செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 7 மே 2014 (12:52 IST)

தாவரங்களுக்கு கூடுதலாகத் தமிழ்ப் பெயர்கள்

தமிழகத்தில் தாவரங்களுக்கு தமிழ் பெயர்களை வைக்கும் ஒரு முயற்சி இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போது பல தாவரங்களுக்கு சொல் வழக்கில் தமிழ்ப் பெயர்கள் இருந்தாலும், இன்னும் நூற்றுக்கணக்கான தாவரங்களுக்கும் அதன் உட்பிரிவுகளுக்கும் தாவரவியில்ரீதியான தமிழ்ப் பெயர்கள் இல்லை என்று இதில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகிறார்கள்.
 
தமிழகத்துக்கே உரிய தாவரங்களுக்கு மட்டுமல்லாமல், வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட தாவரங்களுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டுவதன் மூலம், அதன் புரிதலும் அத்துடன் தொடர்புடைய சூழல் குறித்த புரிதலும் கூடுதலாக ஏற்படும் என இதில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான சென்னை கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர் நரசிம்மன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இப்படியான நடவடிக்கை மூலம் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு அறிவியில் அதிலும் குறிப்பாக தாவரவியலை நன்றாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் எனவும் அதன் மூலம் அவர்களது கல்வியறிவு மேம்படக் கூடும் எனவும் தேசிய பல்லுயிர் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் இருக்கும் டாக்டர் நரசிம்மன் கூறுகிறார்.
 
இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளது என்றும், சென்னையில் ஒரு பூங்காவிலுள்ள அனைத்து மரங்களுக்கும் அதன் தாவரப் பெயர்கள் தமிழில் எழுதி வைக்கப்பட்டுள்ளது குறித்து பல்தரப்பினர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.
 
தாவரங்களுக்கு தமிழ்ப் பெயர்களை வைத்து அது பதிவு செய்யும்போது, பின்னாட்களில் ஆய்வுகளுக்கும், ஒரு இனத்தை அடையாளம் காண்பதில் பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் பேராசிரியர் நரசிம்மன் கூறுகிறார்.
 
அறிவியல் கல்வி தாய்மொழி மூலம் சென்றடையும் போது அது பெரும் வெற்றி பெறும் என்பது பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவ்வகையில் தமிழ் நாட்டிலும் அது பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.