வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 14 மே 2018 (15:27 IST)

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள்

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போர் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரை பணயம் வைத்து தாயகம் திரும்பி வருகின்றனர்.
 
இவர்கள் தாயகம் திரும்ப காரணம் என்ன என்பது குறித்து மண்டபம் அகதிகள் முகாமிற்கு நேரடியாக சென்று விசாரித்தபோது, அவர்களின் பிரதான கோரிக்கை எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே.
 
உள்நாட்டு போரால் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள்
 
இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளை வென்று 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டபோதும் ராமேஸ்வரத்துக்கு அகதிகளின் வருகை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
 
தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.
 
ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தற்போது 539 குடும்பங்களில் ஆண்கள் 680 பேர், பெண்கள் 704 பேர், ஆண் குழந்தைகள் 183 பேர், பெண் குழந்தைகள் 193 பேர் என மொத்தம் 1,760 பேர் வசித்து வருகின்றனர். இதில் கடந்த மாதம் 4 குடும்பங்களில் ஆண்கள் 12 பேர், பெண்கள் 5 பேர்,ஆண் குழந்தை 5 பேர், பெண் குழந்தை 1 உட்பட 23 பேர் இலங்கை திரும்பி செல்ல அனுமதி கோரியுள்ளனர்.
 
இலங்கை சென்று பிடிபட்ட அகதிகள்
 
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக இலங்கை அகதிகள் சட்விரோதமாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடனும் தாயகம் திரும்பி செல்கின்றனர்.
 
இதில் குறிப்பாக அனுமதி பெறாமல் தோணியில் சட்ட விரோதமாகவே அதிகமானோர் இலங்கை சென்று வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மண்டபம் வடக்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர் போர்வையில் திரிகோணமலை பகுதியை சேர்ந்த திரிஷாந் என்ற இலங்கை அகதி மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
பின்னர் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்த போது திரிஷாந் இந்தியா திரும்ப மறுத்து, யாழ்பாணம் நீதிமன்ற வாயிலாக இந்திய துணைத் தூதரக அதிகாரிகளின் அனுமதியுடன் திரிகோணமலையில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
 
இதே போல கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி மண்டபத்தில் இருந்து அனுமதி பெறாத தோணி மூலம் இலங்கை அகதிகள் முகாமில் இருந்த திரிகோணமலை மற்றும் மன்னார் பகுதியை சேர்ந்த ஆறு இளைஞர்கள் தப்பி சென்று சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.
 
பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 5ஆம் தேதி புதுக்கோட்டை முகாமில் இருந்து இரண்டு ஆறு மாத கைகுழந்தைகள் உட்பட நான்கு குழந்தைகள், மூன்று பெண்கள், ஐந்து ஆண்கள் உட்பட பனிரெண்டு அகதிகள் சட்டவிரோதமாக தமிழக அரசின் அனுமதியின்றி உயிரை பனையம் வைத்து இலங்கை சென்றனர். இவர்கள் நெடுந்தீவுக்கு வடகிழக்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையால் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தால் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சட்ட விரோதமாக அழைத்துச் சென்ற படகு ஓட்டிகள் இரண்டு பேர் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
தமிழக முகாமில் இருந்து ஏன் தாயகம் திரும்புகின்றனர்?
 
இது குறித்து மண்டபம் முகாமில் உள்ள மாசிலாமணி பிபிசி தமிழிடம் பேசியபோது, "வழக்கு உள்ளவர்களால் அரசின் அனுமதியுடன் இலங்கை செல்ல முடியாது, அப்படிப்பட்ட சிலர் எங்கள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக சென்றுள்ளனர்.''
 
மேலும்,'' நாங்கள் இலங்கைக்கு செல்ல அரசிடம் அனுமதி கேட்டு பதிந்தால் கூட, அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்வதால் பலர் சட்டவிரோதமாக செல்கின்றனர்.'' என்கிறார்.
 
மண்டபம் முகாமில் வசித்து வரும் மாசிலா தேவி, "நாங்கள் உயிரை காப்பற்றி கொள்ள இந்தியா வந்த போது ஆவணங்கள் எல்லாம் கடலில் போய்விட்டது. தற்போது மீண்டும் இலங்கைக்கு செல்ல கடவு சீட்டு பெற முடியவில்லை. அரசு நாங்கள் வந்த போது 'அகதி' என பதிந்த ஆவணத்தை வைத்து கடவுச்சீட்டு வழங்கினால் கள்ள தோணியில் இலங்கை செல்ல தேவை இல்லை," என்று கூறினார்.
 
கடந்த பதினைந்து ஆண்டுகளாக மண்டபம் முகாமில் அகதியாக வாழ்ந்து வரும் லோகநாதன், "எங்களில் நிறைய பேருக்கு இலங்கை செல்ல விருப்பம் இல்லை. இந்தியாவில் இருக்கதான் விரும்புகிறோம். அரசு எங்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மறுப்பதால், எத்தனை ஆண்டுகள் முகாமில் இருந்தாலும் அகதியாகதான் இருக்க வேண்டும் என்பதால் நாட்டுக்கு திரும்ப செல்கிறோம்." என்கிறார்.
 
கடவுசீட்டு எடுக்க என்ன வேண்டும்?
 
"முதலில் பிறப்பு சான்றிதழ், அடுத்ததாக அகதி சான்றிதழ், பின்னர் போலீஸ் தரப்பில் வழங்க கூடிய தடையில்லா சான்று, இதனை தூதரக அலுவலகத்தில் சமர்பித்தால் அவர்கள் அனுமதி சீட்டு வழங்குவார்கள். அதனை எங்களது தொண்டு நிறுவனத்தில் வழங்கினால் நாங்கள் இலங்கை செல்ல பயண சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்படும்." என்கிறார் ஒப்பர் தொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த மாலா.
 
ஒப்பர் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மதிவாணன், "இலங்கையில் இன பிரச்சனையின்போது அங்கு இருந்து அதிகமானோர் இந்தியா வந்து முகாமில் வாழ்ந்து வந்தனர். பின்னர் 45 சதவீதம் மக்கள் மீண்டும் இலங்கைக்கே சென்றுவிட்டனர். இங்கு பிறக்கும் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் இருந்தால் அவர்கள் இலங்கை திரும்பி செல்லும்போது இலங்கை குழந்தையா அல்லது இந்தியக் குழந்தையா என்ற நிலை உருவாகிறது. அதனால் எங்கள் நிறுவனம் சார்பில் தாய் தந்தையின் பிறப்பு சான்று மற்றும் திருமணச் சான்றை பெற்று அந்த குழந்தைக்கு பிறப்பு சான்று எடுத்து தருகிறோம். அப்படி பெற்றால் மட்டுமே அந்த குழந்தையால் இலங்கையில் குடியுரிமை பெற்று வாழ முடியும்." என்று தெரிவித்தார்.
 
பிபிசி தமிழிடம் பேசிய மண்டபம் அகதிகள் முகாம் துணை வட்டாச்சியர் (மறுவாழ்வு) ரவி, "உரிய ஆவணங்களை சமர்பித்தால் அரசே நடவடிக்கை எடுத்து தொண்டு நிறுவனம் மூலம் இலங்கைக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்கும். சட்டவிரோதமாக தப்பி செல்லும்போது பிடிக்கப்படும் நபர்கள் கடவுச் சீட்டு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள். இலங்கை செல்ல உரிய ஆவணங்கள் வழங்கினால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒரு மாத காலத்தில் கடவுச் சீட்டு வழங்கப்படும்," என்றார்.