திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 23 மே 2022 (13:03 IST)

இரான் ராணுவ உயரதிகாரி சுட்டுக் கொலை

இரானில் அதிகாரம் மிக்க இரான் புரட்சிகர பாதுகாப்புப் படையை சேர்ந்த கர்னல் நிலையிலான அதிகாரி ஒருவர் தெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Iran

சயாத் கொதாய் என்ற அந்த அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றனர். சயாத் கொதாய் காரில் இருந்தபோதே அவர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவரது வீட்டுக்கு வெளியிலேயே இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இதுவரை இந்த செயலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சுட்டுவிட்டுத் தப்பியவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. 2020ம் ஆண்டு அந்நாட்டின் முன்னணி அணுக்கரு விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டில் நடந்த பெரிய அதிர்ச்சிகரமான படுகொலை இது.

தனது காரில் சீட் பெல்ட் அணிந்த நிலையில், ரத்தம் தோய்ந்த மனிதர் இறந்துகிடக்கும் காட்சியைக் காட்டும் படங்கள் சம்பவ இடத்தில் இருந்து வருகின்றன என்று கூறும் பிபிசி மத்திய கிழக்குப் பிரிவு ஆசிரியர் செபாஸ்டியன் உஷர், கர்னல் கொதாய் இரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் ரகசியப் பிரிவான குத்ஸ் படையில் மூத்த அதிகாரி என்றும், இந்தப் படை வெளிநாடுகளில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் படை பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதாகவும், மத்தியக் கிழக்கு நெடுகிலும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தப் படையே பொறுப்பு என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. "உலக அளவிலான அடாவடியில் ஈடுபடும் பயங்கரவாத முகவர்களான இரானின் பரம எதிரிகள்" கர்னல் சயாத் கொதாயை கொன்றிருப்பதாக இரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் கதீப்சாதே கூறியுள்ளார்.

அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையுமே அவர் இப்படி மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் பிற நாடுகள் வருந்தத்தக்க விஷயத்தில் அமைதிகாப்பதாகவும், இதை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.