வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (13:26 IST)

இந்தியாவின் இ-ரூபாய் டிஜிட்டல் கரன்சி எப்படி இருக்கும்? எப்படி பயன்படுத்துவது?

E Currency
இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி சில்லறை வணிகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயம் மற்றும் காகித கரன்சி மதிப்பில் மட்டும் -ரூபாய் எனப்படும் டிஜிட்டர் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் மட்டும் இது அறிமுகமாகியுள்ளது. பின்னர் மற்ற நகரங்களுக்கு இது விரிவுபடுத்தப்படவுள்ளது.

இ-ரூபாய் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று நடப்பு நிதியாண்டிற்கான (2022-23) பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்..

சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவில் மின்னணு ரூபாய் அதாவது CBDC ( சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் நாணயம்) அறிமுகப்படுத்தப்படும் என்று நவம்பர் மாதத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது. இது சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) டிஜிட்டல் ரூபாயில் 'பிளாக்செயின்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடும். இ-ரூபாய் , நாட்டில் பணம் செலுத்தும் முறையை புதிய உயரத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படுகிறது. சாதாரண மக்கள் மற்றும் வணிகர்கள், பல வகையான பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த முடியும்.

டிஜிட்டல் கரன்சி அதாவது ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

ரிசர்வ் வங்கியின் திட்டம் என்ன?

CBDC அதாவது சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியானது, மக்களுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்காக ,மோசடி ஆபத்து இல்லாத மெய்நிகர் (Virtual) கரன்சியாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதில் ரிசர்வ் வங்கிக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. முதலில் டிஜிட்டல் ரூபாயை உருவாக்குவது, பின்னர், எந்த தடையும் இல்லாமல் அதை அறிமுகப்படுத்துவது.

ஆஃப்லைனிலும் டிஜிட்டல் ரூபாய் மூலம் பரிவர்த்தனை செய்யக்கூடியவகையில் ஒரு பயன்முறையை CBDC உருவாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விரும்புகிறது. இதன் மூலம் டிஜிட்டல் ரூபாயை மேலும் அதிகமானவர்கள் பயன்படுத்த முடியும்.

இது காகித நாணயத்தை ஒத்தது. சாதாரண ரூபாயை போன்றே இதன் மதிப்பும் இருக்கும். டிஜிட்டல் கரன்சி என்பது வெளியில் புழங்கும் கரன்சியின் மின்னணு வடிவமாகும்.

ரூபாயை போலவே இதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். மத்திய ரிசர்வ் வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் (Balance sheet) CBDC-யானது, 'பொறுப்பு' (Liability) என காட்டப்படும்.

ரிசர்வ் வங்கி ஏன் டிஜிட்டல் நாணயத்தை கொண்டு வருகிறது?

நாட்டில் புழக்கும் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவைக் குறைக்க ரிசர்வ் வங்கி விரும்புகிறது. அதாவது, நோட்டுகளை அச்சடித்தல், புழக்கத்தில் விடுதல் மற்றும் விநியோகம் செய்வதற்காக ஆகும் செலவைக் குறைக்க ரிசர்வ் வங்கி விரும்புகிறது.

ரிசர்வ் வங்கி கட்டண முறையின் செயல்திறனை அதிகரிக்க விரும்புகிறது. கூடவே அதில் புதுமைகளையும் புகுத்த விரும்புகிறது.

இதன் மூலம், எல்லை கடந்த பணம் செலுத்தும் நடவடிக்கைகளில் புதிய அணுகுமுறை பின்பற்றப்படும்.

டிஜிட்டல் கரன்சி என்பது ஒரு மெய்நிகர் கரன்சியாக இருக்கும். அதில் எந்தவித மோசடி ஆபத்தும் இருக்காது. மக்கள் அதை முழு நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்.

ஆஃப்லைன் அம்சம் காரணமாக மின்சாரம் மற்றும் மொபைல் நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் டிஜிட்டல் கரன்சி வேலை செய்யும்.

டிஜிட்டல் கரன்சி எப்படி இருக்கும்?

தன் டிஜிட்டல் நாணயமான இ-ரூபாய் இரண்டு வடிவங்களைக் கொண்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

முதலாவது, டோக்கன் அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு அடிப்படையிலும் இருக்கும்.

டோக்கன் அடிப்படையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது. அதாவது, இந்த டோக்கனை வைத்திருப்பவர் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார்.


Bir coins


கணக்கு அடிப்படையிலான அமைப்பில் டிஜிட்டல் கரன்சி வைத்திருப்பவர், இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும். உண்மையில் இ-ரூபாய், இந்திய ரூபாயின் டிஜிட்டல் பதிப்பாக இருக்கும்.

ரிசர்வ் வங்கி அதன் இரண்டு இ-ரூபாய் பதிப்புகளை வெளியிடும். வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைக்காக மொத்த விற்பனை பதிப்பு மற்றும் பொது மக்களுக்கான சில்லறை பதிப்பு.

ரிசர்வ் வங்கியின் மறைமுக மாடலின்படி டிஜிட்டல் நாணயம், எந்தவொரு வங்கி அல்லது சேவை வழங்குனருடனும் இணைக்கப்பட்டுள்ள பணப்பையில் (Wallet) இருக்கும்.

-ரூபாய் என்பது கிரிப்டோகரன்சியா?

கிரிப்டோகரன்சிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் (விநியோக லெட்ஜர்), டிஜிட்டல் ரூபாய் அமைப்பிலும் பயன்படுத்தப்படலாம். ஆனால் இது இ-ரூபாயில் பயன்படுத்தப்படுமா என்பதை RBI இன்னும் தெரிவிக்கவில்லை.

பிட்காயின் மற்றும் எத்தேரியம் போன்ற பிட்காயின்கள், தனியார் கிரிப்டோகரன்சிகள் ஆகும். ஆனால் டிஜிட்டல் கரன்சி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அதிக எரியாற்றல் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்காக பிட்காயின் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரம் ரிசர்வ் வங்கியின் இ-ரூபாயில் இந்தப் பிரச்னைகள் இருக்காது.

யார் அதை வழங்குவார்கள், இது எப்படி டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்?

ரிசர்வ் வங்கி இ-ரூபாய் வெளியிடும், ஆனால் வணிக வங்கிகள் அதை விநியோகிக்கும். டிஜிட்டல் ரூபாயின் சில்லறை பதிப்பு, டோக்கன் அடிப்படையிலானதாக இருக்கும். நீங்கள் மின்னஞ்சல் போன்ற இணைப்பை (link) பெறுவீர்கள். அதில் உங்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும்.

-ரூபாய்க்கு வட்டி கிடைக்குமா?

மக்கள் தங்கள் பணப்பையில் ( Wallet) வைத்திருக்கும் இ-ரூபாய்க்கு வட்டி அளிப்பதை தான் ஆதரிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் குறிப்பு கூறுகிறது. ஏனென்றால் மக்கள் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து டிஜிட்டல் கரன்சி வடிவில் வைக்கத் தொடங்குவார்கள். இதன் காரணமாக வங்கி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் உள்ளது.

-ரூபாய் மற்ற டிஜிட்டல் பேய்மெண்ட்டுகளை விட சிறந்ததா?

நீங்கள் CBDC பிளாட்ஃபார்ம் அதாவது இ-ரூபாய் பயன்படுத்தினால் வங்கிகளுக்கு இடையேயான செட்டில்மெண்ட் தேவைப்படாது.

இதன் மூலம் பரிவர்த்தனைகள் உடனுக்குடனும், குறைந்த செலவிலும் செய்யப்படும்.

இது இறக்குமதியாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். அவர்கள் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு இடைத் தரகர் இல்லாமல் டிஜிட்டல் டாலர்கள் மூலம் உடனுக்குடன் பணம் செலுத்த முடியும்.

சாதாரண மக்களுக்கு என்ன பயன்?

வெளிநாடுகளில் பணிபுரிந்து டிஜிட்டல் பணமாக சம்பளம் பெறுபவர்கள் இதன்மூலமாக குறைந்த கட்டணத்தில் தங்கள் உறவினர்களுக்கோ அல்லது பிற நாடுகளில் வசிப்பவர்களுக்கோ பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.

இதன் காரணமாக வெளியில் பணம் அனுப்பும் செலவு, பாதிக்கும் மேல் குறையும் என்று நம்பப்படுகிறது.

எத்தனை நாடுகள் டிஜிட்டல் கரன்சியை கொண்டு வரப்போகிறன?

100க்கும் மேற்பட்ட நாடுகள் டிஜிட்டல் கரன்சிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அட்லாண்டிக் கவுன்சிலின் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி டிராக்கரை மேற்கோள் காட்டி உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட பத்து நாடுகள் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளன.

சீனா 2023இல் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தும். G-20 குழுவின் 19 நாடுகள் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றன

டிஜிட்டல் நாணயம் எவ்வளவு பாதுகாப்பானது?

சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் நாணயமானது ஆபத்து இல்லாத பணம் என்று ஐரோப்பிய மத்திய வங்கி கூறியுள்ளது. இதற்கு அந்தந்த நாடு உத்தரவாதம் அளிக்கிறது.

விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் 27 உறுப்பு நாடுகளில் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

தான் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினால், அது மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் கரன்சியாக இருக்கும் என்று அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் கூறியுள்ளது. இதில் கடன் மற்றும் பணப்புழக்க ஆபத்து இருக்காது.