வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (15:12 IST)

இதயத்துடிப்பை எகிற வைத்த நியூசிலாந்து - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா

India -australia test
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மீண்டும் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றதன் மூலம் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்ற ஐசிசி அறிமுகப்படுத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கௌரவமிக்கதாகக் கருதப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, தோல்வி, டிரா ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கான அணிகள் தேர்வாகின்றன. அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதப்போகும் அணி எது என்பதற்கான போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இருந்தன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றால் யாருடைய தயவும் இன்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி தொடரை அடுத்தடுத்து வெற்றியுடன் தொடங்கி நம்பிக்கையுடன் இருந்தது.

ஆனால், இந்தூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதால் மற்ற அணிகளின், குறிப்பாக நியூசிலாந்து - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவை எதிர்நோக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேநேரத்தில், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. இதனால், இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்டின் முடிவை இலங்கை ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் வெகுவாக எதிர்நோக்கியிருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ரன்களையும் நியூசிலாந்து அணி 373 ரன்களையும் சேர்த்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 302 ரன்களில் ஆட்டமிழந்ததால், நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நான்காவது நாளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை எடுத்திருந்த நியூசிலாந்து அணி கடைசி நாளில் 257 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.

நியூசிலாந்தின் வெற்றியை இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, 5வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணியோ, சிறிது நேரத்திலேயே டாம் லாத்தம், ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

இதனால், சோர்ந்து போயிருந்த இந்திய ரசிகர்களின் மனதில், அடுத்து வந்த நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டெரைல் மிட்செல் பால் வார்த்தார். ஒருநாள் போட்டிகளைப் போல அதிரடி காட்டிய டெரைல் மிட்செல் சிக்சர், பவுண்டரிகளை விளாசி நெருக்கடியை குறைத்தார்.

மறுபுறம், நட்சத்திர வீரர் கனே வில்லியம்சனும் நிலைத்து ஆடிய அதேநேரத்தில், ஏதுவாக பந்துகளை விளாசவும் தவறவில்லை. கனே வில்லியம்சன் - டெரைல் மிட்செல் ஜோடியின் அபார ஆட்டத்தால் ஆட்டம் மெல்ல மெல்ல நியூசிலாந்து வசமாவது போல் தோன்றியது.

ஆனால், டெரைல் மிட்செல் ஆட்டமிழந்ததும் ஆட்டம் தலைகீழாக மாறியது. டெரைல் மிட்செல் 86 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் குவித்து ரஜிதா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, டாம் ப்ளன்டெல், மிக்கேல் பிரேஸ்வெல், டிம் சவுதி, மாட் ஹென்ரி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித், ஜோரூட் போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் வரிசையில் வைத்துப் பார்க்கப்படும் கனே வில்லியம்சன் களத்தில் நிலைத்து நின்றது, நியூசிலாந்து ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களுக்கும் நம்பிக்கை கொடுத்தது. அந்த நம்பிக்கையை அவரும் காப்பாற்றினார்.

கடைசி 2 ஓவர்களில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டதால் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர். கடைசிக்கு முந்தைய ஓவரில் டிம் சௌதி ஆட்டமிழந்து வெளியேறிய போது அந்த அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டன.

இதனால், ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அந்த ஓவரில் நியூசிலாந்து அணி மேலும் 4 ரன்களைச் சேர்க்க, அந்த அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டன.

நிமிடத்திற்கு நிமிடம் ஆட்டம் பரபரப்பாக நகர, கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை கனே வில்லியம்சன் அடித்துவிட்டு இரண்டாவது ரன் எடுக்க முயல்கையில் மறுமுனையில் இருந்த ஹென்றி ரன்அவுட்டானார்.

கடைசி 3 பந்துகளில் நியூசிலாந்து அணிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்த பந்தை கனே வில்லியம்சன் பவுண்டரிக்கு விளாசி நெருக்கடியைத் தணித்தார். அஷிதா பெர்னாண்டோ வீசிய அடுத்த பந்தை வில்லியம்சன் அடித்தாட முயலவே, பந்து பேட்டில் படவில்லை.

கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், அஷிதா பெர்னாண்டோ லெக் சைடில் வீசிய பந்தை கனே வில்லியம்சன் மீண்டும் தவறவிட்டார். பந்தை இலங்கை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா பிடித்துவிட்டாலும்கூட நியூசிலாந்து வீரர்கள் வெற்றிக்கான ரன்னை எடுக்க ஓடினர்.
New Zealand

இதையடுத்து, ஸ்டம்பை நோக்கி நிரோஷன் டிக்வெலா பந்தை எறிய, அது ஸ்டம்பை தாக்கவில்லை. பிட்சின் நடுப்பகுதியில் இருந்து பந்தைப் பிடித்த பந்துவீச்சாளர் பெர்னாண்டோ, நான்-ஸ்டிரைக்கர் முனையில் ஸ்டம்பை நோக்கி எறிய, அது குறி தவறாமல் ஸ்டம்பை பெயர்த்தது. அதேநேரத்தில், கிரீசுக்கு சற்று முன்பிருந்து கனே வில்லியம்சன் பாய்ந்து உள்ளே வந்து விழுந்தார்.

இலங்கை வீரர்கள் ரன் அவுட் கேட்டு முறையிட, மூன்றாவது அம்பயரின் முடிவை நடுவர் நாடினார். வீடியோ ரிவியூவில், பந்து ஸ்டம்புகளை தாக்குவதற்கு முன்பே கனே வில்லியம்சன் கிரீசுக்குள் வந்துவிட்டது தெளிவாகவே, நியூசிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அந்த அணி இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கடைசி வரை பரபரப்பாக நகர்ந்த இந்த டெஸ்டில், கடைசி பந்தில் எக்ஸ்ட்ரா வகையில் அதுவும் கிரீசுக்குள் கனே வில்லியம்சன் டைவ் அடித்து வந்து அந்த அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அவரது அந்த டைவ்தான், இந்திய அணிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது.

ஆம். முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி பெற்ற வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இலங்கை அணிக்கு இருந்த வாய்ப்புகளைப் பறித்துவிட்டது. அந்த வாய்ப்பு இந்தியாவுக்கா? இலங்கைக்கா? என்றிருந்த இழுபறி நியூசிலாந்து வெற்றியின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட், நியூசிலாந்து - இலங்கை மோதும் இரண்டாவது டெஸ்ட் ஆகியவற்றின் முடிவுகள் இந்த வரிசையில் எந்த வகையிலும் பாதிக்காது.

ஆகவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை நடக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மழை அல்லது வேறு காரணங்களால் ஆட்டம் தடைபட்டால், அந்த நாளில் ஆட்டம் தொடரும்.

2021ஆம் ஆண்டு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்திய போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்து நியூசிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்த இந்திய அணி, தனக்குக் கிடைத்துள்ள இரண்டாவது வாய்ப்பில் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய அளவில் ரன் குவிக்காமல் திணறி வந்த விராட் கோலி சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியிருப்பதும், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் போன்ற மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டமும் நம்பிக்கை தருவதாக உள்ளது.

அத்துடன், பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதும் இந்திய அணிக்கு உத்வேகம் தருவதாக அமையும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.