1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (19:38 IST)

ரமோன் மகசேசே விருது: இந்தியப் பத்திரிகையாளர் ரவிஷ்குமாருக்கு விருது - யார் இந்த மகசேசே?

இந்திய பத்திரிகையாளர் ரவிஷ்குமாருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதைப் பெறுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து பேரில் இவரும் ஒருவர்.

மியான்மரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கோ ஸ்வே வின், தாய்லாந்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அங்க்கனா நீலாபஜித், பிலிப்பின்ஸைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரேமுண்டோ புஜன்ட்டே கயாபியாப், வன்முறை மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்த சேவையில் ஈடுபட்டுள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் - கீ ஆகியோரும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நியூயார்க் நகரைச் சேர்ந்த ராக்ஃபெல்லர் சகோதரர்கள் நிதியத்தின் அறங்காவலர்களால், பிலிப்பைன்ஸ் அரசின் ஒப்புதலுடன் 1957 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரமோன் மகசேசே விருது உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் குடியரசின் மூன்றாவது அதிபராக இருந்த ரமோன் மகசேசே பெயரில் இந்த விருது உருவானது.

ரமோன் மகசேசே என்பவர் யார்?


ரமோன் டெல் பியர்ரோ மகசேசே என்பவர் பிலிப்பைன்ஸின் அரசியல் மேதை. 1953 டிசம்பர் 30ல் இருந்து விமான விபத்தில் மரணம் அடைந்தது வரை அந்த நாட்டின் ஏழாவது அதிபராகப் பதவி வகித்தவர்.

கம்யூனிஸ்ட் தலைமையிலான ஹுக்பலஹப் (ஹூக்) இயக்கத்தை வெற்றிகரமாக முறியடித்தவர் என்ற வகையில் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.

கைவினைக் கலைஞரின் மகனான மகசேசே, லியூஜோன் தீவில் இபா நகரில் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றினார்.

பிலிப்பைன்ஸ் அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் ஸ்பெயின் பூர்விகக் குடிகளாக இருந்த நிலையில், பெரும்பாலான மக்களைப் போல மகசேசே மலாய் பூர்வீகக் குடியாக இருந்தார்.

மணிலாவில் ஜோசே ரிஜால் கல்லூரியில் 1933ல் வணிகத் துறையில் அவர் பட்டம் பெற்றார். மணிலா போக்குவரத்து நிறுவனத்தில் பொது மேலாளராக ஆனார்.

இரண்டாம் உலகப் போரின்போது, லியூஜோனில் கொரில்லா தலைவராக அவர் இருந்தார். பிலிப்பைன்ஸை அமெரிக்கா மீண்டும் கைப்பற்றியபோது, தன்னுடைய ஜாம்பலேஸ் மாகாணத்தின் ராணுவ கவர்னராக நியமிக்கப்பட்டார்.

ஹுக்ஸ்களின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக பாதுகாப்புத் துறை செயலராக மகசேசேவை அதிபர் எல்பிடியோ குவிரினோ நியமனம் செய்தார்.

அப்போதிருந்து 1953 வரையில், நவீன கால வரலாற்றில் கொரில்லா போர் முறையை வெற்றிகரமாக முறியடித்தவராக அவர் இருந்தார்.

மக்களின் ஆதரவு இல்லாமல் ஹுக்ஸ்களால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அவர், விவசாயிகளுக்கு நிலம் மற்றும் உபகரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

இதனால் அவர்கள் அரசின் பக்கம் சாய்ந்தனர். ராணுவத்தினர் மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ராணுவத்தை சீரமைத்த அவர், ஊழல் மற்றும் செயல்திறன் இல்லாத அதிகாரிகளை பதவிநீக்கம் செய்தார்.

கொரில்லா போர் முறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக படைகள் நடத்துவதில் சூழ்நிலைக்கேற்ற மாறுதல்களை அவர் வலியுறுத்தினார்.

1953ஆம் ஆண்டு வாக்கில் ஹுக்ஸ்கள் பெரிய அச்சுறுத்தலாக இல்லை என்ற நிலை உருவானது. ஆனால், மகசேசேவின் தீவிரமான நடவடிக்கைகளால் அரசுக்குள் அவருக்குப் பகைவர்கள் உருவானார்கள்.

அதனால், குவிரினோ அரசின் மீது ஊழல் மற்றும் செயலற்ற அரசு என குற்றச்சாட்டு கூறியபோது, பிப்ரவரி 28ல் அவர் ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மகசேசே சுதந்திர சிந்தனையாளராக இருந்தபோதிலும், 1953 தேர்தலில் குவிரினோவுக்கு எதிராக அதிபர் பதவிக்கான வேட்பாளராக அவரை முன்னிறுத்தியது நேஷியோனலிஸ்டா கட்சி. மூன்றாவது கட்சியாக இருந்த கார்லோஸ் பி. ராமுலோ ஆதரவும் இதற்குக் கிடைத்தது.

பிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்வில் ஒவ்வோர் அம்சத்திலும் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று மகசேசே வாக்குறுதி அளித்தார். ஆனால், பணக்காரர்களின் நலனைக் காப்பதில் ஆர்வமாக இருந்த கன்சர்வேட்டிவ் காங்கிரஸ் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பால் அவர் வெறுப்படைந்தார்.

1955 ஜூலையில் ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவு இருந்தபோதிலும், செயலாக்கம் உள்ள நில சீர்திருத்தச் சட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது.

விவசாயிகள் பிரச்சனைகளில் அரசு சரியாக செயல்படாத காரணத்தால், ஹுக்ஸ் இயக்கத்தவர்களுக்கு எதிராக மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு அவர் செய்ய நல்ல விஷயங்களின் பலன் கிடைக்காமல் போனது.

இருந்தபோதிலும், அவருடைய நற்பெயர் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவரை ஊழலில் ஈடுபடுத்த முடியாது என்பதற்காக அவர் பிரபலம் ஆனார்.
வெளிநாட்டுக் கொள்கையில், அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்து, அமெரிக்காவை மகசேசே ஆதரித்தார்.

பனிப்போர் நடைபெற்ற காலத்தில் கம்யூனிஸத்துக்கு எதிராக தீவிரமாக கருத்துகள் தெரிவித்தார். 1954 செப்டம்பர் 8 ஆம் தேதி மணிலாவில் உருவாக்கப்பட்ட, தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்த்தார். அவருடைய அதிபர் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக, விமான விபத்தில் அவர் கொல்லப்பட்டார்.