ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்காக சாலையை சரிசெய்யச் சொன்ன மதுரை உதவி ஆணையர் இடமாற்றம்!
மதுரையில் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகையை ஒட்டி சாலைகளைச் சரிசெய்து, தெரு விளக்குகளை சரிபார்க்கும்படி சுற்றறிக்கை வெளியிட்ட மாநகராட்சி உதவி ஆணையர், அவரது பணியிலிரு்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத் ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். குறிப்பாக சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இதையடுத்து மதுரை மாநகராட்சியின் பணியமைப்புப் பிரிவின் உதவி ஆணையர் சண்முகம் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில், மோகன் பகவத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு,அவர் கலந்துகொள்ளும் விழா நடக்கும் இடம் வரையிலான சாலைகளையும், தெரு விளக்குகளையும் சரிசெய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்தன. தி.மு.க. அரசு ஆர்.எஸ்.எஸிற்குப் பயப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
இது குறித்து மதுரை மாநகராட்சியின் ஆணையர் கா.ப. கார்த்திகேயனிடம் பிபிசி தொடர்பு கொண்டு கேட்டபோது, "இஸட் பிளஸ் பாதுகாப்பு உள்ளவர்கள் வருகைதரும்போது வழக்கமாகச் செய்யும் ஏற்பாடுகள்தான் இவை. ஆனால், சுற்றறிக்கையில் அந்த உதவி ஆணையர் இதையெல்லாம் விரிவாக எழுதிவிட்டார். மற்றபடி, விசேஷமாக எதுவும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
இதற்குச் சிறிது நேரத்திலேயே மாநகராட்சியின் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், "இஸட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும்போது அது தொடர்பான விதிகளின்படி பாதுகாப்புக் காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின்படியிலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்புப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
வழக்கமான நிர்வாக நடைமுறைகளின்படி உயர் அலுவலர்களின் அனுமதியைப் பெறாமல் தன்னிச்சையாக, தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படும்படி சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டிருந்தது.
இதற்குச் சிறிது நேரம் கழித்து, மதுரை மாநகராட்சி வெளியிட்ட உத்தரவில், உதவி ஆணையரான சண்முகம் 21ஆம் தேதி பிற்பகலிலேயே மதுரை மாநகராட்சிப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.