1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (13:00 IST)

இந்தியாவின் 'ஜுராசிக் பார்க்': டைனோசர் முட்டைகளை சிவலிங்கமாகக் கருதி வழிபடும் கிராமம்

BBC
மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில், நிலத்தில் சுற்றித் திரிந்த ராட்சத உயிரினங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தவிர, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்களின் படிமங்கள் சிதறிக் கிடக்கின்றன.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் சூழல் சுற்றுலா வாரியத்தின்(eco tourism board) முயற்சியால், நாடு முழுவதும் உள்ள பிரபல விஞ்ஞானிகள் இங்கு வந்தனர். மேலும் அவர்கள் முழு பகுதியையும் ஆய்வு செய்த பின்னர் தங்கள் அறிக்கையை தயாரித்துள்ளனர்.

பாக் மற்றும் தார் பகுதிகளுக்கு 'ஈகோ ஹெரிடேஜ்' அந்தஸ்து கிடைக்க வகைசெய்யும் பொருட்டு இந்த அறிக்கை தொகுக்கப்பட்டு யுனெஸ்கோவிற்கு அனுப்பப்படும்.

இதனால் இந்த பகுதியின் பாரம்பரியம் காக்கப்படுவதோடு கூடவே ஆராய்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று 'சூழல் சுற்றுலா' வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சமிதா ரஜோரா பிபிசியிடம் தெரிவித்தார்.

டைனோசர்கள், பூமியில் உலாவிய அந்த காலகட்டத்தில் பூமியில் மற்றும் பூமிக்கு கீழே என்ன நடந்தது என்பதற்கான சான்றுகள் ஒரு பெரிய பரப்பளவில் சிதறிக்கிடக்கின்றன என்று புவி அறிவியல் சங்கத்தின் அறிக்கை கூறுகிறது.

வெவ்வேறு வகையான டைனோசர்கள் வெவ்வேறு காலங்களில் பிறந்து பின்னர் அழிந்தன என்று புவியியலாளர்கள் மற்றும் புவி அறிவியலுடன் தொடர்புடைய வல்லுநர்கள் நம்புகிறார்கள். இந்த பகுதியில் டைனோசர்கள் மட்டுமல்ல, அதைவிட பெரிய 'டைட்டானோசரஸ்'களும் புதைபடிம வடிவில் காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

சில சமயங்களில் கடுமையான நிலநடுக்கத்தால் பூமி அழிந்தது. சில சமயங்களில் எரிமலைகள் வெடித்துச் சிதறியதும் அதன் அழிவுக்குக் காரணமாக அமைந்தது என்று தார் பகுதியில் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பின்னர் கடல் நீர் பூமிக்கு வந்தது. மீண்டும் பூமி அழிந்து பல உயிரினங்கள் அழிந்துபோயின.

" கடுமையான எரிமலை வெடிப்பில் இருந்து வெளியேறிய எரிமலைக் குழம்பு காரணமாக டெக்கான் பீடபூமியின் பாறைத்தொடர் உருவாகியுள்ளது. நிலநடுக்கங்கள், சில சமயங்களில் எரிமலைகள் மற்றும் சில சமயங்களில் கடல் நீர் பூமியில் உயிர்களை அழித்துவிட்டது. அதற்கான சான்றுகள் தார் பகுதியின் நிலப்பரப்பு மற்றும் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஒவ்வொரு அழிவுக்குப் பிறகும் பூமியில் வாழ்க்கை தொடர்ந்து தொடங்கியது,” என்று டெல்லி பல்கலைகழகத்தின் பழங்காலவியல் (புதைபடிம ஆய்வுகள்) துறையின் பேராசிரியர் குண்டுபள்ளி வி. பிரசாத், பிபிசியிடம் தெரிவித்தார்.

தார் தவிர அதன் சான்றுகள் நர்மதா பள்ளத்தாக்கின் கரையில் இருப்பதாக பிரசாத் கூறுகிறார். டைனோசர்கள் உட்பட அழிந்துபோன பல உயிரினங்களின் புதைபடிவங்கள் நர்மதா பள்ளத்தாக்கின் ஆயிரம் கிலோமீட்டர் சுற்றளவில் பரவியிருப்பதாக அவர் கூறுகிறார்.

மத்திய பிரதேசத்தில் கடல் இருந்ததா?

எல்லா வகை டைனோசர்களும் இந்த பூமியில் இரண்டு முதல் மூன்று லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தன என்பது இதுவரை உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அந்தக் காலத்தில் மற்ற உயிரினங்களும் இருந்தன. டைனோசர்களுடன் கூடவே இந்த உயிரினங்களின் புதைபடிமங்களும் மத்திய பிரதேசத்தின் இந்தப் பகுதியில் இருக்கின்றன. பல கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இந்தப் பகுதி ஒரு காலத்தில் ஆழ்கடலின் ஒரு பகுதியாக இருந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.

இங்குள்ள தார் மாவட்டத்தில் 300 முட்டைகளின் புதைபடிமங்களும், பல்வேறு வகையான டைனோசர்களின் 30 கூடுகளும் நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த பகுதியில் விஞ்ஞானிகள் திட்டமிட்ட அகழ்வாராய்ச்சிப்பணிகளை செய்ததில்லை.
BBC

பூமியின் மேற்பரப்பில் மட்டுமே காணப்படுபவை கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களைத் தருவதாக தார் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் நம்புகின்றனர். முறையாக ஆராய்ச்சி செய்தால் பூமி பற்றிய இன்னும் பல ரகசியங்கள் வெளிவரக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தார் பகுதியில் தங்கள் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது ஆடு மாடு மேய்ப்பர்களால் இந்த புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

உருண்டை கற்கள் என்ன?

மஹ்தாப் மாண்ட்லோய், தார் பகுதியில் வசிக்கிறார். அங்கு பெரும்பாலான புதைபடிமங்கள் தரையில் காணப்படுகின்றன. நாங்கள் அவருடைய கிராமத்தை அடைந்தோம். உரையாடலின் போது அவர் சொன்னது மிகவும் சுவாரசியமாக இருந்தது.

"கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச்செல்கிறார்கள். என்னைப் பற்றி பேசினால், டைனோசர் முட்டைகளை நான் முதலில் கண்டுபிடித்தேன். அதை இங்கு ஆராய்ச்சி செய்யும் விஷால் சாரிடம் கொடுத்தேன்.

இப்படிப்பட்ட முட்டைகளோ, பற்களோ கிடைத்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று அவர் என்னிடமும் மற்றவர்களிடமும் சொன்னார். எனக்கு அறிவு இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆரம்பத்தில் கல்லில் பதிக்கப்பட்டிருந்த பெரிய முட்டை எனக்குத்தான் கிடைத்தது. பிறகு நான் மேலும் தேட ஆரம்பித்தேன்.

எனக்கு ஒரு பல்லும் கிடைத்தது. அதை விஷால் சாரிடம் கொடுத்தபோது, ​​அது நீர்வாழ் உயிரினத்தின் பல்லின் படிமம் அதாவது சுறாவின் பல்லின் படிமம் என்று சொன்னார். அதன் பிறகு டைனோசரின் பல் கிடைத்தது,” என்று அவர் கூறினார்.

தாரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் மக்களுக்கு பலபோதும் பெரிய உருண்டை கற்கள் கிடைத்து வந்துள்ளன. ஆனால் ஆனால் அவற்றின் முக்கியத்துவம் யாருக்கும் தெரியாது.

பாக் பகுதியில் வாழும் நுக்தா பாயையும் நாங்கள் சந்தித்தோம். ”குழந்தைகள் எப்போதும் பெரிய உருண்டையான கற்களை எடுத்துக்கொண்டுவந்து விளையாடுவார்கள். இது சாதாரணமாக நடக்கும் விஷயம்," என்று அவர் கூறுகிறார்.

இப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இந்த உருண்டைக் கற்களை வணங்கும் பாரம்பரியத்தை ஆரம்பித்தனர். ஆனால் இந்த விஷயம் கடத்தல்காரர்களின் காதுகளை எட்டியது. ஆராய்ச்சியாளர்கள் அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்குமுன் இந்த பகுதியின் பல புதைபடிமங்கள் கடத்தல்காரர்களின் கைகளுக்கு சென்றுவிட்டன.

வெஸ்தா மண்ட்லோயின் ஒரு கடையும் அங்கு உள்ளது. இப்போது அவர் இந்தப் பகுதியில் புதைபடிமங்களை பாதுகாக்கும் பணியையும் செய்கிறார். வெளியில் இருந்து பலர் இந்த பகுதிக்கு வரத் தொடங்கினர். மேலும் அந்த பெரிய உருண்டை வடிவ கற்களை வாங்கிக்கொள்வதாக கிராமவாசிகளுக்கு ஆசை காட்டினர். அவை உண்மையில் டைனோசர் முட்டைகள்.

“சிறிது காலம் கழித்து வெவ்வேறு இடங்களில் இருந்து ஆட்கள் வரத் தொடங்கினர். உருண்டை கற்கள் கிடைத்தால் எங்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்று சொல்வார்கள். இவர்கள் அதை எடுத்துச்செல்வதால் நாங்கள் பிரச்னையில் சிக்கிக்கொள்வோமோ என்று பயப்பட ஆரம்பித்தோம். எனக்கும் அதே விஷயம் நடந்தது. இந்த துண்டை என்னிடம் கொடுங்கள், நான் பணம் தருகிறேன் என்று ஒருவர் சொன்னார்,” என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கோல் தகடா என்றால் சிவலிங்கம்?

தார் மாவட்டத்தின் கிராமப் புறங்களில் டைனோசர் முட்டைகளை வணங்கும் பாரம்பரியம் இன்றும் பின்பற்றப்படுகிறது. பலர் இதை சிவலிங்கமாக கருதுகின்றனர்.

"எங்கள் முன்னோர்கள் இதை பலகாலமாக வணங்கி வருகின்றனர். நான் பிறப்பதற்கு முன்பில் இருந்தே இதன் பூஜை நடக்கிறது. கிராம மக்கள் இதை 'கோல் தகடா' என்று அழைக்கிறார்கள். ஆனால் அது ஒரு டைனோசர் முட்டை. அவர்கள் இதை சிவலிங்கமாக நினைத்து வயலின் மேட்டில் வைத்து வழிபடுகிறார்கள். அதன் பிறகு சோளப் பயிர் விளைந்ததும் சோளத்தை உண்கிறார்கள். அதுதான் எங்கள் முன்னோர்களின் வழக்கம்,” என்று வெஸ்தா மண்ட்லோய் கூறுகிறார்.

”இதுவரை எது தப்பிப் பிழைத்ததோ அதற்கான பெருமை ஒருவரை மட்டுமே சேரும். அவர்தான் உள்ளூர் ஆராய்ச்சியாளர் விக்ரம் வர்மா. அவரது முயற்சியால்தான் இந்த 'கோல் தகடா', கற்கள் அல்ல, விலைமதிப்பற்ற டைனோசர் முட்டை படிமங்கள் என்றும் மேற்பரப்பில் சிதறிக் கிடக்கும் பெரிய கற்கள் அல்லது பாறைகள், டைனோசர் கூடுகள் என்பதையும் கிராம மக்கள் அறிந்துகொண்டனர்,” என்று சமிதா ரஜோரா கூறுகிறார்.

டைனோசர் கூடுகளின் புதைபடிமங்கள் பாக் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் பல கிலோமீட்டர்கள் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. வெவ்வேறு கூடுகளில் இந்த முட்டைகளின் வெவ்வேறு எண்ணிக்கை உள்ளன. அவை வெவ்வேறு இனங்களுடைய கூடுகளின் புதைபடிமங்கள். விஞ்ஞானிகள் இவற்றை அடையாளம் கண்டுகொண்டபிறகு 'சூழல் சுற்றுலா' துறையினர், இவற்றை கடத்த முடியாத வகையில், அனைத்திலும் எண்களை எழுதி பட்டியலிட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் முயற்சி

சூழல் சுற்றுலா வாரியத்தின் முயற்சியால் பாக் பகுதியில் 'டைனோசர் புதைபடிம பூங்கா' கட்டப்பட்டுள்ளது. அதில் பல வகையான புதைபடிமங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள மாண்டுவில் டைனோசர் அருங்காட்சியகம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
BBC

'தங்கள் நிலம் மற்றும் காடுகளில் சிதறிக்கிடக்கும் புதையல் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதும், பூமியின் வரலாற்று ஆராய்ச்சிக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதும் இப்போதுதான் உள்ளூர் மக்களுக்கு தெரிய வந்துள்ளது,” என்கிறார் 'சூழல் சுற்றுலா வாரியத்தின்' தலைமை செயல் அதிகாரி சமிதா ரஜோரா.

'சூழல் சுற்றுலா வாரியம்' நாடு முழுவதும் உள்ள புவியியலாளர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களை தாருக்கு அழைத்துள்ளது.

இங்கு காணப்படும் மிகப்பெரிய கூட்டில் 12க்கும் மேற்பட்ட முட்டைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர்.

பூமியின் பல ரகசியங்களை தன்னுள் அடங்கிய அந்த தார் பாறைகளைப் பார்க்க நாங்கள் சென்றோம். பாறைகளின் ஒரு வகையை சுட்டிக் காட்டிய வர்மா, இவை பூமியிலிருந்து டைனோசர்கள் அழிந்து வரும் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறினார்.

"இந்தப் பாறைகள் டைனோசர்களின் 'கடைசி நடை' அல்லது அவை கடைசியாக நடந்ததை விவரிக்கின்றன." என்று அவர் கூறுகிறார்.

பின்னர் மேல் பாறைகளைச் சுட்டிக்காட்டிய அவர், ”இவை அனைத்தும் தக்காண எரிமலைகள் வெடித்தபோது வெளியே வந்த எரிபிழம்புக்கு அடியில் அவை புதைந்து அழிந்த காலத்தைச் சேர்ந்தவை,” என்று கூறுகிறார்.

"இந்த செயல்பாட்டில் டைனோசர்கள் அழிந்துவிட்டன. எனவே பூமியில் டைனோசர்களின் கடைசி இயக்கத்துடன் தொடர்புடைய இந்த தொடர் பாறைகள் சுமார் 6.5 கோடி ஆண்டுகள் பழமையானவை. மேலும் டைனோசர்களின் எச்சங்கள் அதில் உள்ளன, அவற்றில் சில முட்டைகளின் வடிவத்தில் உள்ளன. சில கூடுகள் மற்றும் எலும்புகளும் உள்ளன. தார் மாவட்டத்தில் காணப்படும் அடுக்கு அடக்கான கற்கள் பூமியின் தொடர் அழிவுக்கு சாட்சியமளிக்கின்றன."

பாக் மட்டுமல்ல, தார் மாவட்டத்தின் பல பகுதிகளை நாங்கள் நிபுணர்களுடன் பார்வையிட்டோம். அங்கு பூமி உருவாக்கி அழித்ததற்கான சான்றுகள் உள்ளன. 'பசால்ட்' கற்கள், கூழாங்கற்களாக மாறி, 'சுண்ணாம்பு' சிமெண்டாக மாறுவதால், அவற்றைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

அருகிலேயே உருவாகிவரும் சிமெண்ட் தொழிற்சாலைகள் காரணமாக 'சூழல் சுற்றுலா வாரியம்', மத்திய பிரதேச வனத்துறை மற்றும் நிபுணர்களின் கவலை அதிகரித்துள்ளது. இவையெல்லாம் அழிந்துபோய்விடுமோ என்பதே இந்தக் கவலைக்கு முக்கிய காரணம்.