1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 23 ஜூலை 2018 (14:25 IST)

தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும்: இலங்கை அமைச்சர் சர்ச்சை கருத்து

இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஐனாதிபதியின் மக்கள் சேவையின் எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்." என்று தெரிவித்தார்.

"அண்மையில் யாழில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தனது கட்சியை வளர்கின்றார். எங்களுடைய மக்களை அவர் காப்பற்றவில்லை."

"நாங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்" என்றார்.

ஐனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம் .ஏ.சுமந்திரன்,ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.