புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (08:26 IST)

கொரோனா வைரஸைவிட இந்தியாவில் இந்த நோயால்தான் அதிக உயிரிழப்பு - என்ன காரணம்?

மும்பையில் வசித்து வரும் 41 வயதான பங்கஜ் பவ்னானி, சுமார் ஒரு வருடம் முன்பு வரை நன்றாகவே வாழ்ந்து வந்தார்.

கார்ப்பரேட் உலகில் நல்ல சம்பளத்துடன் வேலை; மனைவி ராக்கி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வாழ்க்கை, நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் , அவருக்கு ட்யூபர்க்ளோசிஸ் அதாவது காசநோய் இருப்பது தெரிய வந்தது.

டிபி, பங்கஜின் நுரையீரலைத்தாக்கியது. ஆறு மாத சிகிச்சைக்குப்பிறகு பங்கஜ் , 80% உடல்நலம் தேறினார். ஆனால், இன்னும் கஷ்டங்கள் வரவிருந்தன.


பிப்ரவரியில் பரிசோதனைசெய்தபோது, காசநோய் பாக்டீரியா , பங்கஜின் ப்ரெயின் அதாவது மூளையை தாக்கியிருப்பது தெரியவந்தது. மூன்று மாதங்களுக்குள் பங்கஜின் கண் பார்வை பறிபோனது. கால்களின் சமநிலை மோசமடையத் தொடங்கியது.

" பொது முடக்கம் முடிந்ததும் ஜூலை 16 ஆம் தேதி எனக்கு ஆறுமணிநேர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொற்று நீக்கப்பட்டது. 10 நாட்கள் மருத்துவமனையில் மிகவும் கடுமையான மருந்துகள் எனக்கு கொடுக்கப்பட்டன. இதே மருந்துகளை ஆண்டு முழுவதும் தொடர வேண்டும் என்ற அறிவுரையுடன் நான் வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்," என்று பங்கஜ் கூறுகிறார்.

இந்த மருந்துகள் கடைகளிலோ, அரசு மருத்துவமனைகளிலோ கிடைக்காததால், ஒரு வாரத்திற்குள் மீண்டும் பெரிய சிக்கல் ஏற்பட்டது.

"காசநோய் சிகிச்சை நடுவில் நின்றுவிட்டால், நோய் குணமடையாது, நோயாளி இறந்துவிடலாம். மருந்துகள் எங்குமே கிடைக்காததால், என் குடும்பத்தில் யாரும் ஐந்து இரவுகள் தூங்கவில்லை. குழந்தைகளுக்கு என்மூலமாக தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம் அதிகரித்து வந்தது ", என்று பங்கஜ் பவ்னானி குறிப்பிடுகிறார்.

பங்கஜின் குடும்பம் மற்றும் அவர் வேலை செய்யும் நிறுவனம் , பிரதமர் அலுவலகம், மகாராஷ்டிரா அரசு, எல்லா பெரிய மருத்துவமனைகள் மற்றும் பல தனியார் நிறுவனங்களிடமும் , மருந்துகளுக்கு வேண்டுகோள் விடுத்தது.

சிக்கல் என்னவென்றால், இந்த மருந்துகள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. கொரோனா வைரஸின் உலகளாவிய நெருக்கடியால் பொருட்கள் வரத்து தடைபட்டது.


மனைவி ராக்கியின் ட்வீட்கள் காரணமாக, இந்த செய்தி விரிவாகப்பரவியது. இறுதியாக மருந்துகள் கிடைத்தன.

"காச நோய் என் உயிரை குடிக்கப்போகிறது என்று சில நாட்கள் நான் நினைத்தேன்," என்று அந்த கடினமான காலத்தை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட பங்கஜ் தெரிவித்தார்.

காசநோய்
ஒவ்வொரு ஆண்டும் உலகில் பதிவாகும் மொத்த காசநோய் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்கிறது. இதன்காரணமாக நாட்டில் ஆண்டுதோறும் 480,000 இறப்புகளும் ஏற்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.,

இந்த புள்ளிவிவரங்களை ஆராயும்போது நிலைமை இன்னும் ஆபத்தானதாக உள்ளது. ஏனெனில் நாட்டில் காசநோய் காரணமாக தினமும் 1,300 இறப்புகள் ஏற்படுவதாக இந்திய அரசின் தரவு தெரிவிக்கிறது..

கடந்த 50 ஆண்டுகளாக காசநோய் தடுப்பு பணியில் இந்தியா ஈடுபட்டிருந்தாலும், அது இப்போதும் சைலண்ட் கில்லர் அதாவது 'அமைதியான கொலையாளி' என்றே அழைக்கப்படுகிறது.

இது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பான மதிப்பீடாகும். இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று ஜனவரி கடைசி வாரத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 24 ஆம் தேதி, நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

கொரோனா நோய்தொற்று காலகட்டத்தில், காச நோயாளிகளின் பதிவு மற்றும் எண்ணிக்கை அறிவிக்கை (தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் உட்பட) எதிர்பாராத வீழ்ச்சியைக் காட்டியுள்ளது மற்றும் நோயின்தாக்கம் கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிட்டது என்று அரசாங்க தரவுகளின் ஒப்பீடு காட்டுகிறது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தவிர, சிகிச்சைக்காக பெரும் எண்ணிக்கையில் காசநோய் பதிவாகும் மாநிலங்களில் பிஹாரும் உள்ளது.

"ஆனால், அனைத்து கவனமும் கோவிட்-19 நோயறிதலுக்கு மாற வேண்டியிருந்தது" என்று பிகாரின் தலைமை காசநோய் அதிகாரி டாக்டர் கே.என். சஹாய் தெரிவிக்கிறார்.

"முன்பே ஊழியர்களின் பற்றாக்குறை இருந்தது. கடந்த மாதங்களில், அவர்கள் கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் வீடு வீடாக மாதிரி சேகரிப்புகள் போன்றவற்றிற்கு மாற்றப்பட்டுள்ளனர். நான் அரசு மையங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன், பெரும்பாலான தனியார் காசநோய் கிளினிக்குகளும் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தின் காரணமாக, கேஸ் நோட்டிஃபிகேஷன் (நோய்எண்ணிக்கை அறிவிக்கை) கணிசமாக அதாவது 30% க்கும் அதிகமாக குறைத்தது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில், பங்கஜ் பவ்னானியைப் போலவே பல நோயாளிகள், மருந்துகள் மற்றும் வசதிகளை பெறமுடியாமல் இன்னல்களுக்கு உள்ளாயினர். பலராலும் மருத்துவமனைகளை சென்றடைய முடியவில்லை.

காணாமல் போனதாகக் கூறப்படும் பலரும் உள்ளனர். அதாவது, இவர்களுடைய சிகிச்சை. நடுவில் நின்றுபோயுள்ளது.

நோய்த்தொற்று ஆபத்து
இப்போது இவர்களால் சமூகத்தில் காசநோய் பரவுவது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.

ஷாகிப் கானின் குடும்பம் (பெயர் மாற்றப்பட்டது) காஜியாபாத்-நொய்டா எல்லையில் உள்ள கோடா கிராமத்தில் மூன்று ஆண்டுகளாக வசித்து வந்தது. இவரது 71 வயது தந்தை டெல்லியில் உள்ள படேல் மார்பு மருத்துவமனையில், காசநோய் சிகிச்சை பெற்று வந்தார்.

தினக்கூலியாக வேலைசெய்யும் ஷாகிப், பொதுமுடக்க காலத்தில் வீட்டை நடத்த சிரமப்பட்டார். மற்ற அண்டைவீட்டாரைப் போலவே அவரும், பிஜ்னோரில் உள்ள தனது கிராமத்திற்கு , தனது குடும்பத்தினர் மற்றும் தந்தையுடன் குடியேறினார்.

"பொது முடக்கத்தின்போது என் தந்தையின் மருந்து தீர்ந்துவிட்டது. சிகிச்சையை மீண்டும் தொடங்க மூன்று வாரங்கள் ஆனது. இப்போது மேலும் 12 மாதங்கள் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்" என்று ஷாகிப் தொலைபேசியில் கூறினார்,

காசநோய் நோயை சரியான நேரத்தில் கண்டறிவது அதன் சிகிச்சையில் முக்கியமானது.

இதற்குப் பிறகுதான், மருந்துகளின் முழு கோர்ஸ் மற்றும் சத்துணவிற்காக, நோயாளிக்கு ஒரு மாதத்திற்கு ஐநூறு ரூபாய் நிதி உதவி அரசிடமிருந்து கிடைக்கிறது.

2025 க்குள் காசநோயை நாட்டிலிருந்து ஒழிப்பதாக நரேந்திர மோதி அரசு உறுதி பூண்டுள்ளது. ஆயினும், காசநோய் சிகிச்சையின் மீது கோவிட்டின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது.

தொற்றுநோயியல் மற்றும் உலக சுகாதாரம் தொடர்பான கனடா பிரிவு ஆராய்ச்சித் தலைவரும், மெக்கில் சர்வதேச காசநோய் மையத்தின் தலைவருமான மது பாய், முழு நிகழ்வையும் ஆய்வு செய்து வருகிறார் . 2025 க்குள் காசநோயை அழிப்பதற்கான இந்தியாவின் இலக்கை , குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டியிருக்கலாம் என்று அவர் தெரிவிக்கிறார்.

கோவிட் காரணமாக, மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டியிருந்தது . அவர்களில் லட்சக்கணக்கான காசநோயாளிகளும் இருந்தனர், அதோடுகூடவே, காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாத நூறாயிரக்கணக்கானோரும் இருந்தனர். இப்போது காசநோய் எண்ணிக்கை அறிவிப்பில் 40% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும் தரவு காட்டுகிறது. ஆகவே, சிக்கல் தீவிரமானது, " என்று பிபிசி இந்திக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

பல வருட காசநோய் சிகிச்சைக்குப்பின்னர் சமீபத்தில் ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்த ரியா லோபோவிற்கும், கோவிட் -19 பற்றிய ஒரு புகார் உள்ளது.

" உலகம், மிகக்கொடியதான இந்த காசநோய் குறித்து சிந்தித்து, கோவிட் -19 போல இதன் மீதும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் எல்லா உயிர்களும் முக்கியம். சிறந்த சிகிச்சை மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகும், காசநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை, ".என்று அவர் கூறினார்,

பொதுமுடக்கம் முடிவடைந்த பின்னர், காசநோய் மீது கவனம் செலுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் பல மாநில அரசுகள் ,முடங்கியுள்ள பணிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டவரைவை தயார் செய்கின்றன.

ஆனால் இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மற்ற நோய்களைப் போலவே இது காசநோய் நோயாளிகளின் பிரச்சினைகளை அதிகரித்துள்ளது.

"கொரோனா நோய் தொற்று எங்கு அதிகரித்தாலும், அங்கு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது. இந்த நிச்சயமற்ற தன்மைக்கு ஒரே ஒரு தீர்வு மட்டுமே உள்ளது. அரசு, காசநோய் நோயாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கான மருந்துகளை வழங்க வேண்டும். இரண்டாவதாக, கோவிட் காலத்தில் காசநோய் சிகிச்சையை தவறவிட்ட நபர்களை கண்டறிய வேண்டும் ," என்று மருத்துவர் மது பாய் கூறுகிறார்.