1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (14:59 IST)

அமெரிக்கா - இரான் மோதல்: பொம்மைக் கப்பலை நடுக்கடலில் தாக்கி இரான் பயிற்சி

ஹோர்மூஸ் நீரிணையில் இரான் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போது அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்களில் மாதிரிகள் தாக்கப்பட்டன.
 
இரான் பாதுகாப்பு படைகள் நடுக்கடலில் மேற்கொண்ட பயிற்சியின் போது மிகவும் அதிகமான அளவில் ஆயுதப் பயன்பாடு இருந்ததால் வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் தனது ராணுவத் தளங்களுக்கு அமெரிக்கா தற்காலிகமாக எச்சரிக்கை ஒன்றை அனுப்பியது.
 
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் இருக்கும் அமெரிக்க படைகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது என்று இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கை தங்களை அச்சுறுத்தும் தூண்டிவிடவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அமெரிக்க கடற்படை, இது 'இரானின் பொறுப்பற்ற செயல்' என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
 
அரபு நாடுகளை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த பாதுகாப்பு பயிற்சி நிகழ்ந்துள்ளது. 'ப்ராப்பெட் முகமது 14' (பதினான்காம் இறைத்தூதர் முகமது) என்று பெயரிடப்பட்ட இந்த ஆயுதப்பயிற்சி இரானின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
 
இந்தப் பயிற்சியின் போது அரபு நாடுகளை ஒட்டியுள்ள கடற்பகுதியில் அமெரிக்கா வழக்கமாக பயன்படுத்தும் விமானம் தாங்கி கப்பல் ஒன்றின் மாதிரி பயன்படுத்தப்பட்டது. அதன்மீது ஜெட் போர் விமானங்களில் உருவங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
 
பின்னர் அந்த மாதிரி விமானம் தாங்கி கப்பல் மற்றும் விமானங்கள் பல்வேறு திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டன.இரான் பாதுகாப்பு படை களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வானில் இருந்தபடியே இந்த போலியான போர்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது.
 
வான் மற்றும் கப்பல் படைகள் நடத்திய தாக்குதல்கள் இந்த பயிற்சியின்போது காட்டப்பட்டன என்றுதான் புரட்சிகர ராணுவத்தின் கமாண்டர் மேஜர் ஜெனரல் ஹுசேன் சலாமி இரான் அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
 
கடல் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான கடல் பயணம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான கூட்டு நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்க கடற்படை இந்த பிராந்தியத்தில் பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம்; ஆனால் நம்மை தூண்டிவிடவும் அச்சுறுத்தவும் இத்தகைய பயிற்சிகளை இரான் செய்கிறது," என்று அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் செய்தித் தொடர்பாளர் ரிபெக்கா ரெபாரிக் தெரிவித்துள்ளார்.