புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:22 IST)

கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னிலை வகிக்கும் இஸ்ரேல் - என்ன செய்கிறது இந்தியா?

இஸ்ரேல் அரசு ஒரு மில்லியன் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திவிட்டது. உலகில் மற்ற எந்த நாடும் இந்த அளவுக்கு அதிகமாக தங்களின் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவில்லை.
 
இஸ்ரேலில் 100 பேரில் 11.55 பேர் என்ற விகிதத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பஹ்ரைனில் 3.47, பிரிட்டனில் 1.47 என்ற விகிதத்தில் கொரோனா தடுப்பு மருந்தை வழங்கியிருப்பதாக உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கலை பின்தொடரும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் வலைதளம் ஒன்று தெரிவிக்கிறது.
 
பிரான்ஸ், 2020 டிசம்பர் 30ஆம் தேதி வரை 138 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பு மருந்தை வழங்கியிருக்கிறது.
 
உலக அளவில் மொத்தமாக 1.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த கொரோனா வைரஸால் இறந்திருக்கிறார்கள்.
 
உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி வழங்கும் தரவுகளை 'அவர் வேர்ல்ட் இன் டேட்டா' என்கிற அமைப்பு ஒருங்கிணைத்திருக்கிறது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஒரு கல்வித் தொண்டு அமைப்பு இணைந்து நடத்துவது தான் இந்த 'அவர் வோர்ல்ட் இன் டேட்டா'.
 
எத்தனை மக்கள் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றிருக்கிறார்கள் என இந்த அமைப்பு கணக்கிடுகிறது. இப்போது வரை கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள், ஒரு வார காலத்துக்கு மேற்பட்ட இடைவெளியுடன், இரு டோஸ்கள் வழங்கப்பட வேண்டியதாக இருக்கின்றன.
 
அமெரிக்கா 2020-ம் ஆண்டுக்குள் 20 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, வெறும் 2.78 மில்லியன் மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியை வழங்கியிருக்கிறது.
 
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை வழங்குவதற்கு தாமதமாகும் போது, எத்தனை மக்களுக்கு முதல் டோஸ் மருந்தைக் கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு கொடுக்கலாம் என்கிற பிரிட்டனின் திட்டத்தைத்தான் ஏற்கவில்லை என அமெரிக்காவின் தொற்றுநோயியல் நிபுணர் அந்தோனி ஃபாசி கூறியுள்ளார். அமெரிக்கா அதே திட்டத்தைப் பின்பற்றாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியா ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் & ஐ.சி.எம்.ஆர் அமைப்பு இணைந்து உருவாக்கிய கோவேக்சின் தடுப்பு மருந்துக்கு, அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
 
இன்னும் இரண்டு தடுப்பூசிகள் அனுமதிக்காக காத்திருக்கின்றன. 2021ஆம் ஆண்டின் மத்திக்குள், இந்தியா 300 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதோடு தடுப்பூசியை வழங்க, சோதனை ஓட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது இந்தியா.
 
எப்படி இஸ்ரேல் இத்தனை பேருக்கு தடுப்பூசி வழங்கியது?
கடந்த டிசம்பர் 19ஆம் தேதியே தமது நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியை இஸ்ரேல் தொடங்கிவிட்டது. நாளொன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி என 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார பணியாளர்கள், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசியை இஸ்ரேல் போட்டு வருகிறது.
 
கொரோனா பெருந்தொற்று காலத்தின் தொடக்கத்திலேயே ஃபைசர் - பயோஎன் டெக் நிறுவனத்தின் தடுப்பூசி தங்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்து கொண்டது இஸ்ரேல்.
 
இஸ்ரேலில் எல்லா குடிமக்களும் சுகாதார சேவை வழங்கும் அமைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது சட்டம். தற்போது இஸ்ரேல் தங்களின் சுகாதார சேவை அமைப்பின் மூலம், கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கும் மக்களை தொடர்பு கொள்கிறது.
 
-70 டிகிரி செல்சியஸில் சேமித்து வைக்கப்பட வேண்டிய ஃபைசர் தடுப்பூசியை, இஸ்ரேல் வெற்றிகரமாக குறைவான எண்ணிக்கையில் மக்கள் வசிக்கும் இடங்களுக்குக் கூட கொண்டு செல்லும் பணியில் வெற்றி கண்டுவிட்டது. இதை இஸ்ரேலின் சுகாதார அமைச்சர் யுலி எடெல்ஸ்டைன் ஒய் நெட் டிவி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
 
வரும் பிப்ரவரி மாதத்துக்குள், இஸ்ரேல் கொரோனாவிலிருந்து மீண்டுவிடும் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கணித்திருக்கிறார். தற்போது இஸ்ரேல் மூன்றாவது தேசிய ஊரடங்கில் இருக்கிறது.
 
ஏன் பிரான்ஸ் பின் தங்கிவிட்டது?
ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி தொடங்கியது தடுப்பூசிப் பிரச்சாரம். அடுத்த மூன்று நாட்களில் பிரான்ஸ் 100க்கும் மேற்பட்ட சிலருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியை வழங்கியது. ஜெர்மனியோ கடந்த சனிக்கிழமைக்குள் 1.9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டது.
 
கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவதில், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உடன் ஒப்பிடும் போது, ஐரோப்பிய ஒன்றியம் தாமதப்படுத்திவிட்டது. பைசர் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தான் ஐரோப்பிய மருந்து முகமை அனுமதியளித்தது. ஆனால் பிரிட்டன் டிசம்பர் 2-ம் தேதியும், அமெரிக்கா டிசம்பர் 11ஆம் தேதியும் அனுமதி வழங்கின.
 
பிரான்ஸில் கொரோனா தடுப்பு மருந்து குறித்து மக்களுக்கு ஒரு வித சந்தேகம் நிலவி வருகிறது. 'இப்சாஸ் குளோபல் அட்வைசர்' என்கிற அமைப்பு 15 நாட்டு மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பிரான்ஸ் மக்களில், 40% பேர் மட்டுமே கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறியிருக்கிறார்கள்.
 
சீனாவில் 80%, பிரிட்டனில் 77%, அமெரிக்காவில் 69% மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
 
பிரெஞ்சு அதிகாரிகள் முதலில் கொரோனா தடுப்பூசியை பராமரிப்பு இல்லங்களில் இருக்கும் வயதானவர்களுக்கு முதலில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக, தடுப்பு மருந்து தாமதமாக வழங்கப்படுவதற்கு, இந்த வார தொடக்கத்தில் பிரான்ஸின் சுகாதார அமைச்சர் பதில் கூறினார்.
 
"நியாயப்படுத்த முடியாத, சரியான காரணங்கள் இல்லாத தாமதத்தை நான் அனுமதிக்கமாட்டேன்" என கடந்த வியாழக்கைழமை பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோங் கூறினார்.
 
இந்தியா என்ன செய்கிறது?
நாடு முழுக்க கொரோனா தடுப்பூசியை வழங்கும் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டு வருகிறது இந்தியா. இந்த ஆண்டின் ஜூன் - ஜூலை மாதத்துக்குள் 300 மில்லியன் பேருக்கு தடுப்பூசியை வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
 
10 மில்லியன் சுகாதார பணியாளர்கள் மற்றும் 20 மில்லியன் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என இந்தியாவின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
 
தற்போதைக்கு அரசு குழு பரிந்துரைத்திருக்கும் ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனிகா நிறுவனங்களின் தடுப்பூசியைதான் அதிகாரிகள் சார்ந்திருப்பார்கள். ஃபைசர் தடுப்பு மருந்து போல, ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்தை மிகக் குறைந்த வெப்ப நிலையில் சேமித்து வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. எனவே அதிக மருத்துவ வசதிகள் இல்லாத பகுதிகளுக்குக் கூட இந்த ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்தை விநியோகிக்க ஏற்றதாக இருக்கிறது.
 
ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்தை இந்தியாவில் கோவிஷீல்ட் என்றழைக்கிறார்கள். இந்தியாவில் சீரம் இன்ஸ்டிட்யூட் தான் அம்மருந்தைத் தயாரிக்கிறது. பாரத் பயோடெக் உருவாக்கிய கோவேக்சின் மருந்துக்கும் அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் சுமாராக 1.5 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள், கிட்டத்தட்ட 10.2 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.