் பேர் இருக்கின்றனர்.

 

மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் பகுதியை போல, ராஜஸ்தானில் உள்ள அகர் மல்வ, குணா, ஜலவர் ஆகிய இடங்களிலும் ஜடா நாத்ரா இன்னும் நடைமுறையில் தொடர்ந்து வருகிறது.

 

இந்த பழக்கம் பற்றிய பின்னணி
 

100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை இப்பகுதிகளில் நடந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

ராஜ்கரின் பீஜி கல்லூரியில் 1989 ஆம் ஆண்டு முதல் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றுகின்றார் சீமா சிங் .

 

"ஜடா நாத்ரா நடைமுறை பற்றி எந்தவொரு எழுத்துப்பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆனால், பல ஆண்டுகளாக இந்த பழக்கம் கைம்பெண்களுக்கும், திருமணமாகாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் கைகொடுத்துள்ளது. ஆரம்ப காலங்களில் இது நாட பாத்ரா என்று அழைக்கப்பட்டது." என்று அவர் கூறினார்.

 

அவரைப் பொருத்தவரை, “இந்த நடைமுறையினால் கைம்பெண்களுக்கு மீண்டும் இந்த சமூகத்தில் இணைந்து செயல்பட ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இப்பொழுது இந்த வடிவமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றைக்கு பெண்களை பேரம் பேசி சிறுவயதிலேயே திருமணமோ அல்லது நிச்சயமோ செய்துவைக்கின்றனர். பின்னர் ஏதேனும் சிக்கல் வரும் பொழுது இந்த உறவிலிருந்து வெளிவர பெண்கள் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பெண்கள் இந்த நடைமுறையை எதிர்த்தாலோ அல்லது பணத்தை கொடுக்க முடியவில்லை என்றாலோ பிரச்னை கிராமப் பஞ்சாயத்திற்கு செல்லும். அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே எவ்வளவு பணம் கொடுத்து விவாகரத்து பெற வேண்டும் என்று முடிவெடுப்பர்,”என்று சீமா சிங் குறிப்பிடுகிறார்.

 

அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான பானு தாகூர் இதைப் பற்றி கூறுகையில், “இங்குள்ள மக்களின் மீது இந்த நடைமுறையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இவர்கள் பதிவுத் திருமணத்தை விட இதைத் தான் அதிகமாக நம்புகின்றனர்.” என்றார்.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட ஜடா நாத்ரா வழக்குகள் ராஜ்கரில் பதிவாகியுள்ளன.

 

பதிவு செய்யப்பட்ட வழக்குகளை பற்றி மட்டும் தான் தெரியும், இன்னும் பதிவு செய்யப்படாத இதுபோன்ற பல நிகழ்வுகள் இருக்கலாம் என்று பானு தாகூர் தெரிவித்தார்.

 

மூன்று ஆண்டுகளில் 500 வழக்குகள்
 

இதுதொடர்பாக நாங்கள் ராஜ்கரின் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய மிஷ்ராவை சந்தித்தோம். “பெண்களின் உரிமைகளை பறிக்க இன்றளவும் முயற்சி நடக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தாலும் பாரம்பரியம் என்ற பெயரில் இதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்,” என்கிறார் அவர்.

 

“குழந்தைப்பருவத்தில் அவர்களுக்கு நிச்சயம் செய்து வைத்துவிடுகிறார்கள். பின் இந்த உறவில் பிரிவு ஏற்பட்டால் அந்த பெண்ணிடம் பல லட்ச ரூபாயை மாப்பிள்ளை வீட்டார் கேட்கின்றனர். பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு செயலாக இது இருக்கின்றது, ஆனால், இங்குள்ள மக்கள் இதை சரியான செயல்முறையாக பார்க்கின்றனர். ஏறத்தாழ 500 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவாகியுள்ளது. ஆனால், இதை பார்க்கும் பொழுது முன்பை விட மக்கள் தைரியமாக முன்வந்து சட்டத்தின் உதவியை நாடுவது நம்பிக்கையளிக்கிறது,” என்றார் ஆதித்ய மிஷ்ரா.

 

“இந்த நடைமுறையில் பெண்களை வைத்து பேரம் பேசுகின்றனர். பழைய உறவிலிருந்து வெளிவர வேண்டுமானால் அப்பெண் ஒரு தொகையை அந்த ஆணுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அந்த பெண்ணுக்கு வெளியில் பல வரன்கள் பார்க்கப்படும். அதில் யார் அந்த பெண்ணுக்கு அதிக தொகையை கொடுக்கின்றனரோ அவருடன் அந்தப் பெண் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார். அவரிடமிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பழைய திருமண உறவிலிருந்து அந்தப் பெண் வெளியேறுகிறார்,” என்கிறார் சீமா சிங்.

 

இது மங்கிபாயின் கதை
 

ராஜ்கரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோடக்கியா கிராமத்தை சேர்ந்தவர் மங்கிபாய். இவரின் கதையும் கெளஷல்யா போன்றது தான்.

 

இதை எடுத்துரைக்கும் போது அவர் உணர்ச்சிவசப்பட்டார்.

 

“எனக்கு அங்கு ஒழுங்கான உணவோ அல்லது உறங்கும் இடமோ கிடைக்கவில்லை. என்னுடைய கணவர் மது அருந்துவதை தடுக்கும் போது என்னை அடிப்பார். என்னுடைய வாழ்க்கை அங்கு மோசமாகிவிட்டது. எனக்கு பெரிய கனவுகள் இருந்ததில்லை. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டும் தான் இருந்தது. ஆனால் அதுவும் நடக்காமல் போய்விட்டது,” என்று வருந்தினார்.

 

அந்த திருமணத்தில் இருந்து வெளியேற அவர் 5 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று கணவர் வீட்டார் கேட்டுள்ளனர். அதனால் கிராமப் பஞ்சாயத்திற்கு அதனை எடுத்து சென்ற போது அது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மங்கிபாய், கில்ச்சிபூர் காவல் நிலையத்தில் தனது கணவர், மாமனார், மற்றும் மைத்துனருக்கு எதிராக புகார் கொடுத்தார்.

 

காவல் துறையிடமிருந்து கிடைத்த தகவலின் படி, மங்கிபாயின் கணவர் கமலேஷ் , மைத்துனர் மங்கி லால் மற்றும் மாமனார் கன்வர் லால் மீது இந்திய தண்டனை சட்டம் 498A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது அவர்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர்.

 

மங்கிபாய் தற்பொழுது தனது பெற்றோருடன் வசிக்கிறார்.

 

மங்கிபாயின் தந்தையும் அவரின் சகோதரர்களும் இருவரும் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர்.

 

அவரின் தந்தை 5 லட்சம் ரூபாய் தன்னிடம் இல்லை என்று கூறினார். அதனால் அவரால் தனது மகளை வேறு யாருக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது.

 

இதற்கிடையில் மங்கிபாயின் கணவர் கமலேஷ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

 

பிபிசியிடம் பேசிய கமலேஷ், “ஆறு மாதத்திற்கு முன்பு மங்கிபாயின் தந்தைக்கு மூன்று லட்சம் வழங்கினேன். திருமணத்தின் போது ஒரு தோலா தங்கத்தையும், ஒரு கிலோ வெள்ளி நகைகளையும் வழங்கினேன். நாங்கள் கொடுத்ததை தான் திருப்பி கேட்கிறோம். அதை நாங்கள் நிச்சயம் வாங்கியே தீருவோம்”. என்றார்.

 

இந்த பணம் எதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு கமலேஷ் பதிலளிக்கவில்லை.

 

கிராமத்தினர் தலையீடு
 

70 வயதாகும் பவன் குமார் (பெயர் மற்றப்பட்டுள்ளது) இதுதொடர்பான கிராமப் பஞ்சாயத்துகள் பல நூற்றாண்டுகளாக நடந்து வருவதாக தெரிவித்தார். இதன் தீர்ப்புகள் எல்லாமே மாப்பிள்ளை வீட்டாருக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

 

“இந்த கிராமத்தில் இதுபோன்ற வழக்குகளில் கிராமப் பஞ்சாயத்தின் தீர்ப்பே இறுதியானது. அறுபதாயிரம் முதல் எட்டு லட்சம் வரையிலான பணம் சம்பத்தப்பட்ட வழக்குகளை நான் தீர்த்துள்ளேன்” என்றார்.

 

“சிறுவயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்படுவதால் பெண்கள் இந்த உறவில் இருக்க மறுக்கின்றனர். ஆனால், சில சமயங்களில் ஆண்களும் இந்த பிரிவுக்குக் காரணமாக இருக்கின்றனர். அப்போது நாங்கள் பெண் வீட்டார் குறைவாக பணம் கொடுக்கும் படி அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வோம். இருப்பினும், 90% வழக்குகளில் பெண் வீட்டார் தான் இந்த தொகையை கட்ட வேண்டும்" என்கிறார் அவர்.

 

சமூக செயற்பாட்டாளர்கள் கூறுவது என்ன?
 

சமூக செயற்பாட்டாளர் மோனா சுஸ்தானி இந்த நடைமுறைக்கு எதிராக பத்தாண்டுகளாக போராடுகிறார். அவர் இதை பெண்களுக்கு எதிரான செயலாகவும், ஆணாதிக்க சிந்தனை மிக்கதாகவும் இருக்கின்றது என்று தெரிவித்தார்.

 

“நான் ஒரு அரசியல் குடும்பத்தில் 1989-ல் திருமணம் செய்துகொண்டேன். இந்த நடைமுறையைக் கண்டு நான் அதிர்ந்தேன். அப்போதே இதற்கு எதிராக குரல் கொடுக்க முடிவு செய்தேன்” என்றார் அவர்.

 

அவர் உருவாக்கிய அமைப்பு, இதுதொடர்பான வழக்குகளில் குறுக்கிட்டு, பெண்களின் மீது பொருளாதார நெருக்கடி சேராத படி பார்த்துக்கொள்கிறது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

 

கடந்த ஐந்தாண்டுகளில் 237 பெண்களை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இதிலிருந்து விடுவித்துள்ளதாக மோனா தெரிவித்தார். அப்படி வெளியேறிய பெண்கள் பலர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

அதேசமயம், ராம்கலா, கடந்த ஆறு மாதங்களாக இந்த தீய பழக்கத்தை அழிப்பதற்காக போராடுகிறார். இவரே இந்த நடைமுறையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான்.

 

இந்த பழக்கத்தினால் ராம்கலா தனது வீட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது அவர் தனது உயர்கல்வியை படித்துக்கொண்டே, இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி வருகிறார்.

 

“பெண்களை இதிலிருந்து விடுவிப்பது மிகவும் கடினமாக இருக்கும். சமூக அழுத்தங்கள் நிறைய உள்ளன. எங்களிடம் அவர்கள் வந்தவுடன் முதலில் காவல்துறையிடம் புகார் அளிப்போம். பிறகு அந்த மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினரிடம் பேசுவோம். அவர்கள் புரிந்துகொண்டால் அப்பெண்ணுக்கு சட்டத்தின் வாயிலாக அவர்கள் உதவுவார்கள்” என்றார் ராம்கலா.

 

என்னதான் ராம்கலா, மோனா சுஸ்தானி போன்றவர்கள் இந்த தீய பழக்கத்திற்கு எதிராக போராடினாலும், கெளஷல்யா, மங்கிபாய் போன்ற பெண்கள் தங்களது திருமணத்திலிருந்து வெளியேற இன்னும் பல லட்ச ரூபாயை கொடுக்க வேண்டிய நிலை மாறவில்லை.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.