வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (17:44 IST)

முத்தையா முரளிதரன் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து பேசியது என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார்.

தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், முத்தையா முரளிதரனிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிலருக்கு அச்சம் என்றால் என்னவென்று தெரியாது என கூறியிருந்த அவர், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போதும் தாம் அச்சத்துடன் இருந்ததாக சுட்டிக்காட்டினார்.
மேலும், தனது வாழ்க்கையில் மிகவும் சிறந்ததொரு நாள் எது என்று கேட்டால், அது 2009ஆம் ஆண்டு (போர் நிறைவடைந்த ஆண்டு) என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


இலங்கையில் காணப்பட்ட அச்ச சூழ்நிலை, இல்லாது செய்யப்பட்ட ஆண்டே அது என அவர் சுட்டிக்காட்டிருந்தார்.

எனினும், இலங்கை மக்கள் மீண்டுமொரு அச்சத்துடனான சூழ்நிலையை சந்தித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்களுக்கு யார் சரியான பாதுகாப்பை வழங்குவார்களோ அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்கும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் போது, தனது தலைவராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க என்ன கூறினாலும், அதனை தான் செய்ததாகவும், ஏனெனில், கிரிக்கெட்டில் அர்ஜுன ரணதுங்க தன்னை பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார் என சிலர் கூறியதை தான் கேட்டதாக தெரிவித்த அவர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தால், நாட்டை ஆட்சி செய்வது யார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு அச்சமின்றியும், சந்தேகமின்றியும் வாழக்கூடிய சூழ்நிலையை யார் உருவாக்குகின்றார்களோ, அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

’திரித்து கூறியுள்ளனர்’

முரளிதரன் பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பிபிசி தமிழ் வினவிய போது, "தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை." என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது, தனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளதாக தெரிவித்த அவர், தனது உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரே நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை இலங்கையில் உருவாகியதாகவே தான் கருத்து வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், நாட்டு மக்கள் மீண்டும் அச்சத்துடனான ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இதற்கான காரணம் என முத்தையா முரளிதரன் கூறுகின்றார்.

இந்த நிலையில், இலங்கையின் பாதுகாப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கூறிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், அவ்வாறான தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.