வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (14:42 IST)

ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்!

ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி மீண்டும் ஒரு அரிய கல்லை கண்டறிந்து அதை 20 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றுள்ளார்.
 
தான்சானியாவில் கடந்த ஜூன் மாதம் டான்சானைட் என்னும் ஒரு வகை ரத்தினக் கற்களை கண்டறிந்து ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி மீண்டும் ஒரு அரிய கல்லை கண்டறிந்து அதை 20 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ஆகும்.
 
சானினியூ லாய்ஜெர் என்னும் அந்த சுரங்க முதலாளி ஜூன் மாதம் 15 கிலோ எடை கொண்ட ரத்தினக் கற்களை கண்டறிந்தார் பின் அந்த நாட்டின் சுரங்க அமைச்சகத்துக்கு அதை விற்றதில் 3.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய் அவருக்கு கிடைத்தது.
 
தற்போது அவர் கண்டெடுத்துள்ள டான்சனைட் கல்லின் எடை 6.3 கிலோ கிராம். டான்சானைட் ரக ரத்தினக் கற்கள் வடக்கு தான்சானியாவில் மட்டுமே கிடைக்கும். இவை பொதுவாக ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
பூமியில் கிடைக்கக் கூடிய மிக அபூர்வமான ரத்தினக் கற்களில் ஒன்றாக இது உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்த ரக கற்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். விலைமதிப்புமிக்க இந்தக் கற்களில் பச்சை, சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் நீலம் என பல வகையான நிறங்கள் இருப்பது தான் இவற்றின் சிறப்பம்சம்.
 
இதன் விலையும் அபூர்வத்தன்மையை பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. நிறம் எவ்வளவு தெளிவாக உள்ளதோ அதற்கேற்ப விலையும் அதிகமாகும். டான்சானைட் கற்கள் வடக்கு தான்சானியாவில் மட்டுமே கிடைக்கின்றன.