வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2023 (11:24 IST)

மும்பை இந்தியன்ஸ்: 5 முறை சாம்பியன் தடுமாறுவது ஏன்? - அர்ஜுன் டெண்டுல்கர் ஆட்டம் எப்படி?

ஐ.பி.எல். தொடரில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் டாப் கிளாஸ் ஆட்டத்தை விளையாட்டை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அதிரடியான பேட்டிங், பந்துவீச்சில் துல்லியம், சீராக விக்கெட்டுகளை வீழ்த்தியது போன்ற காரணங்களால் அந்த அணியின் வெற்றி எளிதாகிப் போனது.
 
பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் அசத்தலாக செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் நேற்றைய ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை, அந்த அணியின் பலவீனமாக பந்துவீச்சு இம்முறை அப்பட்டமாக வெளிப்பட்டது. முதன் முறையாக பேட்டிங் வாய்ப்பு பெற்ற அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முயற்சியிலேயே தந்தை சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார்.
 
குஜராத் டைட்டன்ஸ் அசத்தல் தொடக்கம் குஜராத் டைடன்ஸ் அணியின் வெற்றிக்கு சுப்மான் கில், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அபினவ் மனோகர், திவேட்டியா, மில்லர் ஆகியோரின் வலுவான பேட்டிங் முக்கியக் காரணம். பேட்ஸ்மேன்கள் அமைத்துக் கொடுத்த தளத்தில் பந்துவீச்சாளர்களும் லாவகமாக பந்துவீசியது, வெற்றியை எளிதாக்கியது.
 
குஜராத் அணியின் தொடக்கஜோடி சுப்மான் கில், விருதிமான் சாஹா இந்த சீசனில் 3 ஓவர்களுக்கு மேல் நிலைத்தது இல்லை, இந்த ஆட்டத்திலும்அப்படித்தான் நிகழ்ந்து. ஆனால், தனித்தனியாக இருவரும்தங்களின் திறமையை நிரூபித்து ரன் சேர்க்கத் தவறவில்லை.
 
கில் விரைவாக வெளியாறினால் சாஹா ஸ்கோர் செய்தார், சாஹா வெளியேறிய நிலையில் நேற்று கில் ரன்களைக் குவித்து 34பந்துகளில் அரைசதம் அடித்து 54 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
 
நடுவரிசை பேட்ஸமேன்கள் ஹர்திக் பாண்டியா(13), விஜய் சங்கர்(19) என பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
 
மில்லர் “தி கில்லர்”
ஆனால், அபினவ் மனோகர், மில்லர் இருவரும் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் சேர்ந்து சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து 35 பந்துகளில் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தனர்.
 
12 ஓவர்கள்வரை குஜராத் அணி 100 ரன்களைக் கூட எட்டவில்லை 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள்தான் சேர்த்திருந்தது. ஆனால் மில்லர், மனோகர் கூட்டணி ரன் வேகத்தை டாப் கியருக்கு மாற்றியது. சாவ்லாவின் 15ஓவரில்2 பவுண்டரி, சிக்ஸர் என 17 ரன்களை மனோகர் குவித்தார்.
மெரிடித் வீசிய 17-வது ஓவரில் மில்லர் இரு பவுண்டரிகள் உள்ளிட்ட 13 ரன்கள் குவித்தார். கேமீருன்வீசிய 18வது ஓவரில் மனோகர் 2 சிக்ஸர்கள், மில்லர் ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் விளாசினர்.கடைசிக் கட்டத்தில் ராகுல் திவேட்டியா விளாசல்
அதன்பின் மனோகர்(42) ஆட்டமிழந்தபின் திவேட்டியா நுழைந்து பேட்டை சுழற்றினார். மெரிடித் வீசிய 19வது ஓவரில் திவேட்டியா ஒரு சிக்ஸர், மில்லர் இரு சிக்ஸர்கள் என 19 ரன்கள் சேர்த்தனர். மெஹர்டார்ப் வீசிய 20வது ஓவரில் திவேட்டியா இரு சிக்ஸர்கள் விளாசி 5 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார்.
 
குஜராத் நடுவரிசை பேட்ஸ்மேன்களின் கடைசி 4 ஓவர்கள் அளித்த பங்களிப்பை, பந்துவீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு துல்லியமாகப் பந்துவீசியதுதான்வெற்றிக்குக் காரணமாகும். கடைசி 4 ஓவர்களில் குஜராத் அணி 70 ரன்கள் சேர்த்தது, இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். அதுமட்டுமல்லாமல், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டேவிட் 3 பேரும் ஆட்டமிழந்தபோதே, ஆட்டத்தின் வெற்றி குஜராத் கரங்களுக்குச் சென்றுவிட்டது.
மும்பையின் பலவீனமான பந்துவீச்சை அடித்து நொறுக்கிய குஜராத்
மும்பை அணியின் டெத் ஓவர் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி 5 ஓவர்களில் 96 ரன்களை வாரி வழங்கிய மும்பை இந்தியன்ஸ், இந்த ஆட்டத்தில் கடைசி 4 ஓவர்களில் 70 ரன்களைக் கொடுத்தது. டேவிட் மில்லர், திவேட்டியா, அபினவ் மனோகர் காட்டிய அதிரடியால் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் உயர்ந்தது.
 
வலுவான, துல்லியமான டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் இருந்திருந்தால், ரன்கள் செல்வதைத் தடுத்திருக்கலாம். குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் குவிப்பும் வேகத்துக்கு ஸ்பீல் பிரேக்கர் போட்டிருக்கலாம்.
 
அர்ஜூன் டெண்டுல்கரின் ஆட்டம் எப்படி?
கடந்த ஆட்டத்தில் டெத் ஓவரில் அர்ஜூன் டெண்டுல்கர் ஓவரில்தான் 31 ரன்கள் விளாசி பஞ்சாப் கிங்ஸ் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. ஆதலால், அதே தவறை இந்த ஆட்டத்தில் செய்யக்கூடாது என்பதிலும், குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் இருக்கும் ஃபார்மைப் பார்த்தும் அர்ஜூனுக்கு 2 ஓவர்களோடு ரோஹித் சர்மா நிறுத்திக்கொண்டார்.
 
ஐ.பி.எல்.லில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே தந்தை சச்சின் டெண்டுல்கரை மிஞ்சிவிட்டார் அர்ஜூன் டெண்டுல்கர். 2008ல் சச்சின் தனது ஐபிஎல் அறிமுக ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 12 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். ஆனால், நேற்றய ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் 13 ரன்கள் சேர்த்து தந்தையைவிட கூடுதலாக ஒரு ரன் சேர்த்து வெளியேறினார்.
மும்பைக்கு நெருக்கடி தந்த ஷமி, பாண்டியா
சேஸிங்கில் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திச் சென்ற மும்பை அணிக்கு தொடக்கத்திலிருந்து மொஹம்மது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அளித்த நெருக்கடியான பந்துவீச்சு கைமேல் பலன் அளித்தது.
 
ரன் அடிக்க வேண்டும், பவர்ப்ளேயில் ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும், அழுத்தமும் இஷான் கிஷன், ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் தெரிந்தது. ஆனால், ஷமியின் டெஸ்ட் போட்டி பந்துவீச்சும், துல்லியமான லைன் லென்த்தும் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்னமாக இருந்தது.
 
ஹர்திக் பாண்டியாவும் 145கி.மீ வேகத்தில் அவுட் ஸ்விங்குகளை வீசி, தன் பங்கிற்கு பட்டையைக் களப்பினார். அதற்கு ஏற்றார்போல், ரோஹித் சர்மா(2) விக்கெட்டை தூக்கியவுடன் தனது வேலை முடிந்துவிட்டது என்ற ரீதியில் ஹர்திக் தனது பந்துவீச்சை நிறுத்தினார்.
 
முகமது ஷமி மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சு
நேற்றைய ஆட்டத்தில் முகமது ஷமியின் பந்துவீச்சு மாஸ்டர் கிளாஸ் என்று கூற வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஷமி பந்துவீச்சில் இருக்கும் துல்லியம், வேகம், ஸ்விங் திறன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும். ஷமியின் பந்துவீச்சை எதிர்கொண்டு, பந்து ஸ்விங் ஆவதைப் பார்த்து ரோஹித் சர்மா உதிர்த்த புன்னகையே அதற்கு சாட்சி.
 
இஷான் கிஷனுக்கு டெஸ்ட் பவுலிங்கை ஷமி வீசி, மிரளச் செய்தார். உடம்பை உரசிச் செல்லும் லெக் கட்டர், அவுட் ஸ்விங்கால் இஷான் கிஷன் அச்சப்பட்டார். இதனால் பவர்ப்ளேயில் இஷான் கிஷன் 17 பந்துகளில் வெறும் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஷமி 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்தார், இதில் 14 டாட் பந்துகளாகும். அதாவது ஏறக்குறைய 2 ஓவர்கள் மெய்டன்களாகும்.
 
10 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரி - மும்பை மந்தம்
 
வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்ததால், ஹர்திக் பாண்டியா, ஷமி களம் கண்டு மும்பை பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பதை கட்டிப்போட்டனர். இதனால் பவர்ப்ளேயில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 29 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது.
 
ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி பவர்ப்ளேயில் ஒருவிக்கெட்டை இழந்து 50 ரன்கள் சேர்த்திருந்தது. 10 ஓவர்கள் வரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே சேர்த்திருந்தது.
 
இதே குஜராத் டைட்டன்ஸ் அணி 10 பவுண்டரிகளை விளாசி இருந்தது. இதிலிருந்தே குஜராத் பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைத் தெரிந்து கொள்ளலாம்.
 
200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும்போது ஓவருக்கு ஒரு சிஸ்கர், பவுண்டரி கட்டாயமாகும். ஆனால், 10 ஓவர்களாக ஒரே பவுண்டரியை வைத்துக்கொண்டு சமாளிப்பது மும்பை வெற்றிக்கு உதவாது.
 
நூர் , ரஷித்கான் மிரட்டல்
பவர்ப்ளேவுக்கு அடுத்தார்போல் அடுத்த 8 ஓவர்களை ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், நூர் முகம்மது ஆகியோர் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். நடுப்பகுதி ஓவர்களில் ராஜ்ஜியம் செய்த இருவரின் பந்துவீச்சை சமாளித்து ஆடி ரன் சேர்க்க மும்பை பேட்ஸ்மேன்களால் முடியவில்லை, ரன் அடிக்க முயற்சி்த்தபோது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
 
குறிப்பாக இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து மிரட்டல் ஃபார்மில் இருக்கும் திலக் வர்மாவை 2 ரன்னில் ரஷித் கான் வெளியேற்றினார். இந்த சீசனில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, ரஷித் கான் ஊதா நிறத் தொப்பியையும் வென்றார்.
 
ஆபத்தான பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ்(23), கேமரூன் க்ரீன்(33), டிம் டேவிட்(0) ஆகியோரின் விக்கெட்டுகளை நூர் முகம்மது கைப்பற்றி அசத்தினார். இதில் நூர் முகம்மது வீசிய 11வது ஓவரில் க்ரீன், சூர்யகுமார் ஆட்டமிழந்தவுடன் ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் கரங்களுக்கு மாறியது.
 
மும்பையை வெகுவாக பாதித்த 'டாட்' பந்துகள்
இந்த ஆட்டத்தில் மட்டும் மும்பை பேட்ஸ்மேன்கள் 51 டாட் பந்துகளை விட்டுள்ளர், ஏறக்குறைய 9 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் ரன் சேர்க்கவில்லை என்று அர்த்தம். இதுபோன்ற சவாலானஸ்கோரை விரட்டும்போது, டாட் பந்துகள், ரன் வேகத்தை மட்டுப்படுத்திவிடும். ஆனால், குஜராத் அணியைப் பொறுத்தவரை 35 டாட் பந்துகள்தான்விட்டுள்ளனர்.
 
மும்பை பேட்ஸ்மேன் நேஹல் வதேரா மட்டும் தனியாகப் போராடி 40 ரன்கள் சேர்த்து மோகித் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
 
வலுவான பேட்டிங் வரிசை இருந்தும் தோல்வி
தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ இந்த தோல்வி வருத்தத்தை அளிக்கிறது. கடைசி ஓவர்கள்வரை ஆட்டத்தைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றோம், ஆனால் கடைசியில் அதிக ரன்களைவிட்டுவிட்டோம். பேட்டிங்கில் எங்கள் செயல்பாடுகளை சரி செய்வது அவசியம்.
 
எது சரி, யார் சரியான பேட்ஸ்மேன் என்பதை கண்டறிந்து களமிறக்குவது அவசியம். ஆனால், அதைச்செய்யவில்லை, அதிகமான ரன்களையும் விட்டுவிட்டோம். ஒவ்வொரு அணியும் வித்தியாசமான பலத்துடன் இருப்பதை பார்க்கிறீர்கள்.
 
எங்களிடமும் வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது, இந்த இலக்கையும் எட்ட முடியும். ஆனால், இந்த ஆட்டத்தில் பேட்டிங் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்கவில்லை. இரவில் பனியும் லேசாக இருந்தது, நாங்கள் நிதானமாக பேட் செய்திருந்தால், நிச்சயம் இந்தஸ்கோரை சேஸிங் செய்திருப்போம். எங்களின் தொடக்கம் சரியில்லாமல் இருந்தது. 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும் போது, தொடக்கத்தில் சொதப்பில் ஒன்றும் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.
 
ரோஹித்துக்கு ஓய்வு தேவையா?
வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க இருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து ரோஹித் சர்மாவுக்கு சிறிது ஓய்வு தேவை என்று சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
 
சுனில் கவாஸ்கர் அளித்த ஆலோசனையில் “ மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள் தேவை என்று நான் விரும்புகிறேன்.
 
நான் நேர்மையாகக் கூறுவது என்னவென்றால், சில போட்டிகளுக்கு ரோஹித் சர்மா ஓய்வு எடுத்துக்கொள்ளலாம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தன்னை தயார்படுத்தலாம். அதன்பின் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டங்களில் ரோஹித் ஆடலாம். இப்போதுள்ள நிலையில் ரோஹித் சர்மா அவரின் பேட்டிங் ஃபார்மைத் தக்கவைக்க சிறிது ஓய்வு தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
 
நிச்சயமாக இதுபோன்ற மோசமான ஃபார்மில் இருக்கும்போது, ஒரு பேட்ஸ்மேன் சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு, போதுமான பயிற்சி எடுத்துத்து களம் காணும்போது, அவரின் இழந்த ஃபார்மை மீட்கமுடியும்.
 
எதையும் திட்டமிடுவது இல்லை
குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ கேப்டன்ஷிப்பில் முன்கூட்டியே திட்டமிடுவதைவிட, அந்தந்த நேரத்துக்கு ஏற்றார்போல்தான் நான் முடிவு எடுப்பேன். அதுதான் என் வெற்றிக்கு காரணம். கேப்டன்ஷிப் என்பது வித்தியாசமானது.
 
ரஷித் கான், நூர் இருவரும் கிரீன், டேவிட் விக்கெட்டுகளை வீழ்த்தி, ரன் வேகத்தை குறைத்துவிட்டனர். அபினவ் பேட்டிங் அருமையாக இருந்தது, அவரின் உழைப்பு தெரிகிறது. கடந்த ஆண்டைவிடஇந்த ஆண்டு சிறப்பாக பேட் செய்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் முன்னேறிச் செல்ல விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்
 
மும்பையை பழிதீர்த்து 2-வது இடத்திற்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்
கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஒருமுறை மட்டுமே மோதியிருந்தன. அதில் சில ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. அந்தத் தோல்விக்கு இந்தமுறை குஜராத் டைட்டன்ஸ் பழிதீர்த்துவிட்டது.
 
இந்த வெற்றி மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
 
புள்ளிக்கணக்கில் சிஎஸ்கே அணிக்கு இணையாக குஜராத் டைட்டன்ஸ் இருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
 
மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த இரு தோல்வியால், 7-வது இடத்துக்குச் சரிந்தது. 7 போட்டிகளில் 3வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா படை உள்ளது.