வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (13:09 IST)

யூடியூப் பார்த்து வேலூர் நகைக்கடையில் கொள்ளையிட்டார்கள் திருடர்கள்: போலீஸ் வெளியிட்ட தகவல்

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சத்தமில்லாமல் சுவற்றில் துளையிடுவது எப்படி என்றுயூடியூப் பார்த்துவிட்டு திருட வந்ததாகவும், பத்து நாட்கள் பொறுமையாக கொள்ளையை அரங்கேற்றினர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள இந்த நகைக்கடையில் கடந்த 15 ஆம் தேதி இரவு, பின்பக்க சுவற்றை துளையிட்டு, இந்தக் கொள்ளை நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஐந்து தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி சுமார் 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

நகைக் கடை உள்ளேயிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் ஸ்பிரே அடித்து, சிங்க முகமுடி மற்றும் தலையில் விக் அணிந்து நகைகளைத் திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் தீவிர விசாரனைக்கு பிறகு கொள்ளையடித்த சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து அவரிடமிருந்து நூறு விழுக்காடு நகைகளை வேலூர் மாவட்ட காவல்துறை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைதானது எப்படி‌ என்பது குறித்து வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி. பாபு கூறுகையில், "வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து ஐந்து நாட்களிலேயே குற்றவாளியைக் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை குற்றவாளியிடம் இருந்து மீட்டுள்ளனர்.

குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான டீக்காராமன் என்பவர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவரை டிசம்பர் 20ஆம் தேதி பிற்பகல் ஒடுகத்தூர் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் செய்த விசாரணையில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொள்ளையடித்த நகைகளை வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் அதனைக் கைப்பற்றினோம்," என்றார்‌ அவர்.

மேலும் இந்த குற்றச் சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏ.ஜி.பாபு தெரிவித்தார். குறிப்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மீது குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதற்கான இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்தனர்.

"இந்த நகைக்கடையில் திருடர்களை குறித்து எச்சரிக்கும் அலாரம் (Burglar Alarm) இருந்தும் அது வேலை செய்யவில்லை. மற்றொரு பெரிய பிழை சிசிடிவி கேமரா வெறும் கடையினுள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததே தவிர கடையின் பின்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்படவில்லை. இதனைச் சாதகமாக பயன்படுத்தி எளிதில் பின் வழியாக குற்றவாளி உள்ளே நுழைந்துள்ளார்.

கட்டட தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர் 10 நாட்கள் திட்டமிட்டு மெல்ல துளையிட்டுள்ளார். ஒவ்வொரு இரவும் வந்து பொறுமையாக துளையிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு காவலாளிகள் காவல் பணியில் இருந்தும் அவர்கள் பின் பகுதிக்குச் சென்று பார்ப்பதில்லை. இதனால் அந்த துளை அவர்கள் கண்களுக்கு படவில்லை," என்று வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி. பாபு கூறினார்.

தொடர்ந்து இந்த விசாரணை குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறியதாவது, "கொள்ளையடித்தவர் எந்த வழியாக தப்பித்து இருக்க முடியும் என்று நாங்கள் கணித்தோம். பிறகு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் இரவு பகல் என 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக ஆராய்ந்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக இருக்கக்கூடிய நபர்களை பின் தொடர்ந்து குற்றவாளியை கண்டுபிடித்துள்ளோம்," என்றார் அவர்.

"கடையின் உள்ளே சென்று கொள்ளையடிப்பதற்கு 10 நாட்கள் தொடர்ந்து மெல்ல கடையின் பின்புறம் துளையிட்டுள்ளார். அதற்காக 'சப்தமின்றி துளையிடுவது எப்படி' என்றும், இதற்கு முன் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்பது பற்றியும் ஆராய்ந்து அந்த தவறுகள் கொள்ளையடிக்கும் போது நிகழாத வண்ணம் இருப்பதற்காக 'யூடியூபில்' உள்ள காணொளிகளைப் பார்த்து கற்றுக்கொண்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒரு சிவ பக்தர். அவர் கொள்ளையடித்தவற்றில் ருத்ராட்ச மாலையை மட்டும் அவர் தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளார். இதை தவிர்த்து மற்ற நகைகளை புதைத்து வைத்திருந்தார். முதலில் கிடைத்த இந்த ருத்திராட்ச மாலையின் மூலமாகவே இந்த குற்றவாளியை பிடித்தோம்," என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 21) பிற்பகல் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதித்துறை நடுவர் ரோஸ் கலா முன்பு சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, "என்னைக் கைது செய்தது என் பெற்றோருக்கு தெரியும். ஆனால் எனக்கு அவர்களது துணை இல்லை. என்னை ஜாமினில் எடுக்க யாரும் வரமாட்டார்கள். எப்போது என்னை வெளியே விடுவீர்கள்," என அவர் நீதித்துறை நடுவரிடம் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து, குற்றவாளிக்கு ஜாமீன் தொடர்பாக உதவி செய்ய இலவச சட்ட உதவி மையத்திற்கு நடுவர் பரிந்துரைத்தார்.

வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நடுவர், குற்றம்சாட்டப்பட்டவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.