புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:48 IST)

உடல் நலத்துக்கு நல்லது காஃபியா டீயா? மிகப் பழைய விவாதத்துக்கு புதிய தகவல்கள்!

ஊரெல்லாம் மழை ஊற்றிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பான வீடும், நிரந்தர வருவாயும், நல்ல உடையும் இருப்பவர்களுக்கு மழை இனிது. இப்படிப்பட்ட பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு, மழை நேரத்தில் ஒரு கோப்பை தேனீரோ, காஃபியோ அந்த இனிமையை இரட்டிப்பாக்கும்.
 
என்ன உங்கள் கோப்பையை ஏந்திவிட்டீர்கள்தானே? இனிமையை வழங்கும் இந்த காபியோ, டீயோ உடலுக்கு என்ன நன்மைகளை, தீமைகளை செய்கின்றன தெரியுமா? உங்கள் கோப்பையை உறிஞ்சிக்கொண்டே இதைப் படியுங்கள்.
ஆசிய நாடுகளில் டீயும், பிரிட்டனைத் தவிர்த்த பிற ஐரோப்பிய நாடுகளில் காஃபியும் ஆதிக்கம் செலுத்துவதாக ப்யூ ஆய்வு ஒன்று கூறுகிறது.எந்த அடிப்படையில் மக்கள் காபியையோ டீயையோ தேர்வு செய்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதை விட அது உடலுக்கு நல்லது என்றோ, குறைந்த அளவு தீங்கு விளைவிக்கக் கூடியதோ என்றோ அவர்கள் நம்புகிறார்கள். மன நிறைவு கிடைப்பதற்கு ஒன்றை விட மற்றொன்று சிறப்பாக இருக்கிறது என்று சிலர் கருதுகிறார்கள். வேறு பலருக்கு சுவையும் மணமும் காரணமாக இருக்கும். இப்படி தனிப்பட்ட விருப்பத்தைத் தவிர தேநீரையோ காஃபியையோ தேர்வு தேர்வு செய்வதற்கு ஏதேனும் "ஆரோக்கியமான" காரணம் இருக்கிறதா என்று பார்ப்போம்.
 
விழிப்பாக வைப்பது எது?
டீ அல்லது காஃபியில் உள்ள காஃபீன் அளவு, அதன் திடம், வகை மற்றும் பக்குவப்படுத்தும் முறை ஆகியவற்றால் மாறுபடுகிறது. ஆயினும் டீயை விட காஃபியில்தான் அதிக காஃபீன் இருக்கிறது. காஃபீன் அதிகமாக எடுத்துக் கொண்டால், விழிப்பாக இருக்க முடியும் என்று பலரும் ஓர் ஊகத்தின் அடிப்படையில் நம்புகிறார்கள்.
இதனால் விழிப்பாக இருக்க வைப்பதில் காஃபி வென்று விடுகிறது. அதற்காக காஃபி பிரியர்கள் இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட வேண்டாம். ஏனென்றால், இப்படி எளிதாக முடிவு செய்து விட முடியாது, வேறு சிலவற்றையும் கவனிக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 
பொதுவாக ஒரு கோப்பை காஃபியில் உள்ள மிதமான அளவு (40-300mg) காஃபீன், விழிப்புணர்வு, கவனம், எதிர்வினையாற்றும் நேரம் ஆகியவற்றை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுப்பதில் குறைவான தொடர் விளைவுகளையே காஃபி கொண்டிருக்கிறது.
 
ஒரு கோப்பை தேநீரில் உள்ள காஃபீனின் பண்புகள், எல் தியானைன் என்ற அமினோ அமிலத்தால் மேம்படுத்தப்படுகின்றன என்பதற்கு சான்றுகள் உள்ளன. "கவனத்தை மாற்றுதல், கவனச்சிதறல் ஆகியவற்றைக் குறைக்கும் வகையில் எல் தியானைன் காஃபினுடனுடன் இணைந்து செயல்படுகிறது" என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அதிக விழிப்புடன் இருப்பது நாங்கள்தான் என தேநீர் குடிப்பவர்கள் நினைத்தால், அது சரியாக இருக்லாம். ஆனால் இதற்காக தேநீர் குடிப்பவர்களும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளக்கூடாது.
 
இந்த கூடுதல் விழிப்புணர்வுக்கு நமது உடல் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. 5-6 மணி நேரத்திற்குப் பிறகு, நீங்கள் குடித்த காஃபீனில் பாதி அளவு உங்கள் உடலிலேயே தேங்கியிருக்கும். 10-12 மணி நேரத்திற்குப் பிறகு, அதில் கால் பகுதி இன்னும் இருக்கலாம் என்று தூக்கம் தொடர்பான ஆராய்ச்சியாளர் மாட் வாக்கர் கூறுகிறார்.
இதன் பொருள் என்னெ? நீங்கள் தூங்கத் தொடங்குவதில் அல்லது ஆழமாகத் தூங்குவதில் டீயினால் சிக்கல் ஏற்படலாம். காஃபீன் உங்கள் ஆழ்ந்த உறக்கத்தின் அளவைக் குறைக்கும் என்கிறார் வாக்கர். "நீங்கள் மறுநாள் காலையில் எழுந்திருக்க முடியும், புத்துணர்ச்சியுடன் உணர முடியாது"
 
"நாள் முழுவதும் தேநீர் குடிப்பது காஃபீன் அளவுகள் குறைவாக இருந்தாலும், காஃபிக்கு ஒத்த விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் தூக்கத்தை குலைக்கும் வாய்ப்பு குறைவு" என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
 
எப்படியிருந்தாலும், நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் காஃபீன் அதிகமாக இருக்கும் பானங்களை குடிப்பது நல்லது அல்ல.
 
மன அமைதிக்கு எது சிறந்தது?
சுறுசுறுப்பாக இருப்பதைக் காட்டிலும் சிலர் ஓய்வுக்காகவும் சூடான பானத்தை குடிக்கிறார்கள்.
 
யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசிஎல்) நடத்திய ஓர் ஆய்வில்,பிளாக் டீ எனப்படும் பால் இல்லாத தேநீர் குடிப்பது "வாழ்க்கையில் அன்றாட மன அழுத்தங்களில் இருந்து விரைவாக மீள உதவும்" என்று தெரியவந்ததாக பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத் துறையின் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ கூறுகிறார். ஆனால், "மன அழுத்தத்தில் இருந்து விடபடவும் ஆசுவாசம் அடைவதற்கும் தேநீரில் உள்ள என்ன பொருட்கள் காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறுகிறார்.
 
குறைந்த காஃபீன் கொண்ட கிரீன் டீ சிலருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும் தெரியவந்திருக்கிறது.
 
மன அழுத்தம் மீது காஃபி ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து குறைவான ஆய்வுகளே நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அதிக அளவு காஃபீன் மனப் பதற்றத்துக்கு காரணமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
"அதிகமாக காஃபீன் குடிப்பதால் நீங்கள் இயல்பை விட அதிகமாக பதற்றமடையலாம்" என்கிறது பிரிட்டனின் சுகாதாரத் துறை.
 
பற்களில் கறையை ஏற்படுத்துவது எது?
காஃபியும் தேநீரும் பற்களைக் கறையாக்குகின்றன. ஆனால் காஃபியை விட தேநீர் பற்களை அதிகம் கறைப்படுத்துகிறது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. பல் சிகிச்சை நிபுணரான அன்னா மிடில்டன் இந்த பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்:
 
தேநீர் மற்றும் காஃபியில் பால் அல்லது பாலுக்கான மாற்றுப் பொருளைச் சேர்க்கவும்
தேநீர் அல்லது காஃபி குடித்த பிறகு தண்ணீர் அல்லது ஃப்ளூரைடு கலந்த மவுத்வாஷ் மூலம் வாய் கொப்பளிக்கவும்.
குளிர்ந்த தேநீர் அல்லது காஃபி குடிக்கும் போது, ஸ்ட்ராவை பயன்படுத்தவும்
மின்சார பிரஷ்ஷை பயன்படுத்தவும்
பற்களுக்கு இடையில் பல்லிடை ஃபிரஷ்கள் அல்லது ஃப்ளோஸ் மூலம் சுத்தம் செய்யவும்
ஆரோக்கியத்துக்கு எது சிறந்தது? காஃபியா, டீயா?
 
பிரிட்டன் சுகாதாரத் துறையின் அறிவுரையின்படி, சீரான உணவின் ஒரு பகுதியாக தேனீர் மற்றும் காஃபி குடிப்பது நல்லது. இருப்பினும், சில ஆராய்ச்சிகள் காஃபீன் கொண்ட பானங்கள் உடலில் சிறுநீரை விரைவாக உற்பத்தி செய்ய வைப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றன.
 
தேநீர் மற்றும் காஃபி இரண்டிலும் பாலிபினால்கள் உள்ளன. அவை "நம் ஆரோக்கியத்திற்கு நல்லது" என்று உணவியல் நிபுணர் சோஃபி மெட்லின் கூறுகிறார். காஃபியில் தேநீரைக் காட்டிலும் அதிகமான பாலிபினால்கள் உள்ளன. அவை ஒரே மாதிரியானவை அல்ல என ஒரு ஆய்வு கூறுகிறது. டைப்-2 நீரிழிவு நோய்க்கான வாய்ப்பைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இரண்டு பானங்களிலும் உள்ளன. ஆனால் ஒரு நாளைக்கு நான்கு கோப்பை காஃபிக்கு மேல் குடிப்பது உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என பிரிட்டனின் NHS கூறுகிறது.
 
சிலருக்கு காஃபீன் ஒத்துக் கொள்ளாது. மேலும் சிலருக்கு செரிமான பிரச்சனைகள், பதற்றம் அல்லது தூக்கமின்மை போன்ற ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படலாம். அவர்கள் காஃபிக்கு பதிலாக தேநீரை தேர்வு செய்யலாம்.
 
காஃபினைக் குறைக்க நீங்கள் முடிவு செய்தால், அதைப் படிப்படியாகவே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விலகல் நோய்க்குறிகள் தோன்றக் கூடும். நீங்கள் எவ்வளவு காஃபீன் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கிறது. தேநீர் குடிப்பவர்களைவிட காஃபி குடிப்பவர்களுக்கு கூடுதல் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள் என்று கூறலாம். ஆயினும் அது எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.
 
கர்ப்பிணிகள் "காஃபீன் இருக்கும் பானங்களைக் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காஃபீன் உள்ள பானங்கள் கொடுக்கக் கூடாது என என்.எச்.எஸ். கூறுகிறது.