1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:09 IST)

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: திமுக, அதிமுக வெற்றி நிலவரம்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகிவருகின்றன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 2 இடங்களிலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 5 இடங்களிலும் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது.
 
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
 
இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் 22581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் அறிவிக்கப்பட்டது.
 
இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.
 
மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட ஆட்கள் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23 ஆயிரத்து 978 பதவியிடங்களுக்கு 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
 
இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 77.9 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை 8 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது. 74 இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
 
உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதன் முடிவுகள் சில மணி நேரங்களில்யே தெரிய ஆரம்பிக்கும். மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை பொறுத்தமட்டில் சுமார் ஒரு லட்சம் அளவுக்கு வாக்குகள் இருக்குமென்பதால் இந்த பதவிக்கான முடிவை அறிவிக்க இரவுக்கு மேல் ஆகிவிடும்.
 
இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் 789 இடங்களுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.
 
இதுவரையிலான முடிவுகள்:
 
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 2 இடங்களிலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 5 இடங்களிலும் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது.