செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (14:48 IST)

சீன திறன்பேசிகளில் பதியப்பட்ட மால்வேர்கள் - பயனர்களின் பணம் மாயம்

ஆப்ரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சீன அலைபேசிகளில் நிறுவப்பட்டிருந்த மால்வேர்கள் (தீங்கு நிரல்கள்) பயன்பாட்டாளர்களின் ஒப்புதல் பெறாமலேயே சந்தா செலுத்தும் சேவைகளை தொடங்கியது கண்டறியப்பட்டுள்ளது.

மோசடி தடுப்பு நிறுவனமான அப்ஸ்ட்ரீம் எத்தியோப்பியா, கேமரூன், எகிப்து, கானா மற்றும் தென்னாப்பிரிக்காவில் விற்கப்பட்ட 53,000 டெக்னோ என்னும் சீன நிறுவனத்தின் அலைபேசிகளில் தீங்கிழைக்கும் மென்பொருளை கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக பஸ்ஃபீடு செய்தி நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ள அந்த அலைபேசி தயாரிப்பு நிறுவனம், தங்களுக்கு தெரியாமலே விநியோக சங்கிலித் தொடரின்போது இந்த தீங்கிழைக்கும் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

"மிகவும் எளிதில் ஏமாற்றப்பட்டக் கூடியவர்களை" குறிவைத்து இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக மோசடி தடுப்பு நிறுவனமான அப்ஸ்ட்ரீம் தெரிவித்துள்ளது.

"குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வாங்கிய அலைபேசிகளில் இந்த மால்வேர் நிறுவப்பட்டிருப்பது, இதை மேற்கொண்டவர்களின் எண்ணத்தை தெள்ளத் தெளிவாக வெளிக்காட்டுகிறது" என்று கூறுகிறார் அப்ஸ்ட்ரீமின் செக்யூர்-டி என்னும் பிரிவின் தலைவர் ஜெஃப்ரி கிளீவ்ஸ்.

ஆப்பிரிக்க நாடுகளில் விற்கப்பட்ட அந்த சீன ஆண்ட்ராய்டு திறன்பேசிகளில் கண்டறியப்பட்டுள்ள ட்ரைடா என்ற மால்வேர் xHelper எனப்படும் தீங்கிழைக்கும் குறியீட்டை நிறுவிய பின்னர், சந்தா சேவைகளைக் கண்டறிந்து பயனர்களுக்கே தெரியாமல் அவர்களின் சார்பாக முறைகேடாக கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

இவ்வாறாக மால்வேர் விடுக்கும் கோரிக்கை வெற்றிகரமாக நிறைவேறினால், அது பயன்பாட்டாளர்களின் ப்ரீபெய்டு அழைப்பு நேர ஒதுக்கீட்டிலிருந்து கழிக்கப்படுகிறது. பெரும்பாலான வளரும் நாடுகளில் இந்த வழிமுறையை பயன்படுத்திதான் மின்னணு சேவைகளுக்கான பணம் செலுத்தப்படுகிறது.

இதுபோன்று, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட டெக்னோ திறன்பேசிகளில் "சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை" கண்டறிந்துள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

டெக்னோ திறன்பேசிகளை வடிவமைக்கும் டிரான்ஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சீனாவின் முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர் மட்டுமல்ல, விற்பனை அடிப்படையில் இது ஆப்பிரிக்காவின் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது என சந்தை ஆய்வு நிறுவமான ஐடிசி கூறுகிறது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்துள்ள டெக்னோ மொபைல் நிறுவனம், இந்த பிரச்சனை "உலக அளவில் நிலவிய பழைய மற்றும் தீர்க்கப்பட்ட பாதுகாப்பு பிரச்சனை" என்றும், இதற்கு 2018ஆம் ஆண்டு மார்ச் மாதமே தங்களது நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டதாகவும் கூறியுள்ளது.

"இப்போது இந்த மால்வேர் சிக்கல்களை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்கள், உடனடியாக மேம்படுத்தப்பட்ட மென்பொருளை இணையம் வாயிலாக நிறுவிக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். மேலும், பயனர்கள் டெக்னோவின் சேவை மையங்களையும் தொடர்பு கொள்ளலாம்" என்று அந்த நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

"நுகர்வோரின் தரவு பாதுகாப்புக்கு நாங்கள் அதிமுக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒவ்வொரு அலைபேசியிலும் நிறுவப்படும் எந்தவொரு மென்பொருளும் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டே அனுமதிக்கப்படுகிறது." என்கிறது அந்நிறுவனம்.

இது முதல் முறையல்ல

சீன திறன்பேசிகளில் மால்வேர்கள் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுவது இது முதல்முறையல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மற்றொரு சீன ஆண்ட்ராய்டு திறன்பேசியில் இதுபோன்ற மால்வேர்கள் காணப்படுவதாக பாதுகாப்பு நிறுவனமான மால்வேர்பைட்ஸ் எச்சரித்தது. யுஎம்எக்ஸ் யு 686 சிஎல் என்று பெயரிடப்பட்ட அந்த திறன்பேசி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அமெரிக்க அரசின் சார்பாக விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர் ரியான் ஜான்சன் 70 கோடிக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு திறன்பேசிகளில் இதுபோன்ற மால்வேர் நிறுவப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். இதற்கு திறன்பேசி செயலிகளை உருவாக்குபவர்களே காரணமென்று அப்போது கூகுள் குற்றம்சாட்டியது.