வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (19:13 IST)

'பறையா' என குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேளுங்கள்: மலேசிய பிரதமர் மீது போலீஸ் புகார்!

மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பயன்படுத்திய ஒரு வார்த்தையால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வார்த்தையைக் குறிப்பிட்டதற்காக பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துள்ளது.

'பறையா' என்பதே மகாதீர் பயன்படுத்திய வார்த்தை.

இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அவர் இழிவுபடுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது அவர் பறையர் என்று குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.

அதேசமயம் மகாதீர் குறிப்பிட்ட ஒரு பிரிவினரைச் சுட்டிக்காட்டி இவ்வாறு பேசவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு

மலேசியாவின் பஹாங் தொகுதியில் இயங்கி வருகிறது லினாஸ் நிறுவனம் (Lynas Corporation). இங்கு உற்பத்தியாகும் பொருட்களால் உருவாகும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து இந்நிறுவனத்தை மூட வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்நிறுவனத்தின் கழிவுகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார் பிரதமர் மகாதீர்.

இதையும் மீறி லினாஸ் நிறுவனத்தை மூட வேண்டும் என்று அதன் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துவது மலேசியாவுக்கான முதலீடுகளைப் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

'பறையாஎன்று குறிப்பிட்ட பிரதமர் மகாதீர்

இந்நிலையில் கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அத்தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் பிரதமர் மகாதீர்.

"இது ஒரு பெரிய முதலீடு. 1.7 பில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பு கொண்டது. 700 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும். மிகத் தரமான, அதிகமான ஊதியம் அளிக்கக் கூடிய வேலை.

"நமது முதலீடுகளுக்கு இது மிக அவசியம். ஆனால் நாம் லினாஸ் நிறுவனத்தை 'பறையா'க்கள் போல் நடத்தி, இந்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வோமேயானால், பின்னர் மலேசியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று மற்றவர்களை அழைக்க இயலாது," என்று மகாதீர் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மகாதீர் பயன்படுத்திய 'பறையா' என்ற அந்த வார்த்தை இந்தியர்கள் மத்தியில் வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

மகாதீருக்கு எதிராக நால்வர் காவல்துறையில் புகார்

இதன் எதிரொலியாக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சிலர் மகாதீருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

காப்பார் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் உள்ளிட்ட நால்வர் அளித்துள்ள புகார் மனுவில், பிரதமர் பயன்படுத்திய வார்த்தையானது இந்திய சமூதாயத்தினரின் மனதைக் காயப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மகாதீர் தனது செயல்பாட்டுக்காக வெளிப்படையாக அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் நால்வரும் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக மலேசிய காவல்துறை தலைவரும், உள்துறை அமைச்சும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.

"பிரதமர் மகாதீர் இத்தகைய ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கக் கூடாது. ஏனெனில் அவருக்கு இந்த வார்த்தைக்கான அர்த்தம் நன்கு தெரியும். அவரே இவ்வாறு செய்தால் மற்ற குழுக்களும் அதைப் பின்பற்றக் கூடும்.

"இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதன் மூலம் மலேசியாவில் சாதி அமைப்பு பின்பற்றப்பட்டதாக அர்த்தமாகிறது. மலேசியர்கள் சாதிகளற்ற சமுதாயத்தையே விரும்புகின்றனர்," என்றார் மணிவண்ணன்.

ஆங்கில அகராதியில் இருப்பது என்ன?

இந்நிலையில் பிரதமர் மகாதீர் தமிழ்ச் சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை தொடர்புபடுத்தி 'பறையா' என்று குறிப்பிடவில்லை என்றும் ஒரு தரப்பு தெரிவிக்கிறது.

ஆங்கில அகராதிகளில் இந்த வார்த்தைக்கு, ஒதுக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது. மாறாக, தமிழ்ச் சமூகத்தில் உள்ள சாதி ரீதியிலான வேறுபாட்டை அடையாளப்படுத்தி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே மலேசியப் பிரதமர் பொதுப்படையாக பயன்படுத்திய வார்த்தைக்கு தவறான அர்த்தத்தை கற்பிக்கக் கூடாது என்பதும் இத்தரப்பின் வாதமாக உள்ளது.

முன்பே சர்ச்சைக்கு வித்திட்ட வார்த்தை

கடந்த 2011ஆம் ஆண்டு மலேசியாவில் இன்டர்லோக் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. அதிலும், பறையா என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அச்சமயத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே வார்த்தையால் சர்ச்சை வெடித்துள்ளது.

இம்முறை நாட்டின் பிரதமரே அந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.