வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (11:53 IST)

கோழிக்கறி கடன் தராததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்

கடலூரில் கோழி இறைச்சிக் கடை உரிமையாளரை பழி வாங்க, கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது என வாட்சப்பில் தவறான தகவல் பரப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
"கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கோழி இறைச்சி கடை ஒன்றில், இறைச்சி வாங்கி சாப்பிட்ட நபர் ஒருவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர், நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்,"
 
"அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்து, தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என வாட்சப்பில் தகவல் ஒன்று பரவி வந்தது.
நெய்வேலியில் கெரொனா வைரஸ் பரவியதாக வந்த தகவலால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த சம்பவம் கடலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட இறைச்சி கடையில் மக்கள் அனைவரும் இறைச்சி வாங்குவதை தவிர்த்தனர். அப்பகுதியில் வசிக்கும் உறவினர்களும், நண்பர்களும் இது குறித்து தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர். தொடர்ந்து இந்த தகவல் அதிகமாக வாட்சப்பில் வைரலாக வலம் வரவே, இதன் காரணமாக, மனரீதியாகவும் வியாபார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட கோழி இறைச்சி கடை உரிமையாளர், நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
 
தனது கடையில் குறிப்பிட்ட அந்த சிறுவன் அடிக்கடி காசு கொடுக்காமல் கறி வாங்கிக் கொண்டு தகராறு செய்து வந்ததாகவும், ஞாயிறன்று காலை அந்த சிறுவன் இறைச்சி கடன் கேட்டபோது தர மறுத்ததால் தன் கடை மீது களங்கம் ஏற்படுத்த வாட்சப்பில் பொய்யான வதந்தியை பரப்புவதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் "இதனால் எனது கடைக்கு வாடிக்கையாளர் வராமல், நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனது வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து நெய்வேலி தெர்மல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் பரப்பிய சிறுவன் வேண்டுமென்றே வதந்தியை பரப்பியுள்ளது தெரியவந்தது. ஆகவே, வதந்தி பரப்பிய சிறுவன் மீது, தவறான தகவலைப் பரப்புதல் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர்.
 
மேலும் அந்த சிறுவனுக்கு 17வயது என்பதால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளார்.
 
காவல்துறை விசாரணைக்கு பிறகு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க, தவறான தகவல் பரப்பிய அந்த சிறுவன் நடந்தவற்றை விளக்கி காணொளி ஒன்றை வெளியிட்டார்.
 
அதில், "நான் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டேன், அந்த செய்தியில் நான் குறிப்பிட்ட நபர் எனது நண்பன் தான். நான் பரப்பிய செய்தியானது பொய்யான தகவல், எனது நண்பனுக்கு எந்த நோயும் கிடையாது. நாங்கள் விளையாட்டுத் தனமாக இந்த தகவலை வாட்சப் குழுவில் பகிர்ந்தோம், ஆனால் இது பெரிய விஷயமாக மாறிவிட்டது. இதனை யாரும் நம்பவேண்டாம்," என தெரிவித்தார்.